திங்கள், 4 ஆகஸ்ட், 2025

தமிழக வாக்காளர் பட்டியலில் புலம்பெயர் தொழிலாளர்கள்; அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

 

தமிழக வாக்காளர் பட்டியலில் புலம்பெயர் தொழிலாளர்கள்; அரசியல் தலைவர்கள் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு

Election Commission

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவதற்காக “சிறப்பு தீவிர திருத்தம்” (Special Intensive Revision - SIR) என்ற நடவடிக்கையை நாடு முழுவதும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், இந்த முயற்சி தமிழ்நாட்டில் ஒரு பெரும் அரசியல் புயலைக் கிளப்பியுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள், வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் விளைவாக, பீகாரைச் சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் பெருமளவில் சேர்க்கப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால், இது தவறான தகவல் என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை “அதிகார துஷ்பிரயோகம்” மற்றும் “மாநிலங்களின் தேர்தல் தன்மையை மாற்றும் முயற்சி” பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் 6.5 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவது “திடுக்கிட வைக்கிறது” என்றும், இது சட்டவிரோதமானது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

3 8 2025 

மேலும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான பீகாருக்குத் திரும்பி வந்து வாக்களிப்பது வழக்கம். ஏன் அவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட வேண்டும்? ஒரு வாக்காளருக்கு ஒரு “நிலையான மற்றும் நிரந்தரமான சட்டப்பூர்வ வீடு” இருக்க வேண்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அது பீகாரில்தான் உள்ளது என்று ப.சிதம்பரம் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

அதேபோல், திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், “புலம்பெயர் தொழிலாளர்கள்” என்ற பெயரில் தமிழ்நாட்டிற்கு வந்தவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்குவது, எதிர்காலத்தில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தும். “இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால், நாங்கள் கர்ஜிக்கும் சிங்கங்களாக எதிர்த்து நிற்போம்” என்று அவர் கூறினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்த விவகாரத்தின் தீவிரத்தை எடுத்துரைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். “பீகாரில் தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் நிலையில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான பிற மாநில புலம்பெயர் தொழிலாளர்கள் சேர்க்கப்பட்டால், மாநிலத்தின் ஒட்டுமொத்த அரசியல் சூழலும் மாறும்” என்று அவர் கூறினார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இது தமிழர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி என்று குறிப்பிட்டார். இது ஜனநாயக அமைப்பைச் சீர்குலைக்க பாஜக மேற்கொள்ளும் முயற்சி என்றும், அனைத்து ஜனநாயக சக்திகளும் இதற்கு எதிராகப் போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. “தேசிய அளவில் தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) குறித்து அரசியல் தலைவர்கள் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டிய அவசியமில்லை. இந்த நடவடிக்கைக்குத் தடையாக, ஊடகங்களில் வேண்டுமென்றே இத்தகைய தகவல்கள் பரப்பப்படுவது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்துள்ளது” என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

பீகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்குக் குடிபெயர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை முடிந்த பின்னரே தெரியவரும், தமிழ்நாட்டில் இன்னும் இந்தத் திருத்தம் தொடங்கப்படவில்லை ஆகவே, பீகாரின் எஸ்.ஐ.ஆர்-ஐ தமிழ்நாட்டின் நிலைமையுடன் தொடர்புபடுத்துவது அபத்தமானது. 6.5 லட்சம் வாக்காளர்கள் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படுவது பொய்யானது” என்றும் தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியது.

சென்னை பல்கலைக்கழக அரசியல் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் ராமு மணிவண்ணன், இந்த விவகாரம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பது பற்றியது அல்ல, மாறாக வாக்காளர் சேர்ப்பு உண்மையான, நிரந்தரமான குடிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டதா அல்லது அரசியல் உள்நோக்கம் கொண்டதா என்பது பற்றியது என்று விளக்கினார்.

அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாழவும், வேலை செய்யவும் அனுமதிக்கிறது. ஆனால், அது தானாகவே புதிய இடத்தில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதில்லை. வசிப்பிடம் என்பது வேறு, தேர்தல் வசிப்பிடம் என்பது வேறு” என்று அவர் சுட்டிக்காட்டினார். இது தென்னிந்திய மாநிலங்களில் பாஜக-ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு உத்தி என்றும், இது நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த சர்ச்சை, நீண்ட காலமாக மாநிலத்தின் மொழி மற்றும் கலாச்சார தனித்துவத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில், அடையாளம் மற்றும் கூட்டாட்சி சமநிலை பற்றிய ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை சமீப ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் அரசியல் உள்நோக்கம் கொண்டதா அல்லது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையா என்பது குறித்து ஒரு தேசிய அளவிலான விவாதத்தை உருவாக்கியுள்ளது. 

source https://tamil.indianexpress.com/tamilnadu/bihar-sir-sparks-concern-tamil-nadu-ec-fires-back-absurd-connect-two-9622990