செவ்வாய், 30 ஜூன், 2026

சி.பி.எஸ்.இ மும்மொழிக் கொள்கை தளர்வு: 10-ம் வகுப்புக்கு விலக்கு; 9-ம் வகுப்புக்கு 2 வெளிநாட்டு மொழிகள் படிக்க அனுமதி

 

cbse policy

தற்போதுள்ள 10-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையினர் பழைய இருமொழிக் கொள்கையின் கீழேயே தொடர்வார்கள்; அவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கவோ அல்லது அதற்கான தேர்வு எழுதவோ தேவையில்லை.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ), அதன் கீழ் இயங்கும் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கையைச் செயல்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. இது 2026-27 கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசியக் கல்விக் கொள்கை (என்.இ.பி) 2020-க்கு இணங்க வெளியிடப்பட்டுள்ள இந்தச் சுற்றறிக்கை, இந்திய மொழிகள் எவ்வாறு கற்பிக்கப்படும் என்பதில் தெளிவைக் கொண்டுவந்துள்ளது. அதே நேரத்தில், தற்போது கல்வி முறையில் உள்ள எந்தவொரு மாணவரும் திடீர் மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதையும் இது உறுதி செய்கிறது.

ஜூலை 1 முதல் தொடங்கும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, குறைந்தது இரண்டு இந்திய மொழிகள் உட்பட மூன்று மொழிகளைக் கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று சி.பி.எஸ்.இ அறிவித்து ஒரு மாதத்திற்கும் மேலான நிலையில், இந்த புதிய வழிகாட்டுதல்கள் வெளிவந்துள்ளன. சி.பி.எஸ்.இ-யின் இந்த உத்தரவுக்கு எதிராகப் பல மாணவர்களும் பெற்றோர்களும் நீதிமன்றத்தை அணுகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்மொழிக் கொள்கையானது குறைந்தது இரண்டு மொழிகளைக் கற்பதைக் கட்டாயமாக்குகிறது, அவற்றில் ஒன்று கண்டிப்பாக பாரதிய பாஷா (சொந்த இந்திய மொழி) ஆக இருக்க வேண்டும். இதில் இந்தி, சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, பெங்காலி, பஞ்சாபி, குஜராத்தி, ஒடியா, அஸ்ஸாமி மற்றும் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள பிற மொழிகள் அடங்கும்.

ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், அரபு அல்லது ஸ்பானிஷ் போன்ற ஒரு வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக (R3) தேர்ந்தெடுக்கலாம், ஆனால் மற்ற இரண்டு மொழிகளும் ஏற்கனவே பாரதிய பாஷாவாக இருந்தால் மட்டுமே இது சாத்தியம். உதாரணமாக, ஒரு மாணவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளைப் படித்துவிட்டு தன் மொழிப் பாடங்களை முடித்துக் கொள்ள முடியாது; அங்கு கூடுதலாகக் குறைந்தது ஒரு இந்திய மொழியாவது இருக்க வேண்டும்.

அமலாக்கம் பற்றி வழிகாட்டுதல்கள் கூறுவது என்ன?

10-ம் வகுப்பு - மாற்றமில்லை தற்போதுள்ள 10-ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையினர் பழைய இருமொழிக் கொள்கையின் கீழேயே தொடர்வார்கள்; அவர்கள் மூன்றாவது மொழியைக் கற்கவோ அல்லது அதற்கான தேர்வு எழுதவோ தேவையில்லை. வாரியத் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களிடையே எந்தவொரு குழப்பமும் அல்லதுத் தேவையற்ற கவலையும் ஏற்படுவதைத் தடுக்க சி.பி.எஸ்.இ இதைத் தெளிவாக மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

9-ஆம் வகுப்பு - மூன்று மொழிகள் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் இனி மூன்று மொழிகளைப் படிப்பார்கள், அதில் குறைந்தது இரண்டு மொழிகள் பாரதிய பாஷாவாக இருக்க வேண்டும். இருப்பினும், சி.பி.எஸ்.இ சூழ்நிலைகளுக்கு ஏற்ப தெளிவான விளக்கங்களை அளித்துள்ளது:

சூழ்நிலை 1 (இரண்டு இந்திய மொழிகள்): ஒரு மாணவர் ஏற்கனவே இந்தி மற்றும் தமிழ் போன்ற இரண்டு பாரதிய பாஷாக்களை (இந்திய மொழிகள்) படித்துக் கொண்டிருந்தால், அவர் தனது மூன்றாவது மொழியாக (R3) மற்றொரு இந்திய மொழியையோ அல்லது ஏதேனும் ஒரு வெளிநாட்டு மொழியையோ தாராளமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

சூழ்நிலை 2 (ஒரு இந்திய மொழி + ஒரு வெளிநாட்டு மொழி): ஒரு மாணவர் தற்போது தமிழ் மற்றும் ஆங்கிலம் போன்ற ஒரு பாரதிய பாஷா மற்றும் ஒரு வெளிநாட்டு மொழியைப் படித்துக் கொண்டிருந்தால், அவர் கட்டாயமாகத் தனது மூன்றாவது மொழியாக (R3) ஏதேனும் ஒரு பாரதிய பாஷாவை (இந்திய மொழி) மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

சூழ்நிலை 3 (இரண்டு வெளிநாட்டு மொழிகள்): ஒரு மாணவர் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு போன்ற இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்துக் கொண்டிருந்தால், அவருக்குச் சிறப்பு ஒருமுறை தளர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, அவர் அந்த இரண்டு வெளிநாட்டு மொழிகளையும் தொடர்ந்து படிக்கலாம்; ஆனால், அதனுடன் கூடுதலாக ஏதேனும் ஒரு பாரதிய பாஷையை (இந்திய மொழி) தனது மூன்றாவது மொழியாக (R3) சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மூன்றாவது மொழி (R3) பள்ளியின் உள் மதிப்பீடு (Internal Assessment) மூலமாக மட்டுமே மதிப்பிடப்படும் என்பதை 9-ம் வகுப்பு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மாணவர்கள் 2027-28-ல் 10-ம் வகுப்பிற்குச் செல்லும்போது, மூன்றாவது மொழிக்கான சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வு (CBSE Board Exam) இருக்காது. இந்த மாற்றத்திற்கு ஆதரவாக, சி.பி.எஸ்.இ மற்றும் என்.சி.இ.ஆர்.டி (NCERT) ஆகியவை தகுதிவாய்ந்த கற்றல் ஆதாரங்களை வழங்கும் என்று வாரியத்தின் வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.

7 மற்றும் 8-ம் வகுப்புகள் 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளை எட்டும்போது மும்மொழிக் கொள்கைக்கு மாறுவார்கள், அதில் இரண்டு மொழிகள் பாரதிய பாஷாவாக இருக்க வேண்டும். ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒரு தளர்வு வழங்கப்படுகிறது - அவர்கள் இரண்டையும் தொடரலாம் மற்றும் ஒரு பாரதிய பாஷாவை மூன்றாவது மொழியாகச் சேர்த்துக் கொள்ளலாம். மூன்றாவது மொழி பள்ளியால் உள்நாட்டிலேயே மதிப்பிடப்படும்; 10-ஆம் வகுப்பில் அதற்கான சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வு இருக்காது.

6-ம் வகுப்பு 2026-27 கல்வியாண்டின் 6-ம் வகுப்பு மாணவர்கள் தான், இந்த மும்மொழிக் கொள்கை முழுமையாகப் பொருந்தும் முதல் பிரிவினர் ஆவர். இரண்டு பாரதிய பாஷாக்கள் என்ற விதியில் இவர்களுக்கு எந்தவொரு தளர்வும் இல்லை. இந்த மாணவர்கள் 10-ஆம் வகுப்பை அடையும் போது, மூன்றாவது மொழிக்கான (R3) சி.பி.எஸ்.இ வாரியத் தேர்வை எழுத வேண்டும் — இதன் மூலம் இ புதிய கொள்கையின் கீழ் முழுமையாக மதிப்பிடப்படும் முதல் பிரிவினராக இவர்கள் மாறுவார்கள். என்சிஇஆர்டி ஏற்கனவே 22 அங்கீகரிக்கப்பட்ட பாரதிய பாஷாட்களில் 6-ஆம் வகுப்புக்கான பிரத்யேக R3 பாடப்புத்தகங்களைத் தயாரித்துள்ளது, அவை ncert.nic.in இல் கிடைக்கின்றன.

யாருக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது?

