14 08 2025
/indian-express-tamil/media/media_files/2025/08/14/sanitation-workers-arrest-2025-08-14-07-11-03.jpg)
13 நாட்கள் போராடிய தூய்மைப் பணியாளர்கள் நள்ளிரவில் கைது: நீதிமன்ற உத்தரவுபடி நடவடிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சியில் ராயபுரம் மற்றும் தி.ரு.வி.க. நகர் மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்து, கடந்த 13 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள், நேற்றிரவு போலீசார் கைது செய்யப்பட்டனர்.
சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலம் 5 (ராயபுரம்) மற்றும் மண்டலம் 6 (தி.ரு.வி.க. நகர்) ஆகியவற்றில் திடக்கழிவு மேலாண்மைப் பணி, ஜூலை 16, 2025 முதல் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 300-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ரிப்பன் கட்டிடம் முன்பு தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டம் இரவு, பகல் பாராமல் 13 நாட்கள் தொடர்ந்தது. இப்போராட்டத்திற்கு அ.தி.மு.க., த.வெ.க., பா.ஜ.க., மார்க்சிஸ்ட் கம்யூ., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், திரைப்பிரபலங்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அனுமதிக்கப்படாத இடத்தில் போராட்டம் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. போராட்டக்காரர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவை மீறினால் அவமதிப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
இதற்கிடையில், அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் தூய்மைப் பணியாளர்களுடன் 8-ம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், சில நிமிடங்களிலேயே பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால், முதல்வர் தலைமையில் மட்டுமே இனி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 800 முதல் 900 தூய்மைப் பணியாளர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். 10-க்கும் மேற்பட்ட போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு அவர்கள் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நடவடிக்கையின்போது சில பெண் பணியாளர்கள் மயக்கமடைந்ததாகவும், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரவு நேரத்தில் பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களின் கைகள் உடைக்கப்பட்டதாகவும், ஆடைகள் கிழிக்கப்பட்டதாகவும் நீலம் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் தரப்பு வழக்கறிஞர் பாரதி கூறினார். பெண் போராளிகளை ஆண் காவல்துறையினர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், இது தமிழ்நாடு அரசின் காவல்துறையினரால் மோசன செயல் என்றும் பாரதி கூறினார்.
இந்தப் போராட்டத்தின் வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், தமிழ்நாட்டு மக்களுக்கு நீதி வேண்டும் எனவும் மாணவர்கள், இளைஞர்கள், ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் நீதிக்குப் போராட அழைப்பு விடுப்பதாகவும் வழக்கறிஞர் பாரதி கூறினார். தற்போது, போராட்டம் நடைபெற்ற ரிப்பன் மாளிகை பகுதியில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-corporation-sanitation-workers-protest-police-arrests-at-midnight-9658259