புதன், 2 செப்டம்பர், 2026

10 லட்சம் கோடி கடன் அபாயம்? 5 ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்தால் என்ன நடக்கும்?

 source https://tamil.indianexpress.com/tamilnadu/edappadi-palaniswami-press-meet-coimbatore-tn-state-debt-vijay-tvk-12481566


Edappadi Palaniswami press meet Coimbatore TN state debt Vijay TVK

“110 நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது; இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது” – எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!:

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்து அளித்த விரிவான பேட்டி:

"தற்போது தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள், சினிமாவில் சட்டமன்றக் காட்சி எப்படி இருக்குமோ அதேபோலத்தான் இருக்கிறது. சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரடி ஒளிபரப்பு செய்தால்தான், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தங்களது தொகுதிப் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவது மக்களுக்குத் தெரியவரும். துறை சார்ந்த கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதில் அளிக்க வேண்டும்; அதை விடுத்து சில அமைச்சர்கள் மட்டுமே பதிலளிப்பது சரியான நடைமுறை அல்ல.

சபாநாயகர் 10 மணி நேரம் சட்டமன்றத்தை நடத்துகிறார், அடுத்து 24 மணி நேரம் நடத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அனைவருக்கும் பேச வாய்ப்பு தருவதை வரவேற்கிறோம், அதேவேளையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி குறிப்பிட்ட நேரத்தில் சட்டமன்றத்தை முடிப்பதே முறை. நாளை மறுநாள் காவலத்துறை மானியக் கோரிக்கையின் போது, தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு குறித்த பல முக்கிய பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

தமிழக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களே ஆகியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துவிட்டது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. ஆட்சிக்கு வரும் முன்பு நடவடிக்கை எடுப்போம் என்று கூறிவிட்டு, வந்த பிறகு நிர்வாக சீர்கேட்டால் குற்றங்கள் அதிகரிக்க வழிவகுத்துள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்திற்கு அதிக கடன் இருக்கிறது. கடந்த காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் இருந்த நிலையில், தற்போதைய தொடர் செலவின அறிவிப்புகளால் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் கடன் தொகை 10 லட்சம் கோடி ரூபாயாக உயரும் அபாயம் உள்ளது. மின்சாரத் துறையில் 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருப்பதாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் தேவையான அளவிற்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், இந்த அரசு வருவாயைப் பெருக்காமல் செலவினங்களை மட்டுமே அதிகரிக்கும் திட்டங்களைக் கொண்டுவருகிறது.

போக்குவரத்துத்துறையில் ஆயுட்காலம் முடிந்த பழைய பேருந்துகளை தொடர்ந்து இயக்குவது பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல். புதிய பேருந்துகளை வாங்குவதாகக் கூறும் இந்த அரசு, ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்குவது உட்பட திட்டமிடாத செயல்பாடுகளையே மேற்கொள்கிறது.

மாநிலம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை பல இடங்களில் சோதனை நடத்தி பணத்தை பறிமுதல் செய்கிறது. சோதனை நடந்த இடங்களிலேயே இவ்வளவு சிக்கினால், சோதனை நடக்காத இடங்களில் ஊழல் எந்த அளவுக்கு இருக்கும்? அதிமுக ஆட்சியில் இத்தகைய சோதனைகளை விளம்பரம் செய்யவில்லை. ஆனால், தற்போதைய அரசு ரீல்ஸ் போட்டு விளம்பரம் செய்வதிலேயே கவனம் செலுத்துகிறது — ‘ரீல்ஸ் போட்டு வண்டி ஓட்டுகிறார்கள்; ரியல் ஏதும் இல்லை’.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மேட்டூர் அணையை காணொலி மூலம் திறந்துவைத்தார். தற்போதைய முதலமைச்சர் தனி விமானத்தில் செல்வது குறித்து கேட்டால், ‘அவர் காஸ்ட்லி முதலமைச்சர்; நாங்கள் விவசாயி’ என்பதுதான் என் பதில்.

பிரதமர் பதவி குறித்த கேள்விகளுக்கு, யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம், அது அவரவர் விருப்பம். அதிமுக இந்திய கூட்டணியில் தொடர்கிறது; மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை பணிகள் முடிவடைந்த பின்னரே உள்ளாட்சித் தேர்தல் சாத்தியமாகும்.

ஆட்சிப் பொறுப்பேற்று 110 நாட்களிலேயே செவிலியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், பகுதி நேர ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்துகின்றனர். அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.

சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, கடனை அதிகரிக்கும் திட்டமிடாமை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது தெளிவாகிறது."

இவ்வாறு இ.பி.எஸ். செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

(அதிமுக உள்கட்சிச் சங்கடங்கள் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்).

- பி. ரஹ்மான், கோவை.