மும்மொழிக் கொள்கையிலிருந்து சி.பி.எஸ்.இ மூன்று பொதுவான பிரிவினருக்கு விலக்கு அளித்துள்ளது:

1.சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகள் (CwSN): மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD) 2016-க்கு இணங்க, கட்டாய மூன்றாவது மொழித் தேவையிலிருந்து விலக்குகளும் தளர்வுகளும் வழங்கப்படுகின்றன.

2.இந்தியாவிற்கு வெளியிலுள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகள்: இந்தியாவிற்கு வெளியே அமைந்துள்ள அனைத்து சி.பி.எஸ்.இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கும், மூன்றாவது மொழியாக ஒரு இந்திய மொழியைக் கற்க வேண்டும் என்ற விதியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

3.இந்தியா திரும்பும் வெளிநாட்டு மாணவர்கள்: வெளிநாட்டில் படித்துவிட்டு இப்போது இந்தியா திரும்பும் மாணவர்களுக்கும், மூன்றாவது மொழியாக (R3) பாரதிய பாஷா கற்க வேண்டும் என்ற விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, மாநிலங்களுக்கு இடையே இடம்பெயரும் குடும்பங்கள் அல்லது பாதுகாவலர்களைப் பொறுத்தவரை, மாணவர்கள் 9-ஆம் வகுப்பிற்கு மாறும்போது அவர்கள் ஏற்கனவே நடுத்தரக் கட்டத்தில் (Middle Stage) தேர்ந்தெடுத்த மொழி சேர்க்கையையே தொடரலாம்; மேலும் அவர்களின் புதிய பள்ளி அந்தத் தேர்வுகளை ஆதரிப்பதற்கான போதிய ஆதாரங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.

மூன்றாவது மொழியை அறிமுகப்படுத்துவது — குறிப்பாகக் குறைவாகக் கற்பிக்கப்படும் பாரதிய பாஷாக்கள் — பள்ளிகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை சவால்களை உருவாக்கலாம் என்பதை சி.பி.எஸ்.இ ஒப்புக்கொண்டுள்ளது. இதனைச் சரிசெய்ய, வழிகாட்டுதல்கள் நெகிழ்வான ஆசிரியர் ஏற்பாடுகளை வழங்குகின்றன. பள்ளிகள் தங்களுக்குத் தேவையான மொழியில் செயல்பாட்டுத் திறன் கொண்ட தற்போதைய ஆசிரியர்களைப் பயன்படுத்தலாம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது முதுகலை மொழி நிபுணர்களை ஈர்க்கலாம், மேலும் சஹோதயா கூட்டமைப்புகளைப் (பள்ளிகளுக்கு இடையே கற்பித்தல் ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்ளும் நெட்வொர்க்) பயன்படுத்திக் கொள்ளலாம். நேரில் ஆசிரியர்கள் உடனடியாகக் கிடைக்காத இடங்களில், பள்ளிகள் ஆன்லைன் மற்றும் கலப்பு (Virtual & Hybrid) கற்பித்தல் முறைகளையும் பயன்படுத்தலாம்.


source https://tamil.indianexpress.com/education-jobs/cbse-eases-three-language-policy-class-10-exempted-class-9-foreign-languages-allow-nep-12118567

துணைவேந்தர் நியமன சட்டம் வழக்கு: ஜூலை 29-ல் இறுதி விசாரணை - ஐகோர்ட் உத்தரவு

 

chennai high court 2x

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் சட்டத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணையை, வரும் ஜூலை 29-ம் தேதிக்குத் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்குப் பதிலாக, மாநில முதலமைச்சருக்கே இருக்கும் வகையில் திமுக அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியது. இந்த சட்ட நடைமுறைக்கு எதிராக நெல்லையைச் சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடாஜலபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் புதிய துணைவேந்தர் நியமன சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையை நீக்கியதோடு, பிரதான வழக்கை விரைவாக விசாரித்து முடிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அறிவுறுத்தியது.

இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது விரிவான பதில் மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணையை வரும் ஜூலை 29-ம் தேதிக்குத் தள்ளிவைப்பதாக நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/vice-chancellor-appointment-law-case-final-hearing-postponed-to-july-29-madras-high-court-12118558

திங்கள், 29 ஜூன், 2026

இந்தியா கடும் கண்டனம்

 நான்கு வீரர்கள் கொல்லப்பட்ட கராச்சி சம்பவத்தில் இந்தியாவின் தலையீடு இருப்பதாக பாகிஸ்தான் சுமத்திய குற்றச்சாட்டுகளை இந்தியா வன்மையாக நிராகரித்துள்ளது. பாகிஸ்தான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்த ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை கூறுகையில், "கராச்சியில் சமீபத்தில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் பாகிஸ்தானின் அறிக்கைகளைப் பார்த்தோம். நாங்கள் அவற்றை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம்" என்றார்.

மற்றவர்கள் மீது விரல் நீட்டுவதற்குப் பதிலாக, பாகிஸ்தான் தன்னை உள்நோக்கிப் பார்ப்பது நல்லது. தனது சொந்தப் பகுதியில் உள்ள பயங்கரவாதக் கட்டமைப்புகளுக்கு எதிராக நம்பகமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் பயங்கரவாதத்தை அரசு கொள்கையின் ஒரு கருவியாகச் சார்ந்திருக்கும் அதன் போக்கிலிருந்து விடுபட வேண்டும்” என்று ஜெய்ஸ்வால் மேலும் கூறினார்.

இஸ்லாமாபாத்திலிருந்து வந்த அறிக்கைகளின்படி, சனிக்கிழமை இரவு கராச்சியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் வளாகத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துணிச்சலான தாக்குதலை முறியடித்த பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர், ஆறு பயங்கரவாதிகளைக் கொன்றதுடன் மற்றொரு பயங்கரவாதியை உயிரோடு பிடித்தனர்.

இந்தத் தாக்குதலில் 4 துணை ராணுவப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும் இது 2024 அக்டோபருக்குப் பிறகு அந்நகரத்தின் முதல் பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகும். பாகிஸ்தான் அரசாங்க அமைப்பிலுள்ள சில தரப்பினர் இந்தத் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம் எனக் குற்றம் சாட்டினர். அவர்களில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியும் இந்தத் தாக்குதலில் இந்தியத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

பாதுகாப்புத் துறை சார்ந்த ஒருவரை மேற்கோள் காட்டி பி.டி.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டி.டி.பி) அமைப்பிலிருந்து பிரிந்த ஜமாத்-உல்-அஹ்ரார் என்ற குழுவைச் சேர்ந்தவர்கள், கராச்சியின் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட குலிஸ்தான்-இ-ஜவ்ஹர் பகுதியில் உள்ள சிந்து ரேஞ்சர்ஸ் பிரிவின் பிட்டாய் பிரிவு தலைமையகத்திற்குள் இரவு 8.30 மணியளவில் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

நீட் முடிவுகளுக்கு முன்பே மருத்துவ சேர்க்கை பதிவு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

 

நீட் முடிவுகளுக்கு முன்பே மருத்துவ சேர்க்கை பதிவு: இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்



source https://tamil.indianexpress.com/education-jobs/tamil-nadu-mbbsbds-admissions-online-registration-begins-today-ahead-of-neet-results-12115562

அடுத்த மாத தொடக்கத்தில் செயல்பாட்டுக்கு வருகிறது ராணுவத்தின் முதல் ஐ.பி.ஜி பிரிவுகள்

loc-kargil

சீன எல்லையை எதிர்கொள்ளும் பனாகாறை தளமாகக் கொண்ட XVII மவுண்டன் ஸ்டிரைக் கோர்ப்ஸ் பிரிவில் இருந்து, சுயமாக செயல்படக்கூடிய மற்றும் சுறுசுறுப்பான பிரிகேட் அளவிலான போர் பிரிவுகளை உருவாக்கி, மலைப்பகுதிகளில் விரைவாக நிலைநிறுத்துவதற்காக ராணுவம் தனது முதல் ஒருங்கிணைந்த போர் குழுக்களை அடுத்த மாதத்திற்குள் நிறுவி செயல்பாட்டுக்குக் கொண்டுவரத் தயாராகி வருகிறது.

முன்னதாக, XVII மவுண்டன் ஸ்டிரைக் கோர்ப்ஸின் கீழ் செயல்படும் 59 மற்றும் 23 ஆகிய இரு பிரிவுகளின் கீழ் செப்டம்பர் மாதத்திற்குள் நான்கு ஒருங்கிணைந்த போர் குழுக்களை உருவாக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது இந்தத் திட்டம் முன்கூட்டியே மாற்றியமைக்கப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதியே செயல்பாட்டுக்கு வரவுள்ளதாகத் தெரிகிறது. ஒருங்கிணைந்த போர் குழுக்களை உருவாக்குவதற்கான நீண்டகாலத் திட்டங்கள் வேகம் எடுத்துள்ளன என்றும், அவை விரைவில் செயல்படுத்தப்படலாம் என்றும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் முதன்முதலில் செய்திகள் வெளியாகின.

