/indian-express-tamil/media/media_files/2025/06/20/dpi-xy-2025-06-20-18-17-48.jpg)
தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்களின் (School Management Committee) குழு உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் விதிகளின்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒரு பள்ளி மேலாண்மை குழுவை (எஸ்.எம்.சி) உருவாக்க வேண்டும்.
பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் குழுவில் பெற்றோர்கள், பள்ளித் தலைவர், ஒரு ஆசிரியர் மற்றும் பெற்றோரில் ஒரு மகளிர் ஆகியோர் அடங்குவர். பள்ளிகள் மற்றும் மாணவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்தல், அடிக்கடி கூட்டங்களை நடத்துதல் மற்றும் மாவட்டங்கள் மற்றும் கல்வித் துறைகளில் உள்ள கிராம சபைக் கூட்டங்களுக்கு முன் சமர்பித்தல் மற்றும் பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களை நியமித்தல் போன்றவை பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகளாகும்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழுக்கள் 2024 ஆம் ஆண்டு மறுகட்டமைப்பு செய்யப்பட்டன. இதையடுத்து 2024-26 ஆம் ஆண்டுகளுக்கான புதிய தலைவர், உறுப்பினர்களை கொண்ட எஸ்.எம்.சி குழுக்களின் கூட்டமானது கடந்தாண்டு முதல் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு கல்வியாண்டின் முதல் எஸ்.எம்.சி குழுக் கூட்டம் கடந்த ஜூலை 25 ஆம் தேதி நடைபெற்றது. தொடர்ந்து சென்ற மாதத்துக்கான கூட்டம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடத்தப்பட்டது.
இந்தநிலையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் உறுப்பினர்களின் வருகையை பதிவு செய்யும் முறையில் சில மாற்றங்களை செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
அதன்படி, வருகைப் பதிவு செயலியில் கூட்டத்தில் பங்கேற்றவர், பங்கேற்காதவர் ஆகியவற்றுடன் கூடுதலாக ‘காலியிடம்’ என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடைந்துள்ளதால், கூட்டத்தில் அவர்கள் பங்கேற்க தேவையில்லை.
ஒருவேளை, அவர்கள் விரும்பினால் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கலாம். ஆனால், அவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டாம். அதற்கு மாறாக, செயலியில் காலியிடம் என்று குறிப்பிட வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை பின்பற்றி கூட்டத்தை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-school-education-department-guidelines-school-management-committee-attendance-9775989