திங்கள், 3 நவம்பர், 2025

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) நாம் செய்ய வேண்டியது என்ன?

 சுற்றறிக்கை: 61/2025

தேதி: 30.10.2025


இறைவனின் திருப்பெயரால்…….. 


தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சீர்த்திருத்தம்) 

நாம் செய்ய வேண்டியது என்ன?


பீகாரில் எஸ்ஐஆர் மூலம் நடத்தப்பட்ட நிகழ்வு " ஜனநாயகப் படுகொலை" என்பதை நாம் அறிவோம்.


அங்கு Special Intensive Revision (SIR) மூலம் சுமார் 68 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 


இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கேட்ட எந்தக் கேள்விகளுக்கும் தேர்தல் ஆணையம் இதுவரை சரியாக பதிலளிக்கவில்லை.


நீக்கப்பட்டவர்களின் அடையாள எண் மற்றும் காரணம் என்னவென்பதை தேர்தல் ஆணையம் சரியான முறையில் வெளியிடவில்லை.


இந்நிலையில் அடுத்த 12 மாநிலங்களில் இதை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு அதை செயல்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளது. அதில் தமிழகமும் ஒன்று.


தமிழக அரசும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுவரை எஸ்.ஐ.ஆரை அனுமதிக்க மாட்டோம் - சட்டப்படி எதிர்கொள்வோம் என்று சொல்லி வந்தாலும் இப்போது அனைத்தையும் தாண்டி அது களத்திற்கு வந்துவிட்டது. 


தமிழகத்தில் என்னென்ன தேதிகளில் எவ்வாறு எஸ்.ஐ.ஆர் எடுக்கப்படும் என்கிற பட்டியலை தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டன. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வீடுவீடாக சென்று எஸ்.ஐ.ஆர் பணிகளை முன்னெடுக்கும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. தேர்தல் ஆணையத்தின் மோசடிகளுக்கும் எல்லையற்ற அதிகார வரம்பிற்கும் உச்சநீதிமன்றம் உரிய கடிவாளமிட தவறிவிட்டதன் விளைவே இது. 


தற்போது எஸ்.ஐ.ஆர் பணிகள் தமிழகத்தில் தீவிரம் அடையவுள்ள நிலையில் இனி சட்டப்படி எதிர்கொள்வோம் என்பதை தாண்டி ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டிய தருணம் இது. 


ஏனெனில் எஸ்.ஐ.ஆர் என்பது  வெறுமனே வாக்காளர் திருத்தம் மட்டும் அல்ல. பெயர் திருத்தம், இறந்தவர்கள் பெயர் நீக்கம் மட்டும் இதில் நடைபெறுவதில்லை. மாறாக குடியுரிமை தொடர்புடைய அம்சமும் மறைமுகமாக அதில் அடங்கியுள்ளது. வாக்காளர் இந்திய குடிமகன் தானா என்ற சந்தேகத்தை உறுதி செய்யும் பணியையும் இதில் செய்கின்றனர். 


ஆகவே தான் வாக்காளர் அடையாள அட்டையை தாண்டி வேறு சில ஆதாரங்களை கேட்கின்றனர். அவர்கள் கேட்கும் ஆதாரத்தை வழங்காத பட்சத்தில் நம்மை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விடுகிறார்கள். அது வாக்காளர் நீக்கம் மட்டும் அல்ல. நமது குடியுரிமை மீது எழுப்பும் சந்தேகம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 


ஜனநாயக பங்களிப்பு செய்ய வாக்குரிமை தான் அனைத்திலும் முக்கியமானது. நம்முடைய கோரிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் செவி சாய்ப்பதும் இந்த வாக்குகளுக்காகத்தான்.


எனவே எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது நமது வாக்குரிமையை உறுதி செய்யும் வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும். அச்சம் கொள்ளத் தேவையில்லை. எனினும் விழிப்புணர்வு வேண்டும்.


நாம் என்ன செய்ய வேண்டும்?


அரசால் நியமிக்கப்படும் அதிகாரிகள், வரும் 2025 நவம்பர் மாதம்  4 தேதி முதல் 2025 டிசம்பர் மாதம்  4 தேதி வரை வீடு வீடாக வந்து ஆவணங்கள் கேட்பார்கள். 