தற்போதைய திட்டங்களின்படி, XVII மவுண்டன் ஸ்டிரைக் கோர்ப்ஸின் கீழ் நான்கு ஒருங்கிணைந்த போர் குழுக்கள் மற்றும் ஒரு பீரங்கி ஆதரவு குழு உருவாக்கப்படும். இந்த ஐந்து பிரிவுகளுக்கும் தலா ஒரு மேஜர் ஜெனரல் அந்தஸ்து கொண்ட அதிகாரி தலைமை தாங்குவார். ஒவ்வொரு ஒருங்கிணைந்த போர் குழுவிலும் 12 முதல் 13 அலகுகளைக் கொண்ட 5,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இடம்பெறுவர். மேலும், பிரிகேடியர் அந்தஸ்து கொண்ட ஒரு அதிகாரி இதன் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக  நியமிக்கப்படலாம்.

நான்கு ஒருங்கிணைந்த போர் குழுக்களும் XVII மவுண்டன் ஸ்டிரைக் கோர்ப்ஸின் இரண்டு பிரிவுகளில் இருந்து உருவாக்கப்படும் வேளையில், பீரங்கி தளங்களைக் கொண்ட பீரங்கி ஆதரவு குழு நேரடியாக கோர்ப்ஸ் தலைமையகத்தின் கீழ் செயல்படும் வாய்ப்புள்ளது. ராணுவத்தின் புதிதாக உருவாக்கப்பட்ட 'திவ்யாஸ்த்ரா' பேட்டரிகள் இந்த குழுவின் கீழ் கொண்டுவரப்படலாம். 5,000-க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்ட ஒவ்வொரு ஒருங்கிணைந்த போர் குழுவிலும் காலாட்படைப் பட்டாலியன்கள், பீரங்கிப் படைகள், மின்னணு மற்றும் இயந்திர பொறியாளர்கள் படை, போர் பொறியாளர்கள், ராணுவ சேவைப் படை மற்றும் ஒரு கள மருத்துவமனை போன்ற பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றிருக்கும். முழு கோர்ப்ஸ் பிரிவும் அணிதிரள்வதற்காகக் காத்திருக்காமல், தங்களின் சுறுசுறுப்பான தன்மையால் விரைவாக நிலைநிறுத்தப்பட முடியும் என்பதால், மலைப்பகுதிகளில் இந்த ஒருங்கிணைந்த போர் குழுக்கள் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.


இந்த ஒருங்கிணைந்த போர் குழுக்களின் உருவாக்கம் என்பது ராணுவத்தின் ஒரு பெரிய மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதில் பைரவ் பட்டாலியன்கள், ருத்ரா பிரிகேடுகள், திவ்யாஸ்த்ரா பேட்டரிகள் மற்றும் சக்திபான் பிரிவுகளை உருவாக்குவதும் அடங்கும். பிரிகேடியர் ஒருவரால் வழிநடத்தப்படும் ருத்ரா பிரிகேடுகளும் பல கூறுகளைக் கொண்டிருக்கும், ஆனால் அவை கூடுதல் ஆதரவிற்காக டிவிஷனைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். இதற்கு நேர்மாறாக, ஒருங்கிணைந்த போர் குழுக்கள் அளவில் பெரியதாகவும், சுயமாகச் செயல்படும் சுதந்திரமான தன்மையைக் கொண்டதாகவும் இருக்கும்.

இவை ராணுவத்தின் முதல் ஒருங்கிணைந்த போர் குழுக்களாக இருக்கும். அப்போதைய ராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் அவர்களால் ராணுவ மறுசீரமைப்பு குறித்து தொடங்கப்பட்ட நான்கு ஆய்வுகளில் ஒன்றில் இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டது. ஒருங்கிணைந்த போர் குழுக்களை நிறுவுவது குறித்த திட்டங்கள் சுமார் ஏழு ஆண்டுகளாக விவாதத்தில் உள்ளன. இந்தத் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் அச்சுறுத்தலை அடிப்படையாகக் கொண்ட மாதிரி அல்லாமல், திறனை அடிப்படையாகக் கொண்ட மாதிரியை முகாந்திரமாகக் கொண்டவை. இந்த ஒருங்கிணைந்த போர் குழுக்கள் எதிரியின் தாக்குதலுக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் தற்காப்பு ஆகிய இரு பாத்திரங்களையும் ஆற்றும் திறன் கொண்டவையாக இருக்கும்.

இந்தக் கோட்பாடு 2019-ஆம் ஆண்டு வாக்கில் பாகிஸ்தானுடனான மேற்கு எல்லையில் உள்ள IX கோர்ப்ஸில் சோதனை செய்து பார்க்கப்பட்டது, ஆனால் இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை. 2019-ல் நடத்தப்பட்ட 'எக்சர்சைஸ் ஹிம்விஜய்'  உள்ளிட்ட கிழக்கு பிராந்தியத்தில் நடத்தப்பட்ட பல பயிற்சிகளிலும் இந்த ஒருங்கிணைந்த போர் குழு கோட்பாடு பரிசோதிக்கப்பட்டது.

சுமார் ஒரு லட்சம் வீரர்களைக் கொண்டு, அணிதிரள்வதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஒரு முழு கோர்ப்ஸ் பிரிவோடு ஒப்பிடுகையில், இந்த ஒருங்கிணைந்த போர் குழுக்களை மலைப்பகுதிகளில் மிக விரைவாக நிலைநிறுத்த முடியும் என்பதால் இவை அணிதிரள்வதற்கான நேரத்தைக் குறைக்கின்றன. இந்த ஒருங்கிணைந்த போர் குழுக்களின் பலம் அவற்றின் விரைவான பயன்பாடு மற்றும் நெகிழ்வான தன்மையில் உள்ளது. மேலும் இவற்றின் உருவாக்கம் பல்வேறு கூட்டுப் படை நடவடிக்கைகளுக்குச் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதி செய்யும். இவை நிறுவப்பட்டவுடன், குறிப்பிட்ட தியேட்டர் கமாண்டுகளின் கீழும் நிலைநிறுத்தப்படலாம்.

கடந்த பத்தாண்டுகளில், சீனாவும் தனது பழைய டிவிஷன் பிரிவுகளிலிருந்து விடுபட்டு, டாங்கிகள், பீரங்கிகள், வான் பாதுகாப்பு மற்றும் ஆதரவுப் பிரிவுகளுடன் ஒருங்கிணைக்கப்பட்ட, கூட்டு நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறிய மற்றும் பல்துறை சார்ந்த 'கம்பைன்டு ஆர்ம்ஸ் பிரிகேடுகளாக' மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/india/army-set-to-establish-operationalise-first-integrated-battle-groups-next-month-12115536

29 06 2026 


ஞாயிறு, 28 ஜூன், 2026

ஒரே ஏர்போர்ட்டில் 18 வருட

air

பாஸ்போர்ட், குடியுரிமை ஆகியவை எல்லாம் ஒன்றுதான் என்று நம்மில் பலர் நினைக்கிறோம். ஆனால், அவை ஒவ்வொன்றும் முற்றிலும் வேறுபட்டவை. இந்த அதிகாரத்துவ சட்ட சிக்கல்களால் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் 18 ஆண்டுகளை ஒரு விமான நிலையத்திற்குள்ளேயே கழித்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? 

 ஒரே ஏர்போர்ட்டில் 18 ஆண்டுகள் வாழ்ந்த விசித்திர மனிதன்

நமக்கு 4 மணி நேரம் அல்லது 8 மணி நேரம் ஏர்போர்ட் லே-ஓவர் (Layover) இருந்தாலே பைத்தியம் பிடித்துவிடும். ஆனால், ஒரு இரவோ, ஒரு வாரமோ அல்ல.. தன் வாழ்நாளின் 18 வருடங்களை (1988 முதல் 2006 வரை) ஒரு ஏர்போர்ட் டெர்மினலுக்குள்ளேயே கழித்தவர் தான் மெஹ்ரான் கரிமி நாசேரி.

யார் இந்த மெஹ்ரான்? 

