நாம் எந்தவொரு நற்காரியத்தைச் செய்வதாக இருந்தாலும் அதை அல்லாஹ்
அங்கீகரித்து அழகிய கூலியைத் தரவேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அதை
விடுத்து, அடுத்தவர் மெய்சிலிர்க்க வேண்டும்; பாராட்டிப் புகழ வேண்டும் என்ற நோக்கத்தோடு
அமல் செய்பவர்களாக நாம் இருக்கக்கூடாது. இவ்வாறு மற்றவர்களின்
கைத்தட்டல்களுக்காக செயல்படுவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய நற்கூலியைத்
தரமாட்டான். மேலும் இவர்களை மறுமை நாளில் மற்ற மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்
அடையாளப்படுத்துவான். மஹ்ஷரில் நம்பிக்கை கொண்ட மக்கள் படைத்தவனுக்கு
ஸஜ்தா செய்யும் போது இவர்களால் மட்டும் ஸஜ்தா செய்ய முடியாது.
இவர்களின் முதுகுகள் கட்டை போன்று மாற்றப்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரத்தைக் காண்போம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியளிப்பதற்காகத்) திரையை அகற்றித் தன்
காலை வௌிப்படுத்தும் அந்த (மறுமை) நாளில், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும்,
இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிர வணக்கம்
(சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்களின் பாராட்டைப்
பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள்
மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,)
அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.
அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி),
நூல்: புகாரி 4919