/indian-express-tamil/media/media_files/2026/09/02/freight-1-2026-09-02-23-50-03.jpg)
நாட்டின் முக்கிய வணிக மையங்களையும் துறைமுகங்களையும் இணைக்கும் பிரத்யேக சரக்கு ரயில் பாதையைச் சென்னை வரை நீட்டிக்கக் கோரிச் சென்னை துறைமுக நிர்வாகம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.
நாட்டின் முக்கிய வணிக மையங்களையும் துறைமுகங்களையும் இணைக்கும் பிரத்யேக சரக்கு ரயில் பாதையைச் சென்னை வரை நீட்டிக்கக் கோரிச் சென்னை துறைமுக நிர்வாகம் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது. குஜராத் - விஜயவாடா சரக்கு வழித்தடத்தில் சென்னையை இணைக்கத் தமிழகப் பிரதிநிதிகள் போதிய அழுத்தம் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நாட்டின் தொழில்துறை மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை விரைவுபடுத்தும் நோக்கில் அமைக்கப்பட்டு வரும் பிரத்யேக சரக்கு ரயில் பாதையை, இந்தியாவின் 3-வது பெரிய வர்த்தக மையமான சென்னை துறைமுகத்துடனும் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துவருகிறது. குஜராத், மேற்கு வங்கம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடாவை இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு வழித்தடத் திட்டத்தில் சென்னையை சேர்க்கக் கோரி சென்னை துறைமுக நிர்வாகம் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவில் பயணிகள் ரயில் போக்குவரத்தையும் சரக்கு ரயில் போக்குவரத்தையும் தனித்தனியாகப் பிரித்து, தொழில் நிறுவனங்களின் சரக்குகளை அதிவேகமாக இலக்குகளுக்குக் கொண்டு சேர்க்கும் பிரத்யேக சரக்கு ரயில் பாதை திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை நாட்டின் 9 முக்கிய மாநிலங்களை உள்ளடக்கிய வகையில் 2,841 கிலோமீட்டர் தொலைவுக்கு இத்தகைய அதிநவீன ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தச் சூழலில், நாட்டின் மேற்குப் பகுதியான குஜராத், கிழக்குப் பகுதியான மேற்கு வங்கம் மற்றும் தென்னகத்தின் நுழைவு வாயிலான ஆந்திராவின் விஜயவாடா ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் புதிய பிரத்யேக சரக்கு ரயில் பாதையை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) தயாரிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
இத்திட்டத்தில் ஆந்திராவின் விஜயவாடா வரை மட்டுமே பாதை திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அதனைச் சில நூறு கிலோமீட்டர்கள் நீட்டித்துத் தமிழகத்தின் சென்னை துறைமுகத்துடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாகச் சென்னை துறைமுகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சென்னை துறைமுகம் இத்திட்ட இணைப்பில் சேர்க்கப்படும் பட்சத்தில், வாகனத் தொழில் நிறுவனங்களின் கார்கள், சர்வதேசச் சரக்கு கொள்கலன்கள் (Containers), உரங்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்துப் பல மடங்கு விரைவுபெறும். இதனால் தென் மாநிலங்களின் வர்த்தகம் பெருமளவில் வளர்ச்சியடையும்.
எனினும், இக்கோரிக்கை வெறும் நிர்வாகக் கடிதத்தோடு நின்றுவிடாமல், நாடாளுமன்றத்திலும் மத்திய அரசிடமும் உரிய அழுத்தம் கொடுத்து இத்திட்டத்தைச் சென்னை வரை நீட்டிக்கத் தமிழக அரசியல் தலைவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு வர்த்தக அமைப்புகளிடையே எழுந்துள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/gujarat-vijayawada-freight-corridor-chennai-port-connectivity-demand-12485223