நாசேரி 1945-ல் ஈரானில் பிறந்தார். பின்னர் பிரிட்டனில் படித்துவிட்டு ஐரோப்பா முழுவதும் சுற்றித் திரிந்தார். 1988-ல் அவர் ஐரோப்பாவில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவரது அடையாள ஆவணங்கள் மற்றும் பாஸ்போர்ட் தொலைந்து போய்யுள்ளது. ஆவணங்கள் இல்லாததால் பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. அதே சமயம், அவரை வேறு எந்த நாட்டிற்கும் திருப்பி அனுப்பவும் சட்டத்தில் இடமில்லை. இதனால் பிரான்சின் 'சார்லஸ் டி கோல்' (Charles de Gaulle) விமான நிலையத்தின் 'டெர்மினல் 1' தான் அவரது நிரந்தர முகவரியாக மாறியது.

ஒரு சிவப்பு பெஞ்ச்.. இரண்டு லக்கேஜ் ட்ராலிகள்

நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் வருடங்களாக மாறின. ஏர்போர்ட் ஊழியர்கள், பயணிகள் என அனைவருக்கும் அவர் பழகிப்போனார். அங்கிருந்த ஒரு சிவப்பு நிற பெஞ்ச் தான் அவரது கட்டில். தனது உடமைகள் அனைத்தையும் இரண்டு லக்கேஜ் ட்ராலிகளில் அடுக்கி வைத்திருந்தார். தினமும் அதிகாலையில் பயணிகள் கூட்டம் வருவதற்கு முன்பே ஏர்போர்ட் கழிவறைக்குச் சென்று முகம் கழுவி, காகா குளியல் போட்டுவிடுவார்.

நாளிதழ்கள் படிப்பது, டைரி எழுதுவது, ஏர்போர்ட் ஊழியர்கள் மற்றும் பயணிகள் வாங்கித் தரும் உணவைச் சாப்பிடுவது என அவரது வாழ்க்கை அங்கேயே சுழன்றது. காலப்போக்கில் அவர் தன்னை "சர் ஆல்ஃபிரட் மெஹ்ரான்" என்று அழைக்கத் தொடங்கினார்.

விசித்திரத் திருப்புமுனை

1990-களின் இறுதியில் அவருக்குப் பிரான்ஸ் அரசு குடியுரிமை வழங்க முன்வந்தது. ஆனால், அந்த ஆவணங்களில் அவரது அசல் பெயரான மெஹ்ரான் கரிமி நாசேரி என்று இருந்ததால், "நான் நாசேரி இல்லை, நான் தான் சர் ஆல்ஃபிரட்" என்று கூறி அந்தப் பேப்பர்களில் கையெழுத்திட மறுத்து, ஏர்போர்ட்டிலேயே தொடர்ந்து வாழ முடிவெடுத்தார். ஏர்போர்ட் சூழல் அவரது மனநிலையை அப்படி மாற்றிவிட்டது.

ஹாலிவுட் எண்ட்ரி - 3 லட்சம் டாலர்

இவரது விசித்திரக் கதை உலக ஊடகங்களில் வைரலாக பரவியது. 2004-ல் பிரபல இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு 'தி டெர்மினல்' படத்தை எடுத்தார். இதற்காக நாசேரிக்கு சுமார் $250,000 முதல் $300,000 டாலர், இந்திய மதிப்பில் பல கோடிகள் ராயல்டியாக வழங்கப்பட்டது. பணம் கிடைத்த பிறகும் அவர் சொகுசு வாழ்க்கையை விரும்பாமல், ஏர்போர்ட் பெஞ்சிலேயே அமர்ந்து புத்தகங்களையும், சாப்பாட்டையும் வாங்கித் தன் காலத்தைக் கழித்தார்.

ஏர்போர்ட்டில் தொடங்கிய வாழ்க்கை, ஏர்போர்ட்டிலேயே முடிந்த சோகம்

2006-ல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பிறகு பாரிஸில் உள்ள சில காப்பகங்களில் வாழ்ந்து வந்தார். இறுதியில் 2022-ல் மரணத்தின் விளிம்பில் இருந்த நாசேரி, மீண்டும் தனக்குப் பிடித்தமான அதே சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கே திரும்பி வந்தார். அங்கு வந்த சில வாரங்களிலேயே, தனது 76-வது வயதில் மாரடைப்பால் அதே ஏர்போர்ட்டில் காலமானார்.

source https://tamil.indianexpress.com/international/shocking-news-missing-passport-trapped-a-man-inside-an-airport-for-18-years-12111673

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சஞ்சீவி நகர் பகுதியில், புதிய மேம்பால சுரங்கப்பாதை அமைக்கக் கோரி சுற்றுவட்டாரக் கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சென்னை-திருச்சி வழித்தடத்தில் சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (என்எச்-38) சஞ்சீவி நகா் - திருவானைக்காவல் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த 1963-ஆம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. இந்த வழித்தடம் நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டபோது, இதன் அருகே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டிற்குப் பிறகு, தற்போது 16 ஆண்டுகள் கழித்து பழைய காவிரி பாலத்தில் மீண்டும் பராமரிப்புப் பணி மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது. இதற்காக ஜூன் 25 முதல் இந்தப் பாலம் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டு, நேற்று முன் தினம் இரவு பணிகள் தொடங்கின.

பாலம் மூடப்பட்டதால் கல்லணை சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தங்களது அன்றாடத் தேவைகளுக்கும் வேலைகளுக்கும் செல்ல வெகுதூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சஞ்சீவி நகர் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுவதால், அங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இந்தச் சூழலில், பழைய பாலம் மூடப்பட்டதால் புதிய பாலத்தில் வாகனங்கள் இரு வழிப் பாதையாக (Two-way) மாற்றி இயக்கப்பட்டன. இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசலும் நேர விரையமும் ஏற்பட்டு மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். இந்த மாற்று வழிப் பாதிப்புகளைக் கண்டித்து, இன்று 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் குதித்தனர்.

பொதுமக்களின் இந்தத் திடீர் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டருக்கும் மேலாக நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. ஓயாமரி சாலை, காவிரி பாலம், மாம்பழ சாலை, திருவானைக்காவல், கும்பகோணத்தான் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 4 கி.மீ. தொலைவுக்குப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி, திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி மற்றும் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்குப் பின், சுமார் 4 மணி நேரம் நீடித்த போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் எனப் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

முன்னதாக, பேச்சுவார்த்தையின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இது பின் மோதலாக மாறியதால், போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக தூக்கி போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது ஏற்பட்ட பலத்த தள்ளுமுள்ளுவில், திருச்சி உதவி காவல் ஆணையர் விஜயகுமார் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இந்த மோதலில் பொதுமக்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவத்தால் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு நிலவியது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/public-protest-blocks-trichy-chennai-national-highway-assistant-commissioner-injured-over-50-arrested-12112521

தனியார் பள்ளி அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி

 

28 06 2026 

arasakumar

பள்ளி அனுமதி பெற்று தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி: சிக்கிய தி.மு.க பிரமுகர் பி.டி.அரசகுமார்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அரசிடம் இருந்து அங்கீகாரம் மற்றும் பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி, சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை லஞ்சமாகப் பெற்று மோசடியில் ஈடுபட்ட புகாரில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் நிறுவனர் தலைவரும், தி.மு.க நிர்வாகியுமான பி.டி. அரசகுமாரை சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்த அடுக்கடுக்கான புகார்களின் அடிப்படையில், சென்னை பெருநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்த 100 கோடி ரூபாய் மோசடி வழக்கில் இருவர் முக்கியக் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளி (A1) பி.டி. அரசகுமார் (கைது) தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தின் (பதிவு செய்யப்படாத அமைப்பு) நிறுவனர் தலைவர். சென்னை சாலிகிராமம், மெஜஸ்டிக் காலனியில் வசிக்கும் இவர், தமிழக அரசியல் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்டவர். முன்பு பா.ஜ.கவில் முக்கியப் பொறுப்பு வகித்த இவர், பின்னர் அங்கிருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது குற்றவாளி (A2) முத்துக்குமார், சங்கத்தின் பொருளாளர். இவர் பி.டி. அரசகுமாருடன் இணைந்து பள்ளி நிர்வாகிகளிடம் பேசி, பணப் பரிமாற்றங்களை ஒருங்கிணைத்த முக் கியக் கூட்டாளி ஆவார். இவர்கள் தவிர, இந்த மிகப்பெரிய முறைகேட்டில் தொடர்புடைய மேலும் சில நபர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளி நிர்வாகங்களிடம், பள்ளி அங்கீகாரம் (Recognition), பள்ளி தர உயர்வு (Upgradation) மற்றும் சி.எம்.டி.ஏ (CMDA), டிடிசிபி (DTCP) அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பூர்வ அனுமதிகளை, தங்களுக்கு கல்வித்துறை மட்டத்திலும் அரசியல் ரீதியாகவும் இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி விரைவாகப் பெற்றுத் தருவதாக இந்த இருவர் தரப்பிலிருந்தும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பள்ளி நிர்வாகிகள் இவர்களிடம் பல லட்ச ரூபாயை லஞ்சமாக கொடுத்துள்ளனர். ஒட்டுமொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், வாக்குறுதி அளித்தபடி அனுமதிகளைப் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பித் தராமலும் இவர்கள் இழுத்தடித்துள்ளனர். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தை நாடிப் புகாரளித்தனர்.

