ஆடிட்டர் இனி தேவை இல்லை; பணம் மிச்சம்! நீங்களே ஐ.டி.ஆர். தாக்கல் செய்வது எப்படி?
/indian-express-tamil/media/media_files/2025/08/13/filing-your-income-tax-return-itr-2025-08-13-22-44-29.jpg)
ஆடிட்டர் இனி தேவை இல்லை; பணம் மிச்சம்! நீங்களே ஐ.டி.ஆர். தாக்கல் செய்யலாம்
வருமான வரி தாக்கல் செய்வது பல ஆண்டுகளாக ஆடிட்டர் (CA) மட்டுமே செய்யக்கூடிய வேலையாகப் பார்க்கப்பட்டது. பெரும்பாலானோர், தவறுகள் செய்துவிடுவோமோ? அல்லது சிக்கலான படிவங்களில் குழம்பிவிடுவோமோ? என்ற பயத்தில், தொழில்முறை ஆடிட்டர்களுக்கு கட்டணம் செலுத்தி வந்தனர். ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. pre-filled ITR படிவங்கள் மூலம், இந்த செயல்முறை மிக எளிமையாகவும், வேகமாகவும் மாறியுள்ளது.
உங்கள் வருமான வரி விவரங்கள் பெரும்பாலானவை தானாகவே நிரப்பப்பட்டிருக்கும். நீங்கள் செய்ய வேண்டியது, அந்த விவரங்களை சரி பார்த்து, தேவையான திருத்தங்களை செய்து, உறுதிப்படுத்தி, பின்னர் சமர்ப்பிப்பது மட்டுமே. இதன்மூலம், இடைத்தரகரை தவிர்த்து, பணத்தை மிச்சப்படுத்தி, வீட்டிலிருந்தபடியே ITR தாக்கல் செய்யலாம். மிகவும் சிக்கலான வருமான வரி கணக்குகளுக்கு இன்னமும் ஆடிட்டர்களின் உதவி தேவைப்படலாம். ஆனால், பெரும்பாலான சம்பளம் வாங்குபவர்களுக்கு, சொந்தமாக ITR தாக்கல் செய்வது மிகவும் எளிதான ஒன்றாகும்.
உங்களுக்கு ஆடிட்டர் தேவையா?
ITR தாக்கல் செய்யும் முறை எளிதானதால், எல்லோருக்கும் இப்போது ஆடிட்டரின் உதவி தேவையில்லை. ஆனால், உங்கள் வருமான ஆதாரம் சிக்கலானதாக இருந்தால், உதாரணமாக வெளிநாட்டு சொத்துக்களில் இருந்து வரும் வருமானம், தொழில் வருமானம் (அ) மூலதன ஆதாயம் (capital gains) போன்ற வருமானம் இருந்தால், நீங்கள் ஆடிட்டரின் உதவியை நாடலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில், எந்தவொரு சிறிய விவரத்தையும் தவறவிடாமல் இருப்பதற்கு ஆடிட்டரின் ஆலோசனை பெறுவது சிறந்தது. ஆனால், சம்பளம் வாங்கும் தனிநபர்களுக்கு வருமான விவரங்கள் எளிமையாகவும், தெளிவாகவும் இருப்பதால், அவர்கள் தாங்களாகவே ITR தாக்கல் செய்யலாம்.
ITR தாக்கல் செய்வது எப்படி?
incometax.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 'e-File' என்பதைக் கிளிக் செய்து, 'Income Tax Return' என்பதை தேர்ந்தெடுத்து 'File Income Tax Return' என்பதை கிளிக் செய்யவும். உங்கள் Assessment Year தேர்ந்தெடுத்து, 'Online' முறையை தேர்ந்தெடுக்கவும். உங்கள் வருமான ஆதாரத்தின் அடிப்படையில் (ITR 1, 2 அல்லது 3 போன்ற) சரியான படிவத்தைத் தேர்ந்தெடுக்கவும். திரையில் முன் நிரப்பப்பட்ட தகவல்கள் தோன்றும். அவற்றை முழுமையாகச் சரிபார்த்து, ஏதேனும் வரி விலக்குகள் அல்லது கூடுதல் வருமானம் இருந்தால் அதைச் சேர்க்க திருத்தவும். இப்போது உங்கள் வரி கணக்கீட்டை சரிபார்க்கவும். வரி செலுத்த வேண்டியிருந்தால், 'Pay Self-assessment Tax' என்பதைக் கிளிக் செய்து செலுத்தவும். படிவத்தை சரிபார்த்து, ஒப்புதலைக் (declaration) கொடுத்த பிறகு, 'Submit' என்பதை கிளிக் செய்யவும். மேற்கண்ட ஸ்டெப்ஸ் முடித்த பிறகு, ITR-ஐ இ-வெரிஃபை (e-verify) செய்வது அவசியம். இதை நெட் பேங்கிங், ஆதார் OTP (அ) பிற முறைகள் மூலம் செய்யலாம். இந்த கடைசி ஸ்டெப் தவறாமல் செய்ய வேண்டும். இல்லையெனில், உங்கள் ITR தாக்கல் முழுமையடையாது.
ITR தாக்கல் செய்யத் தேவையான ஆவணங்கள்:
வருமான வரி தாக்கல் செய்யும் போது தேவையான சில ஆவணங்கள்:
படிவம் 16 (Form 16): சம்பளம் வாங்குபவர்களுக்கு இது அவசியம்.
படிவம் 26AS, AIS, TIS: உங்கள் பெயரில் எவ்வளவு வரி செலுத்தப்பட்டுள்ளது, உங்கள் நிதி பரிவர்த்தனைகள் என்னென்ன பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைத் தெரிந்துகொள்ள இவை உதவும்.
பான் மற்றும் ஆதார் அட்டை: இவை இரண்டும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
வங்கி கணக்கு விவரங்கள்: ITR ரீஃபண்ட் பெறுவதற்கு இது அவசியம்.
வரி சேமிப்புக்கான முதலீட்டுச் சான்றுகள்: PPF, LIC, மருத்துவக் காப்பீடு போன்றவை.
வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ்: வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், இந்த சான்றிதழைக் கையில் வைத்திருக்கவும்.