சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களை தேநீர் விருந்துக்கு அழைத்திருந்தார். ஆனால் அவரது அழைப்பை தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது சுதந்திர தின வாழ்த்து குறிப்பில் தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ் மொழியும், கலாசார மரபும் நமது தேசத்தின் பெருமைகள். தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், தமிழ் மரபின் மிகப்பெரிய அபிமானி நமது பிரதமர் நரேந்திர மோடி. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் கல்விச் சூழல் தொடர்ந்து சரிந்து வருகிறது. வேலைவாய்ப்பு இன்றி வெறும் படிப்புச் சான்றிதழ்கள் பெற்றவர்களாக மாணவர்கள் வெளியேறுகிறார்கள். இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம் நடக்கிறது.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளன. தேசிய சராசரியை விட 2 மடங்கு அதிக குற்றங்கள் நடக்கின்றன. நமது சகோதரிகளும், மகள்களும் வீட்டை விட்டு வெளியேற அச்சப்படும் சூழல் நிலவுகிறது. ஏழைகளுக்கு எதிராக கல்வி மற்றும் சமூக பாகுபாடு நிலவுகிறது. சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டோர் மற்றும் பிறர் இடையே கற்றல் இடைவெளி அதிகரித்துள்ளது. சமூக மற்றும் பொருளாதார பாகுபாட்டுடன் வாழ்வதே அவர்களின் தலைவிதியாக மாறியுள்ளது.
பொதுப்பாதையை பயன்படுத்தும் பட்டியலின மக்கள் உடல் ரீதியாக தாக்கப்படுகிறார்கள். சுதந்திரம் பெற்றும் 75 ஆண்டுகள் ஆன பிறகும் பாகுபாடு நிலவுவது நாம் அவமானப்படக்கூடியது. வறுமை நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்காலம் மிகவும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
கண்டனம்
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி அறிக்கைக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், "ஆர்.எஸ்.எஸ். மனநிலையுடன் எப்போதும் அரசுப் பள்ளிகள் மீது அவதூறு பரப்பும் கவர்னர் அவர்களே, ஏழை மாணவர்களின் படிப்பின் மீது அக்கறை உள்ளவர் போல, “நானும் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேன்” என்பதை காட்டிக்கொள்வதற்காக நான்கைந்து மாதங்களுக்கு ஒருமுறை பள்ளிக் கல்வித்துறையை நோக்கி இப்படி பேசுவது உங்களின் வாடிக்கையாகிவிட்டது.
எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களும், ஆசிரியர்களும் நிகழ்த்திக் காட்டும் சாதனைகள் எண்ணிலடங்காதது. சாதனையாளர்களை மக்களும் திராவிட மாடல் அரசும் கொண்டாடி வருகிறது. கமலாலயத்தின் ASER எனும் போலி அறிக்கையை உயர்த்திப்பிடிக்கும் நீங்கள், அரசுப் பள்ளிகளின் மீது அக்கறை இருந்தால் டெல்லியை நோக்கி “தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்வி நிதி என்னவானது?' என்று கேளுங்கள்" என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார் .
செய்தி: க.சண்முகவடிவேல்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-minister-anbil-mahesh-poyyamozhi-condemn-governor-rn-ravi-tamil-news-9661087