போலி வாக்குறுதி அளித்து பணம் பெற்றது, மோசடி செய்தது மற்றும் சட்டவிரோதமாகப் பணம் வசூலித்தது உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போது பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் முந்தைய தி.மு.க ஆட்சிக் காலத்தில் நடைபெற்றதாகப் புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இடைத்தரகர்களாகச் செயல்பட்ட இவர்களால் வசூலிக்கப்பட்ட லஞ்சப் பணம், அப்போதைய பள்ளிக் கல்வித்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுக்கும் கைமாறியுள்ளதா என்ற பலத்த சந்தேகம் போலீஸாருக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள், வங்கி கணக்கு பதிவுகள், ஆவணங்கள் மற்றும் தொலைபேசி தொடர்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

புகாரளித்த பள்ளி நிர்வாகங்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் மற்றும் ஆவண சோதனையில் புதிய ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், கல்வித்துறையைச் சேர்ந்த மேலும் சில முக்கியப் புள்ளிகள் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்காகப் பல்வேறு துறைகளில் இருந்து நிதி வசூலிக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது ஆளுங்கட்சி நிர்வாகி ஆதிக்கம் செலுத்திய தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார் 100 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அரசியல் மற்றும் கல்வி வட்டாரங்களில் பெரும் பரபரப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/private-school-approvals-under-scanner-100-crore-private-school-recognition-scam-dmk-leader-pt-arasakumar-arrested-by-chennai-ccb-12112719

முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீடு ரத்து செய்த தீர்ப்பு:

 இஸ்லாமிய மதத்திற்கு மாறிய நபர்களுக்கு 'பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்' (BC Muslim) என்னும் சாதிச் சான்றிதழ் மற்றும் 3.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு வழிவகை செய்த தமிழ்நாடு அரசின் 2024-ம் ஆண்டு அரசாணையைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

முஹம்மது நபியின் போதனைகள் மற்றும் குர்ஆன் நெறிமுறைகளை மேற்கோள் காட்டி, சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. ஒருவருக்கு 'முஸ்லிம் லெப்பை' சமூகச் சான்றிதழ் வழங்க மறுத்த அதிகாரிகளின் உத்தரவை உறுதிசெய்து நீதிமன்றம் இத்தீர்ப்பை அளித்துள்ளது. அதன் படி, இஸ்லாம் மதத்திற்கு மாறும் நபர், தங்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் என்று கூறி இடஒதுக்கீடு கோர முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. மேலும், இஸ்லாத்தில் சில பிரிவினரைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றும், மற்றவர்களை முன்னேறியவர்கள் என்றும் வகைப்படுத்துவது குர்ஆனின் போதனைகளுக்கு முற்றிலும் எதிரானது. இஸ்லாத்திற்கு மாறும் ஒருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம் அந்தஸ்தைக் கோர முடியாது என்பதை நாங்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறோம். அவர் ஒரு முஸ்லிம், அவ்வளவுதான் என்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு மனிதநேய மக்கள் கட்சி (மமக) தலைவர் ஜவாஹிருல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாத்தைத் தழுவிய பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான 3.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்த தீர்ப்பு சமூகநீதிக்கு முற்றிலும் எதிரானது. பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் உருவாக்கிய சமூகநீதி மண் தமிழ்நாடு. இங்கு ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கான உரிமைகளைப் பறிப்பதற்கான எந்த முயற்சியும் மக்களால் ஏற்கப்படாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசு இத்தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உயர் நீதிமன்றத்தின் பெரிய அமர்விற்கு மேல்முறையீடு செய்து, பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டைச் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் கல்வி மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு இதற்கு எதிராக உடனடியாக மேல்முறையீடு செய்யத் துணிந்துள்ளது. இஸ்லாமிய மதத்திற்கு மாறியவருக்கு 'பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்' எனும் சாதிச் சான்றிதழ் வழங்கும் அரசாணையை ரத்து செய்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் தீர்ப்பை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர்  அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-government-to-appeal-madras-hc-verdict-on-caste-certificates-for-converted-muslims-law-minister-ctr-nirmal-kumar-announces-appeal-against-high-court-verdict-12112809

ஜூன் 30-ல் சென்னையில் விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரதம்: முழு கடன் தள்ளுபடி செய்ய பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

 


PR Pandiyan

ஜூன் 30-ல் சென்னையில் விவசாயிகள் மாபெரும் உண்ணாவிரதம்: முழு கடன் தள்ளுபடி செய்ய பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்

தமிழக அரசு, 'தமிழக வெற்றிக் கழகம்' தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டிருந்த அம்சங்களின் அடிப்படையில் சிறுகுறு விவசாயிகளுக்கு 100%, பெரு விவசாயிகளுக்கு 50% நிலத்தின் அடிப்படையில் (மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின்படி) வேளாண் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்திட வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்துடன், நெல் குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் விலை நிர்ணயம் செய்து செப்டம்பர் 1-ம் தேதி முதல் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 30-ம் தேதி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்கும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

டெல்லி சேவா பவனில், மத்திய நீர்வள ஆணையத் தலைவர் அனுபம்பிரசாத், உறுப்பினர் செயலரும் மேகதாட்டு திட்டத்தின் பொறுப்பு அதிகாரியுமான யோகேஷ்பாட்டன்கர் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தார் ஆகியோரை பி.ஆர். பாண்டியன் தலைமையில் கிருஷ்ணகிரி பாலசிவபிரசாத், தொட்டியம் சஞ்சீவி ஆகியோர் நேரில் சந்தித்து 45 நிமிடங்கள் ஆலோசித்தனர்.

கர்நாடகம் உபரி நீரை மட்டுமே விடுத்து வருகிறது; காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழகத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகளைக் கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் அரசிதழ் உத்தரவின் படி 15 ஆண்டுகளுக்கு இதில் எந்த மாற்றமும் செய்ய இயலாது. எனவே, கர்நாடகாவின் மேகதாட்டு வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையம் திருப்பி அனுப்ப வேண்டும். மைசூரில் 2024-ல் இரு மாநில விவசாயிகளும் ஒன்றாக அமர்ந்து பேசியபோது, மேகதாட்டு அணை கர்நாடக விவசாயிகளுக்கே தேவையில்லை என அவர்கள் தீர்மானித்துள்ளனர். ஏனெனில், கிருஷ்ணராஜசாகர் அணைக்குக் கீழே மேகதாட்டு கட்டப்பட்டால், பற்றாக்குறை காலத்தில் குடிநீர் என்கிற பெயரில் மேகதாட்டுக்கே முன்னுரிமை கொடுக்கப்பட்டு கிருஷ்ணராஜசாகர் அணை புறக்கணிக்கப்படும். அதற்குப் பதிலாக 'ராசிமணல்' பகுதியில் தமிழகம் அணைக்கட்டிக் கொண்டால் கர்நாடகம் தேவையான குடிநீரை எடுத்துக் கொள்ளலாம் என இரு மாநில விவசாயிகளும் முடிவெடுத்துள்ளனர்.

காவிரி டெல்டாவில் கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்திற்கு 6 ஆண்டுகளாக மத்திய அரசு அனுமதி தராததால் கடல் நீர் உட்புகுவதைத் தடுக்க முடியவில்லை. இது குறித்து மத்திய அதிகாரிகள் பேசுகையில், வெண்ணாறு கடல் முகத்துவார நதிகள் மறுசீரமைப்புத் திட்டத்திற்குத் தங்களுக்கு அனுமதி தரத் தயாராக இருப்பதாகவும், ஆனால் இத்திட்டத்தைத் திரும்பப் பெறுவதாகத் தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்தனர். நடப்பு 2026-ம் ஆண்டில் காவிரி டெல்டாவில் குறுவைச் சாகுபடிக்குத் தண்ணீர் இல்லாமல் நிலங்கள் வறண்டு கிடப்பதாகவும், இதனால் டெல்டா விவசாயிகள் மிகப்பெரிய இழப்பைச் சந்தித்திருப்பதாகவும் பி.ஆர். பாண்டியன் சுட்டிக்காட்டினார்.

