கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்துார்பேட்டை அருகே காணாமல் போன 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னர் சிலைகளை கண்டுபிடித்து தரக் கோரி விழுப்புரம் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன். இவர் உளுந்துார்பேட்டை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை தாலுகா, நெய்வனை கிராமத்தில் பழமைவாய்ந்த சிவாலயமான சொர்ணகடேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மன்னர் காலத்தில் ராஜேந்திர சோழசேதிராயர் மற்றும் விக்கிரம சோழசேதிராயர் பொருள்கள் தானம் அளித்துள்ளனர். இவர்கள் கி.பி., 12ம் நூற்றாண்டில் இப்பகுதி ஆட்சிசெய்த குறுநில மன்னர்கள்.
இந்த மன்னர்களின் உருவச் சிலைகள் நெய்வனை கோவிலுக்கு எதிரே இருந்ததாக வரலாற்று நூல்களில் உள்ளது. கடந்த ஜூலை 30ம் தேதி நெய்வனை சொர்ணகடேஸ்வரர் கோவிலுக்கு நான் சென்றேன். ஆய்வுக்காக மன்னர்களின் சிலைகளை தேடினேன். ஆனால் சிலைகள் இல்லை. இது குறித்து விசாரித்த போது, 2 சிலைகளையும்20 ஆண்டுகளுக்கு முன் யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள் என தெரிவித்தார்கள்.
அதனைத் தொடர்ந்து, கடந்த 2ம் தேதி புதுச்சேரியில் இருக்கும் பிரஞ்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் ஆவண பாதுகாப்பில் இருந்த நெய்வனை சிற்பங்களின் புகைப்பட நகல்களைப் பெற்றேன். அந்தப்புகைப்படம் 1967 செப்டம்பர் 10ம் தேதி எடுக்கப்பட்டதாகும். நெய்வனை கோவில் வளாகத்தில் சிற்பங்கள் இருந்ததற்கான ஒரே ஆதாரம் இந்த புகைப்படங்கள் மட்டுமே.
900 ஆண்டுகள் பழமையானவை, முக்கியத்துவம் வாய்ந்த வரலாற்றுச் சின்னங்களாகும். இச்சிலைகள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுதுள்ளது. எனவே, மாயமான சிலைகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் புகார் மனு கொடுத்தார். இதனை பெற்றுக் கொண்ட காவலர்கள் விசாரிப்பதாக தெரிவித்துள்ளனர்
செய்தி: பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி.
source https://tamil.indianexpress.com/tamilnadu/historian-senguttuvan-complains-to-ulundurpet-police-900-year-old-kings-statues-missing-tamil-news-9661271