சனி, 21 மே, 2016

மேல்வாரம், குடிவாரம் நிலங்கள்.,


நிலம் ஒருவருக்கு சொந்தமாய் இருக்கும். குடியான விவசாயி அதில் விவசாயம் செய்து வருவார். விவசாயத்தில் கிடைத்த விளைச்சல் பொருளின் ஒரு பகுதியை அந்த நில உரிமையாளருக்கு கொடுத்து விடுவார்.
விவசாயம் செய்யும் குடியானவரின் உரிமை மூன்று விதங்களில் கிடைக்கும். 
1) அடுத்தவருக்கு சொந்தமான நிலத்தை (Landlord), குடியானவர் (Tenant)காலங்காலமாக விவசாயம் செய்து கொண்டுவருவதால் - அவருக்கு விவசாய உரிமை உண்டு.
2) நிலத்தின் உரிமையாளரே மொத்தமாக ஒரு தொகையை குடியானவரிடம் வாங்கிக் கொண்டு, நிரந்தரமாக விவசாயம் செய்யும் உரிமையைக் கொடுத்திருப்பார்.- அப்போதும் அவருக்கு விவசாய உரிமை உண்டு.
3) தொடர்ந்து இவ்வளவு காலம் வரை விவசாயம் செய்யும் குடியானவருக்கு இந்த விவசாயம் செய்யும் உரிமை உண்டு என சட்டமும் கொண்டுவரும். -இதன்மூலம் விவசாயிக்கு இந்த விவசாய உரிமை வரும். இதுதான் Tenancy rights.
நிலத்தின் (மண்ணில்) நிலத்துக்குச் சொந்தக்காரருக்கு உள்ள உரிமையை "மேல்வாரம்" (Melvaram) என்று சொல்வர். விவசாயி அந்த நிலத்தில் காலமெல்லாம் விவசாயம் செய்து கொள்ளும் உரிமையை "குடிவாரம்" (Kudivaram) என்று சொல்வர்.
இதில் என்ன சிறப்பு என்றால், இந்த குடிவார உரிமையை கிரயப் பத்திரம் மூலம் மூன்றாம் நபர்களுக்கு விற்பனையும் செய்யலாம். (அந்த சொத்தை விற்பனை செய்வதல்ல; விவசாய உரிமையை விற்பனை செய்வது; அதேபோல அந்த நிலத்தின் (மண்ணின்) சொந்தக்காரரும் அவரின் மேல்வார உரிமையை (மண்ணின் உரிமையை) விற்பனை செய்யலாம். -- ஆக ஒரு சொத்துக்கு இரண்டு உரிமைகள்). இப்போது இப்படியான எந்த பழக்கமும் இல்லை. பின்நாளில், குடிவார உரிமைக்காரருக்கே அந்த நிலத்தை சட்டம் போட்டு சொந்தமாக்கி விட்டது. அவர் இப்போது குடிவார உரிமையாளர் இல்லை; அதற்குப் பதிலாக ரயத்வாரி பட்டாதாரர். (அதாவது உண்மையில் நிலத்தை ஆண்டு அனுபவித்துக் கொண்டிருப்பவர் என்று பொதுவான அர்த்தம்).