மத்திய அதிகாரிகள் இதுகுறித்து பேசுகையில், நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு உரிய 78 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டில் உள்ளதாக கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டனர். இதற்குப் பதில் அளித்த பி.ஆர். பாண்டியன், கர்நாடக தலைமைச் செயலாளரின் கடிதம் உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாமல் நிலங்கள் தரிசாக கிடக்கின்றன. தவறான தகவல் எழுதிய கர்நாடக தலைமைச் செயலருக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய அதிகாரிகள், மேகதாட்டு விவகாரத்தில் சட்டப்படியும், நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும் மட்டுமே முடிவெடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மேலும், விரைவில் கர்நாடகா மற்றும் தமிழக காவிரி டெல்டா பாசனப் பகுதிகளையும், அணைகளையும் நேரில் பார்வையிட முன்கூட்டியே தகவல் தெரிவித்துவிட்டு வருவதாக உறுதி அளித்துள்ளனர். இச்சந்திப்பு தமிழக விவசாயிகளுக்குப் பெரும் நம்பிக்கை அளிப்பதாக பி.ஆர். பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/truth-behind-delta-kuruvai-crisis-farmers-to-hold-massive-fasting-protest-in-chennai-on-june-30-demanding-complete-loan-waiver-12112820

பள்ளி மாணவர்களின் ஐ.டி. கார்டில் சாதியா?

 

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள அடையாள அட்டைகளில் (ID Card) சாதி விவரங்கள் இடம் பெறுமா என்பது குறித்து எழுந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் இன்று தெளிவான விளக்கமளித்துள்ளார்.

மாணவர்கள் ஆண்டுதோறும் சாதி சான்றிதழ் வாங்குவதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் வகையில் புதிய மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களிடம் அவர் கூறுகையில், 

”இப்போ பள்ளிக்குச் செல்லுகிற குழந்தைகள் அனைவருக்கும் ஜாதி சான்றிதழை வாங்குவதற்கு, மாற்றத்தை உருவாக்குவதற்காக நடவடிக்கை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். 'ஐ.டி. கார்டு' என்று சொல்லப்படுகிற ஒரு அட்டையை வழங்கலாம் என்று நாங்கள் முடிவு செய்திருக்கிறோம்.

10, 12 ஆம் வகுப்பில் படிக்கின்ற மாணவர்களுக்கு முதற்கட்டமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களின் முகவரி, ஜாதி சான்றிதழ், பிளட் குரூப், ஆதார் மற்றும் தொலைபேசி எண் அனைத்தும் அதில் இணைக்கப்படும்” என்று கூறினார்.

நேற்றைய அறிவிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பிய நிலையில், அது குறித்து அமைச்சர் இன்று விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறையும், வருவாய்த்துறையும் இணைந்து இந்த 'டேட்டா' சேகரிப்புப் பணிகளைப் பரிசீலித்து வருவதாக அவர் கூறினார்.

இதுதொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

”மாணவர்களுக்கு வழங்கப்படும் ஐ.டி. கார்டில் சாதி அடிப்படை இருக்காது. பள்ளிகளில் மாணவர்களிடையே சாதி, மத வேறுபாடுகள் இருக்கக் கூடாது என்பதே அரசின் நோக்கம்.

விபத்து போன்ற அவசர காலங்களில் மாணவர்களுக்கு உடனுக்குடன் நிவாரணப் பணிகள் வழங்கவும், பெற்றோரைத் தொடர்பு கொள்ளவும் மட்டுமே முகவரி, பிளட் குரூப், ஆதார் அட்டை போன்ற விவரங்கள் க்யூ ஆர் கோடு (QR Code) மூலமாக இணைக்கப் பரிசீலிக்கப்படுகிறது.

கடந்த ஐந்தாண்டுகளாக வருவாய்த்துறை மூலம் பள்ளிகளிலேயே நேரடியாகச் சென்று 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கும் பணி தடையின்றி நடைபெற்று வருகிறது; அது தொடரும்” என்றார்.

தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம்: அமைச்சர் வேண்டுகோள்

பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர், நேற்றைய பேச்சில் ஏற்பட்ட குழப்பத்தைத் தீர்க்கும் வகையில் பின்வருமாறு கூறினார்:

"பள்ளியிலேயே சாதி சான்றிதழ் வழங்கப்படும் போது இந்த டேட்டாக்களும் சேகரிக்கப்படும் என்றுதான் கூறினேன். மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி விவரங்களைப் போடும் வழக்கம் என்றைக்குமே இல்லை. மாணவர்கள் அனைவரும் ஒன்றுதான், எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்பதுதான் நம் கல்வித்துறையின் நோக்கம்."

இதன் மூலம், பள்ளி மாணவர்களின் அடையாள அட்டையில் சாதி அடையாளங்கள் எதுவும் இடம் பெறாது என்பது தெளிவாகியுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/minister-sengottaiyan-school-student-id-card-caste-certificate-controversy-12111887

இவர் டெல்லியில் தமிழக பிரதிநிதியாக செயல்படுவாரா?

 

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமைச்சருக்கு இணையான அந்தஸ்தும் அதிகாரமும் கொண்ட இந்த உயர் பதவியின் அதிகாரப்பூர்வக் காலம் ஓராண்டு மட்டுமே என்ற போதிலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி நீடிக்கும் வரை இப்பதவிக்காலம் மேலும் நீட்டிக்கப்படவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து முறைப்படிப் பெற்றுத் தருவதுமே இந்தச் சிறப்புப் பிரதிநிதியின் முதன்மையான மற்றும் முக்கியப் பொறுப்பாகும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த பொறுப்புக்கு தனது படத்தை தயாரித்தவரான ர்நாடக மாநிலத்தை சேர்ந்த வெங்கட நாராயணா-வுக்கு விஜய் வழங்கியிருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.  

இந்நிலையில், தமிழகத்தின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட் நாராயணா நியமனம் செய்த முதல்வர் விஜய் அரசுக்கு தி.மு.க எம்.பி-க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா,  பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அ.ம.மு.க தலைவர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். 

"தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?” - கனிமொழி கேள்வி

  இந்நிலையில், தி.மு.க எம்.பி., கனிமொழி முதல்வர் விஜய்க்கு இரண்டு கேள்விகளை எழுப்பி இருக்கிறார். இது குறித்த சமூக வலைதள பதிவில், "இரண்டு கேள்விகள் தான் எழுகின்றன.

1. தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?

2. மேகதாது அணைக் கட்டும் விவகாரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த பிரச்சனைகளில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நபர் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக செயல்படுவாரா? அல்லது அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவின் பிரதிநிதியாக செயல்படுவாரா?" எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/kanimozhi-karunanidhi-venkat-narayana-vijay-govt-appointment-tamil-news-12111439

சனி, 27 ஜூன், 2026

ஜனநாயக விரோத தீர்ப்பு

 

4-வது முறையாக பதவி நீட்டிப்பு ஏன்?

 

Tushar Mehta Solicitor General

மோடி அரசின் ‘டாப் கோர்ட் உத்திவகுப்பாளர்’ துஷார் மேத்தாவிற்கு 4வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது ஏன்?

எழுதியவர்: வினித் பல்லா

இந்தியாவின் இரண்டாவது மிக நீண்ட காலம் பணியாற்றிய சொலிசிட்டர் ஜெனரல் (Solicitor General) என்ற பெருமையைப் பெற்றவர் 61 வயதான துஷார் மேத்தா. 2018-ல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட அவருக்கு, தற்போது ஜூன் 20 அன்று 4-வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 2029 ஆம் ஆண்டு வரை அவர் இப்பதவியில் நீடிப்பார்.

27 6 2026 

காஷ்மீர் விவகாரம், ராமர் கோவில், குடியுரிமைச் சட்டம் முதல் தேர்தல் பத்திரங்கள் வரை மோடி அரசின் மிக முக்கியமான, அரசியல் ரீதியாக தாக்கத்தை ஏற்படுத்திய வழக்குகளில் நீதிமன்றத்தில் அரசாங்கத்தின் முதன்மை அரணாக விளங்கியவர் துஷார் மேத்தா.

நீதிமன்றத்தில் மோடி அரசின் முதன்மைக் குரல்

அரசியலமைப்புச் சட்டப்படி நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சட்ட அதிகாரியான சொலிசிட்டர் ஜெனரல் பதவி, துஷார் மேத்தாவின் வருகைக்குப் பிறகு நீதிமன்றங்களில் அரசாங்கத்தின் மிக முக்கியக் குரலாக உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பு குஜராத் அரசில் நரேந்திர மோடியின் கீழ் கூடுதல் தலைமை வழக்கறிஞராகப் (Additional Advocate General) பணியாற்றிய மேத்தா, 2014-ல் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டு, 2018-ல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றார்.

