வன்முறையால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில், இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்த, முன்னாள் தலைமை நீதிபதியான சுஷிலா கார்க்கி தகுதியானவராக உருவெடுத்துள்ளார். இவர் நேர்மையானவர், ஊழலுக்கு எதிரானவர் என்ற உறுதியான நற்பெயரைக் கொண்டவர். அரசியல் மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாதவர் என்றபோதிலும், இவரது ஊழல் எதிர்ப்பு நிலைப்பாடுதான், நேபாளத்தின் இளைய தலைமுறைப் போராட்டக்காரர்களால், இடைக்காலப் பிரதமர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படக் காரணமாக அமைந்துள்ளது.
சமூக வலைத்தளத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த வன்முறைப் போராட்டங்களால் 19 பேர் உயிரிழந்தனர். ஊழல், பொருளாதாரத் தேக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவை அங்கு நீண்டகாலமாக நிலவிவரும் பதற்றத்துக்குக் காரணமாக உள்ளன. கார்க்கி இடைக்காலப் பிரதமரானால், கடந்த ஆண்டு வங்காளதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் ஷேக் ஹசீனா அரசு கவிழ்க்கப்பட்டபோது, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் ஏற்றுக்கொண்டது போன்றே இதுவும் அமையும். கார்க்கி நேபாளத்தின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையையும், அதன் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையுடன் கூடுதலாகப் பெறுவார்.
மாணவப் பருவத்தில், ஜனநாயகத்துக்காகப் போராடிய நேபாள காங்கிரஸ் கட்சியுடன் கார்க்கிக்கு தொடர்பு இருந்தது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற பிறகு, அவர் நேபாளத்தில் சட்டப் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அப்போது, தனது ஆசிரியர் துர்கா சுபேதியைத் திருமணம் செய்து கொண்டார். துர்கா சுபேதியை “சிரமமான நேரங்களிலும் எல்லா காலங்களிலும் எனது நம்பகமான நண்பர், வழிகாட்டி” என கார்க்கி கூறியுள்ளார்.
நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவரான துர்கா சுபேதி, 1973ஆம் ஆண்டு ஜூன் மாதம் நேபாள ஏர்லைன்ஸ் விமானத்தைக் கடத்திய நான்கு பேரில் ஒருவர். அந்த விமானம் பிராட்நகரிலிருந்து காத்மண்டு மத்திய வங்கிக்கு 40 லட்சம் ரூபாய் பணத்தைக் கொண்டு சென்றது. இந்த விமானத்தை, பீகாரின் பூர்ணியா மாவட்டத்தில் உள்ள ஃபோர்பேஸ்கஞ்ச் என்ற இடத்தில் தரையிறங்கச் செய்தனர். ஜனநாயகத்துக்கான ஆயுதப் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்களை வாங்குவதற்காக, ஜி.பி.கொய்ராலாவுக்கு இந்தப் பணம் ஒப்படைக்கப்பட்டது.
2006ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக கார்க்கி நியமிக்கப்பட்டார். அதன்மூலம், அவர் தனது நற்பெயரை வளர்த்துக்கொண்டார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவிக்கு உயர்ந்தார். அவர் பதவியில் இருந்தபோது, சர்ச்சைகளும் ஏற்பட்டன. அப்போது ஆட்சியில் இருந்த நேபாள காங்கிரஸ் கட்சி, நாடாளுமன்றத்தில் தனக்கிருந்த பலத்தைப் பயன்படுத்தி அவர்மீது பதவிநீக்கத் தீர்மானத்தைக் கொண்டுவந்தது. இதனால், அவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டார்.
கார்க்கி பதவிநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அரசியல் ஊழலால் விரக்தியடைந்தார். ஓய்வுக்குப் பிறகும் இந்தப் பிரச்சினை குறித்து அவர் தொடர்ந்து கவனம் செலுத்திவந்தார். தலைமை நீதிபதியாக இருந்தபோது, அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய நீதிபதிகளை நியமிக்க அவர் அழுத்தம் கொடுத்தபோது, அவர்மீதும் கேள்விகள் எழுந்தன. “அவர்கள் நீதிபதியாக அமர்ந்த பிறகு தங்களது அரசியல் சார்பை விட்டுவிட வேண்டும்,” என தனது நடவடிக்கையை நியாயப்படுத்தி கார்க்கி கூறியிருந்தார். பின்னர், நீதிபதிகளாக தங்களது உறவினர்களை நியமிக்க அழுத்தம் கொடுத்த சில அமைச்சர்களை அவர் வெளிப்படுத்தினார்.
அவரது குறிப்பிடத்தக்க தீர்ப்பு, அரசமைப்பு சார்ந்த ஊழல் கண்காணிப்பு அமைப்பின் தலைவராக லோக்மான் சிங் கார்க்கியின் நியமனத்தை ரத்து செய்தது. அப்போதைய குடியரசுத் தலைவர் ராம் பரன் யாதவ், இடைக்காலப் பிரதமர் மற்றும் தலைமை நீதிபதி கில்ராஜ் ரெக்மி மற்றும் நான்கு பெரிய ஆளுங்கட்சிகளால் இந்த நியமனம் செய்யப்பட்டிருந்தது.
source https://tamil.indianexpress.com/international/who-is-sushila-karki-nepal-first-woman-cj-now-potentially-first-woman-pm-in-tamil-10086350