தமிழகத்தில் 2002 ல் சில மாவட்டங்களிலும், 2005 ல் சில மாவட்டங்களிலும் (SIR) சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலுக்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 


https://www.elections.tn.gov.in/ElectoralRolls.aspx


2002 & 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து தற்போதைய பட்டியலிலும் பெயர் இருப்பவர்கள் கூடுதலாக எந்த ஆவணமும் வழங்க வேண்டியது இல்லை. 


ஒருவேளை அவர்களின் பெயர்கள் 2002 & 2005 ஆம் ஆண்டு பட்டியலில் இல்லை என்றாலும், அவர்களுடைய பெற்றோர் பெயர் இடம் பெற்று இருந்தால் அவர்களும் கூடுதலாக ஆவணம் எதுவும் அளிக்க வேண்டியதும் இல்லை. 


அவர்கள் கணக்கெடுப்புப் படிவத்தை (enumeration form) பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


https://voters.eci.gov.in/enumeration-form


2002 & 2005 ஆம் ஆண்டு பட்டியலில் பெயர் இல்லாமல் இருந்தால் அவர்கள் மட்டுமே, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 சான்றுகளில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.


1. பிறப்புச் சான்றிதழ் (Birth certificate issued by a municipal body, panchayat or another government authority)

2. பாஸ்போர்ட் (Passport issued by the ministry of external affairs)

3. கல்விச் சான்றிதழ் (Matriculation or higher education certificate from a recognised board or university)

4. அரசு / பொதுத்துறை ஊழியர்கள் அல்லது ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை (Govt./PSU employee or pensioner ID card)

5. நிரந்தர வசிப்பிடச் சான்றிதழ் (Permanent Residence Certificate)

6. வன உரிமைச் சான்றிதழ் (Forest Right Certificate)

7. சாதிச் சான்றிதழ் (Caste certificate (SC/ST/OBC) issued by a competent authority)

8. குடும்பப் பதிவேடு (Family register issued by local bodies)

9. அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிலம் அல்லது வீட்டு ஒதுக்கீட்டுச் சான்றிதழ் (Land or house allotment certificate from a government office)

10. தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC - National Register of Citizens) – (இருக்கும் பட்சத்தில்)

11. 01.07.1987-க்கு முன் அரசு/வங்கி/தபால் அலுவலகம்/LIC போன்ற பொது அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஆவணங்கள். (Government or PSU identity documents dated before 1987)


ஆதார் அட்டை முக்கிய சான்றாக தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொள்வதில்லை. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, ஆதார் அட்டையானது அடையாளச் சான்றாக (Proof of Identity) மட்டுமே கருதப்படும். அது குடியுரிமை, பிறந்த தேதி அல்லது வசிப்பிடத்திற்கான சான்றாக (Proof of Citizenship, Birth, or Residence) ஏற்றுக்கொள்ளப்படாது. எனவே ஆதாருடன் சேர்த்து மேற்கண்டவற்றில் இதர ஆதாரங்கள் எதையேனும் இரண்டை வைத்திருப்பது இந்த நடைமுறையை எளிதாக்கும். பிற ஆவணங்கள் இருந்தால் அவற்றையும் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.


இது சம்பந்தமான மேலதிக வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வீடியோ வடிவில் வழங்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.


தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள ஒரு மாத காலம் இந்த தகவல்களை திரட்ட போதுமான காலமாக இல்லை. மழைக்காலத்தில் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆரை எடுப்பதே தேர்தல் அதிகாரிகளின் போதாமையை வெளிப்படுத்துகிறது.  


தேர்தல் ஆணையம் தனது நம்பகத்தன்மையை இழந்து பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. பெங்களூர் மகாதேவ்புரா தொகுதியில் நடைபெற்ற மோசடிகள் யாவும் தேர்தல் ஆணையத்தை களங்கப்படுத்தியுள்ளது. அதிலிருந்து தன்னை பரிசுத்தப்படுத்திக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இல்லை. தமிழகத்தில் அதன் செயல்பாடுகள் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


பீகாரை போல தமிழகத்திலும் தனது தில்லுமுல்லு வேலையை காட்ட முனைந்தால் ஜனநாயக அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள்.


இப்படிக்கு,

முஜிபுர் ரஹ்மான்,

மாநில பொதுச் செயலாளர்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்.