நிர்வாகம், நாட்டின் பாதுகாப்பு அல்லது பொதுக் கொள்கை தொடர்பான விஷயங்களில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவுகளுக்கே நீதிமன்றங்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது இவரது முதன்மையான வாதமாக இருந்து வருகிறது.

ஆங்கிலத்தில் வாசிக்க

இவரது கடுமையான உழைப்பு மற்றும் வாதாடும் திறனை சக வழக்கறிஞர்களும், மாற்றுத் தரப்பு வழக்கறிஞர்களும் பாராட்டுகின்றனர். 

அரசியலமைப்புச் சட்டம் சார்ந்த பல விவகாரங்களில் மேத்தாவிற்கு எதிராக ஆஜராகியுள்ள மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிடம் பேசுகையில், "மேத்தா அரசாங்கத்திற்காகத் தீவிரமாகப் போராடக்கூடியவர்; ஆரம்ப நாட்களிலிருந்து அவர் தன்னை மிகவும் செப்பனிட்டுக் கொண்டுள்ளார். தனக்குக் கீழ் வலுவான ஒரு இளநிலை வழக்கறிஞர்கள் குழுவையும் உருவாக்கியுள்ளார். மேலும், தவறுகள் நடக்கும் பட்சத்தில், நீதிமன்றம் எந்தவொரு கடுமையான உத்தரவையும் பிறப்பிக்கும் முன்பே, அதைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சரிசெய்ய அவர் தயங்குவதில்லை” என்று ஹெக்டே கூறினார்.

அவரது இக்கட்டான சூழல்களைக் கையாளும் திறனை, அவருடன் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகப் பணியாற்றிய மூத்த வழக்கறிஞர் ஆத்மாராம் என்.எஸ். நத்கர்னியும் ஒப்புக்கொள்கிறார். இருவரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல்களாக இருந்தபோது ஒன்றாகப் பணியாற்றியவர்கள். மேத்தாவை ஒரு "வலிமைமிக்க வழக்கறிஞர்" என்று அழைக்கும் அவர், உச்ச நீதிமன்றம் மட்டுமின்றி டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் பல நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் ஆஜராகும் அவரது மேலாண்மைத் திறனை வியந்து பாராட்டுகிறார். இவ்வளவு வேலைப்பளுவிலும் அவர் ஒருபோதும் நீதிமன்றத்தில் நிதானத்தை இழந்ததில்லை என்றும் நத்கர்னி கூறுகிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கத்தில் 1950 முதல் 1963 வரை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த சி.கே. தப்தாரிக்கு (C K Daphtary) அடுத்தபடியாக, மிக நீண்ட காலம் இப்பதவியில் இருக்கும் பெருமை துஷார் மேத்தாவையே சேரும்.

துஷார் மேத்தாவின் முக்கிய நீதிமன்ற வெற்றிகள்

ரஃபேல் ஒப்பந்தம் (Rafale deal):

மேத்தாவின் மேசைக்கு வந்த ஆரம்பக்கால முக்கிய வழக்குகளில் ஒன்று, ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்திற்கு எதிரான சவால் ஆகும். இதில் கொள்முதல் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி விசாரணை கோரப்பட்டது. முறைகேடு நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இல்லாதவரை, பாதுகாப்பு கொள்முதல் மற்றும் இராணுவத் தயார்நிலை குறித்த கேள்விகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று மேத்தா வாதிட்டார். உச்ச நீதிமன்றம் இறுதியாக டிசம்பர் 2018-ல் பிறப்பித்த உத்தரவில், இந்த ஒப்பந்தத்தில் தலையிட மறுத்துவிட்டது. காங்கிரஸ் இந்த ஒப்பந்தத்தை ஒரு பெரிய அரசியல் ஆயுதமாக மாற்றியிருந்த நிலையில், 2019 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மோடி அரசுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்தது.

ராமர் கோவில் (Ram temple):

மேத்தா ஆஜரான மற்றொரு முக்கிய வழக்கு ராம் ஜென்மபூமி தகராறு ஆகும். நவம்பர் 2019-ல், உச்ச நீதிமன்றம் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை ராமர் கோவிலுக்காக அரசாங்கத்தால் நடத்தப்படும் அறக்கட்டளையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில் மசூதிக்காக அயோத்தியில் மாற்று இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்யப் பணித்தது. இதன் மூலம் பா.ஜ.க-வின் முக்கிய கொள்கைகளில் ஒன்றாக நீண்டகாலமாக இருந்த ஒரு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370 (Article 370):

ஆகஸ்ட் 5, 2019 அன்று மோடி அரசாங்கத்தால் இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதன் மூலம் பா.ஜ.க-வின் மற்றொரு கொள்கை ரீதியான லட்சியத்தை நிறைவேற்றியது. ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வின் முன் ஆஜரான மேத்தா, பிரிவு 370 என்பது ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே என்றும், 2019-ல் ஜம்மு-காஷ்மீர் குடியரசுத் தலைவர் ஆட்சியின் கீழ் இருந்தபோது, நாடாளுமன்றம் செல்லுபடியாகும் வகையில் சட்டமியற்றும் அதிகாரங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் வாதிட்டார். டிசம்பர் 2023-ல், உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் முடிவை ஒருமனதாக உறுதி செய்தது.

குடியுரிமைப் பிரச்சனைகள் (Citizenship issues):

குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 6A-க்கு எதிரான சவால்கள் தொடர்பான வழக்கின் போது, சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை மேத்தா ஆதரித்துப் பேசினார். பிரிவு 6A என்பது 1985-ஆம் ஆண்டின் அஸ்ஸாம் ஒப்பந்தத்திற்குப் பிறகு சேர்க்கப்பட்ட ஒரு சிறப்பு விதியாகும், இது அஸ்ஸாமில் குடியுரிமையைத் தீர்மானிப்பதற்கான ஒரு தனி கட்டமைப்பை உருவாக்கியது. அரசியலமைப்பு அமர்வு இந்த விதியை உறுதிசெய்து, மத்திய அரசு முன்வைத்த வாதங்களை ஏற்றுக்கொண்டது. நாடாளுமன்றம் குடியுரிமை (திருத்தச்) சட்டத்தை (CAA) இயற்றிய பிறகும் அரசாங்கத்தின் குடியுரிமை அணுகுமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் பரிசீலனையில் இருக்கும் வேளையில், அண்டை நாடுகளில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுபான்மையினருக்குச் சிறப்பு குடியுரிமை வழிகளை உருவாக்க நாடாளுமன்றத்திற்கு முழு உரிமை உண்டு என்று மேத்தா தொடர்ந்து வாதிட்டு வருகிறார்.

கோவிட் (Covid):

நாடு தழுவிய ஊரடங்கின் போது ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப முயன்றபோது, அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது மேத்தா அரசின் நிர்வாக நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வாதாடினார். பிஎம் கேர்ஸ் (PM CARES) நிதி தொடர்பான வழக்கிலும் இதே போன்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிதியை அதிக வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு பொது அதிகார அமைப்பாக (Public Authority) கருத வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. பிஎம் கேர்ஸ் நிதியை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கொண்டு வரக் கோரிய மனுக்கள் இறுதியாக ஆகஸ்ட் 2020-ல் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன.

பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA):

விசாரணை முகமைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் நிர்வாகத்தின் அதிகாரத்தை மேத்தா வலுப்படுத்தியுள்ளார். 2022 ஆம் ஆண்டில், அமலாக்க இயக்குனரகத்திற்கு (ED) விரிவான விசாரணை அதிகாரங்களை வழங்கும் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்குவதைக் கட்டுப்படுத்தும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் முக்கிய விதிகளுக்கு எதிரான சவால்களை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. பணமோசடி என்பது சர்வதேச அளவிலான ஒரு கடுமையான பொருளாதாரக் குற்றமாகும், இதை திறம்பட விசாரிக்கச் சிறப்பு அதிகாரங்கள் தேவை என்று மேத்தா வாதிட்டார். ஜூலை 2022-ல், உச்ச நீதிமன்றம் இந்தச் சட்டத்தை பெருமளவில் உறுதி செய்து, அமலாக்கத்துறையின் (ED) அதிகாரங்களை வலுப்படுத்தியது.

