/indian-express-tamil/media/media_files/2025/09/01/gcc-hc-2025-09-01-21-17-03.jpg)
இந்தத் தொகை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷால் நிர்ணயிக்கப்பட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி, கோவில் நிலத்தை வாங்கவும், முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு கோரியும் ஜூன் 19-ம் தேதி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தானத்திற்குச் சொந்தமான 10 கிரவுண்டு (24,000 சதுர அடி) நிலத்தை, ரூ.18.85 கோடிக்கு சென்னை மாநகராட்சி வாங்க உள்ளது. இந்தத் தொகை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷால் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த 1937-ம் ஆண்டு முதல் இந்த நிலத்தில் இயங்கிவரும் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் 2,500 மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவுக்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் நிர்வாகம் 20210-ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அதில், 1969-ம் ஆண்டு முதல் கோயில் இடத்துக்கான வாடகையை சென்னை மாநகராட்சி செலுத்தவில்லை என குற்றம்சாட்டியது.
ஆரம்பத்தில், சென்னை மாநகராட்சி அந்த நிலத்தின் உரிமை கோவில் நிர்வாகத்திற்கு சொந்தமானது இல்லை என்று கூறி அதனால் வாடகை செலுத்த தேவையில்லை என வாதிட்டது.
கோவில் நிர்வாகம் தனது உரிமையை நிரூபிக்க, 1937-ம் ஆண்டு மாநகராட்சியுடன் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தம், 1938 முதல் 1969 வரை செலுத்தப்பட்ட வாடகை விவரங்கள் மற்றும் சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளிட்ட பல ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.
இதையடுத்து, ஆவணங்களை ஆய்வு செய்த சென்னை உயர் நீதிமன்றம், நிலத்தின் உரிமையாளர் கோவில் நிர்வாகம் என்றும், சென்னை மாநகராட்சி வெறும் குத்தகைதாரர் என்றும் உறுதி செய்தது.
நிலத்திற்கான வாடகையை நிர்ணயிக்க, உயர் நீதிமன்றம் இந்த வழக்கை 2023-ம் ஆண்டு தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் நல்லிணக்க மையத்திற்கு அனுப்பியது. ஆனால், இரு தரப்பினருக்கும் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படாததால் மத்தியஸ்தம் தோல்வியடைந்தது.
இதையடுத்து, நீதிபதி வெங்கடேஷ், மாணவர்களின் நலன் கருதி மாநகராட்சியே அந்த நிலத்தை வாங்கிக்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்தார். கோவில் நிர்வாகமும் உடனடியாக இதற்கு ஒப்புக்கொண்டது.
நிலத்தின் வழிகாட்டி மதிப்பு சதுர அடி ரூ.5,500 என்றும், சந்தை மதிப்பு சதுர அடி ரூ.10,701 என்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சந்தை மதிப்பின்படி நிலத்தை வாங்கினால், மாநகராட்சி ரூ.25.68 கோடி செலுத்த நேரிடும். இது பெரிய தொகை என்பதால், நீதிபதி ஒரு சதுர அடிக்கு ரூ.7,800 என நிர்ணயித்து, மொத்தத் தொகையான ரூ.18.85 கோடியை செலுத்த உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மாநகராட்சி மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டை ஜனவரி 24ம் தேதி தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு, மாநகராட்சிக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது.
நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி, கோவில் நிலத்தை வாங்கவும், முத்திரைத்தாள் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கு கோரியும் ஜூன் 19-ம் தேதி தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியது.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, மாணவர்களின் நலன் கருதி, ஜூலை 23-ல் நிலம் வாங்குவதற்கான நிர்வாக அனுமதியையும், பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்கையும் வழங்கி அரசாணை பிறப்பித்தது.
தற்போது, கோவில் நிர்வாகத்திற்குச் செலுத்த வேண்டிய காசோலைகள் தயாரான நிலையில், இன்னும் சில நாட்களில் நிலப் பதிவு நடைபெறும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-high-court-intervention-chennai-corporation-purchase-temple-land-for-rs-1885-crore-corporation-school-9776179