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர் (EWS):

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான 10% இடஒதுக்கீட்டிற்கு எதிரான சவாலிலும் மேத்தா வெற்றி பெற்றார். நவம்பர் 2022-ல், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு இந்த இடஒதுக்கீட்டை உருவாக்கிய சட்டத்திருத்தத்தை உறுதி செய்தது. பொருளாதாரப் பின்தங்கிய நிலை என்பது சமூக முன்னேற்றத்திற்கான ஒரு தனி அடிப்படையாக இருக்க முடியும் என்ற அரசாங்கத்தின் வாதத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (UAPA): 

நாட்டின் முதன்மை பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் நடக்கும் விசாரணைகள் மற்றும் ஜாமீன் விண்ணப்பங்களின் போது, ஜாமீன் வழங்குவதை பரிசீலிக்கும் போது நீதிபதிகள் குற்றச்சாட்டுகளின் தீவிரம் மற்றும் பரந்த பாதுகாப்பு விளைவுகளைக் கருத்தில் கொள்ள வேண்டும் என்று சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டுள்ளார். வழக்கிற்கு வழக்கு முடிவுகள் மாறினாலும், மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட பரந்த சட்டக் கட்டமைப்பு பெருமளவில் அப்படியே உள்ளது.

தேசத்துரோகச் சட்டம் (Sedition):

முந்தைய ஐபிசி (IPC)-ன் கீழ் இருந்த தேசத்துரோகச் சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு சவாலின் போது, மத்திய அரசு ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. சட்டத்தை அதன் தற்போதைய வடிவத்தில் பாதுகாப்பதற்குப் பதிலாக, அரசாங்கம் இந்த விதியை மறுபரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் மேத்தா தெரிவித்தார். இந்த நடவடிக்கைகள் புதிய தேசத்துரோக வழக்குகளைப் பதிவு செய்வதற்குக் தற்காலிகத் தடையை ஏற்படுத்தின.

நீதிமன்றத்தில் சந்தித்த பின்னடைவுகள்

அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றாலும், சில முக்கிய விவகாரங்களில் துஷார் மேத்தாவின் வாதங்களை நீதிமன்றம் ஏற்கவில்லை:

பெகாசஸ் விவகாரம் (Pegasus litigation):

பெகாசஸ் உளவு மென்பொருள் வழக்கின் போது, அரசாங்கத்தின் வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை. பத்திரிகையாளர்கள், ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக அரசாங்க அமைப்புகள் உளவு மென்பொருளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட மேத்தா, தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு எப்போதும் திறந்த நீதிமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று வாதிட்டார். ஆனால், அக்டோபர் 2021-ல், உச்ச நீதிமன்றம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அப்படியே ஏற்றுக்கொள்ள மறுத்து, இக்குற்றச்சாட்டுகளை ஆராய ஒரு நிபுணர் குழுவை நியமித்தது.

தேர்தல் பத்திரங்கள் வழக்கு (Electoral bonds case):

இது அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மற்றொரு பெரிய தோல்வியாகும். அநாமதேய அரசியல் நன்கொடைகள் கொடையாளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கின்றன மற்றும் முறையான வங்கிப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கின்றன என்று மத்திய அரசு வாதிட்டது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு பிப்ரவரி 2024-ல் இந்தத் திட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

அடுத்த சவால்கள் (2026 - 2029)

தற்போது 2029 வரை பதவி நீட்டிப்பு பெற்றுள்ள துஷார் மேத்தா, அடுத்த சில ஆண்டுகளில் மோடி அரசுக்கு மிக முக்கியமான பல வழக்குகளில் ஆஜராக உள்ளார். குறிப்பாக:

வக்ஃப் (திருத்தச்) சட்டம் (Waqf Amendment Act) சவால்கள்

மதமாற்ற தடைச் சட்டங்கள் (Anti-conversion laws)

வழிபாட்டுத் தலங்கள் சட்டம் (Places of Worship Act)

போன்ற விவகாரங்களில் மத்திய அரசின் சட்டப் பாதுகாப்பு அரணாக துஷார் மேத்தா தொடர்ந்து செயல்பட உள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/tushar-mehta-solicitor-general-tushar-mehta-cases-supreme-court-landmark-judgments-india-12109346

முடிவுக்கு வரும் பரந்தூர் விமான நிலைய திட்டம்... ரெடியாகும் மாற்று இடம்?

 முடிவுக்கு வரும் பரந்தூர் விமான நிலைய திட்டம்... ரெடியாகும் மாற்று இடம்? 27 6 2026 

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருந்த சென்னைக்கான 2-வது பசுமைவெளி விமான நிலையத் திட்டம், அதிகாரப்பூர்வமாக கைவிடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சி. ஜோசப் விஜய் தலைமையிலான தற்போதைய தமிழக அரசு, பரந்தூரில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதில்லை என்றும் விமான நிலையத்திற்கு ஏற்ற மாற்று இடத்தை ஆராய தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

பரந்தூரில் விமான நிலையம் இல்லை

அதாவது, "சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கண்டிப்பாகத் தேவை. ஆனால் அது பரந்தூரில் அமையாது. இது குறித்த தேவையான அறிவுறுத்தல்கள் ஏற்கனவே அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டன, மாற்று இடங்கள் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன" என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஏகனாபுரம் 7 ஆண்டு கால போராட்டம்

விமான நிலைய அறிவிப்பு வெளியான டிசம்பர் 16, 2019-ஆம் ஆண்டு முதல் பரந்தூர் அருகே உள்ள ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். இந்தத் திட்டத்திற்காகக் கையகப்படுத்தத் திட்டமிடப்பட்ட 1,005 வீடுகளில், 605 வீடுகள் ஏகனாபுரத்தில்தான் இருந்தன. கிராமத்தின் 920 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலை இருந்ததால், மொத்த கிராமமே வரைபடத்திலிருந்து அழியும் அபாயம் இருந்தது.

13 கிராமங்களின் 5,746 ஹெக்டேர் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளைக் கையகப்படுத்த கடந்த தி.மு.க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தது. ஆனால், மக்கள் தொடர் உண்ணாவிரதம், மொட்டையடித்தல், பிச்சை எடுக்கும் போராட்டம் எனப் பல வழிகளில் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.

தமிழ்நாட்டில் மாறிய அரசு

கடந்த ஜனவரி 20, 2025 அன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், போராட்டக் களத்திற்கு நேரடியாகச் சென்று விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். "மக்களின் முன்னேற்றத்திற்கு வளர்ச்சி தேவைதான். நான் விமான நிலையமே வேண்டாம் என்று சொல்லவில்லை, விவசாய நிலங்களையும், நீர்நிலைகளையும் அழித்துவிட்டு இந்த இடத்தில் அது வரக்கூடாது என்றுதான் சொல்கிறேன்" என விஜய் அப்போது பேசியிருந்தார். தற்போது அவர் முதல்வர் பொறுப்பேற்றுள்ள நிலையில், விவசாயிகளுக்குக் கொடுத்த அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாகவே இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 1,700 ஏக்கர் நிலத்தின் நிலை என்ன?

கடந்த இரண்டரை ஆண்டுகளில் இந்தத் திட்டத்திற்காகச் சுமார் 1,700 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டு, 70% இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டுவிட்டது. தற்போது இந்த நிலங்களை என்ன செய்வது என்ற புதிய சவால் அரசுக்கு எழுந்துள்ளது. இந்த இடத்தில் விவசாயத் தொழிலை மேம்படுத்தும் வேளாண் பதப்படுத்தும் மையங்கள், விவசாய சந்தை உள்கட்டமைப்பு, பட்டுப் பூங்கா  அல்லது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

மாசுகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் விவசாயத்தைப் பாதுகாக்கும் தொழிற்சாலைகள் மட்டுமே இங்கு அனுமதிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் விஜய் விரைவில் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிரடி சரிவில் ரியல் எஸ்டேட் மார்க்கெட்

விமான நிலையம் வரும் என்ற நம்பிக்கையில் பரந்தூர், காரை மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராமங்களில் நிலங்களை அதிக விலைக்கு வாங்கிய முதலீட்டாளர்களும், பில்டர்களும் தற்போது பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். முன்பு நிலத்தின் விலை பல மடங்கு எகிறிய நிலையில் தற்போது விமான நிலையம் வரப்போவதில்லை என்ற செய்தி பரவியதும் நிலத்தை வாங்குவதற்கு ஆள் இல்லாமல் வந்த விலைக்கு விற்று வருவதாக தெரிகிறது. 


source https://tamil.indianexpress.com/tamilnadu/parandur-airport-plan-end-tn-govt-explores-new-site-for-chennais-second-airport-12110674