Before GST 2.0, almost 40% of consumers could just about manage food shopping: Survey
இந்திய நுகர்வோருக்கு பெரும் நிம்மதி அளிக்கும் வகையில், செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆனால், இந்த மகிழ்ச்சிக்கு மத்தியில் நுகர்வோரின் செலவு குறித்த புதிய அறிக்கை ஒன்று சில கவலைகளை எழுப்பியுள்ளது.
பிடபிள்யூசி இந்தியா (PwC India) வெளியிட்டுள்ள 'வாய்ஸ் ஆஃப் தி கன்ஸ்யூமர் 2025' (Voice of the Consumer 2025) என்ற அறிக்கையின்படி, இந்திய நுகர்வோர் பலருக்கு உணவுப் பொருட்களைத் தாண்டி செலவு செய்ய பணம் இல்லை என்பதைக் காட்டுகிறது. ஆய்வில் பங்கேற்றவர்களில் 32% பேர் தாங்கள் “நிதி நெருக்கடியில்” இருப்பதாகவும், 7% பேர் “நிதி பாதுகாப்பற்ற நிலையில்” இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த கடன்கள், குறைந்த சேமிப்பு
பிடபிள்யூசி இந்தியாவின் சில்லறை மற்றும் நுகர்வோர் சந்தை பிரிவு இயக்குனர் ஹிதான்ஷு காந்தி கூறுகையில், "வீட்டுச் சேமிப்புகள் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது குறைவாக உள்ளன. ஆனால், அதே நேரத்தில் கடன்கள் அதிகரித்துள்ளன. இது நுகர்வோர் மத்தியில் கடும் நிதி நெருக்கடியை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) தரவுகளின்படி, 2025-26 நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில், மொத்த யுபிஐ பரிவர்த்தனைகளில் 13% அதாவது சுமார் ₹3.5 லட்சம் கோடி, 'கடன் வசூல் முகவர்' பிரிவில் நடந்துள்ளது. இது குடும்பங்களின் கடன் சுமையைக் குறிக்கிறது.
"உங்களது பில்களை செலுத்திய பிறகு எவ்வளவு நிம்மதியாக உணர்கிறீர்கள்?” என்ற கேள்விக்கு, 60% பேர் நிதி பாதுகாப்புடன் இருப்பதாக கூறினாலும், 32% பேர் “பில்களை செலுத்திய பிறகு, பொழுதுபோக்கிற்காக சிறிதளவு பணம் கூட மிச்சமில்லை” என்று கூறியுள்ளனர்.
இந்த பிடபிள்யூசி ஆய்வு உலக அளவில் 21,075 மக்களிடம் நடத்தப்பட்டது, இதில் 1,031 இந்தியர்கள். 2025-ன் முதல் இரண்டு மாதங்களில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பங்கேற்றவர்கள் பெரும்பாலும் 18-44 வயதுக்குட்பட்டவர்கள், அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் பெரிய நகரங்களில் வசிப்பவர்கள்.
வரி குறைப்பு நுகர்வை ஊக்குவிக்குமா?
ஜிஎஸ்டி வரி குறைப்பு நுகர்வோர் பட்ஜெட்டை மேம்படுத்தும் என்று இந்த அறிக்கை குறிப்பிட்டாலும், நுகர்வோர் பணத்தை மிச்சப்படுத்த பல வழிகளைத் தேடுகிறார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. வரி குறைப்பால் விலை குறைப்பு ஏற்படுமா, அது நுகர்வை எந்த அளவிற்கு அதிகரிக்கும் என்பதில் நிபுணர்களுக்கு சந்தேகம் உள்ளது.
பிடபிள்யூசி இந்தியாவின் ரவி கபூர் இது குறித்து கூறும்போது, “விலை குறைப்பு என்பது நல்லதுதான். ஆனால் இந்த விலை குறைப்பு, ஏற்கெனவே பிராண்டட் பொருட்களை வாங்கி வரும் நுகர்வோருக்கு மட்டுமே உதவியாக இருக்கும். அவர்கள் இப்போது நல்ல எலெக்ட்ரானிக் பொருட்களை வாங்கவோ, பயணம் செல்லவோ அல்லது வெளியில் சாப்பிடவோ திட்டமிடலாம். இது அனைவரையும் சென்றடையுமா என்பது கேள்விக்குறியே” என்கிறார்.
ஜிஎஸ்டி வரி குறைப்பு முறைப்படுத்தப்பட்ட துறையிலிருந்து வரும் பொருட்களுக்கான தேவையை அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. “அடுத்த 5-10 ஆண்டுகளில், முறைப்படுத்தப்பட்ட சந்தையின் வளர்ச்சி மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில், நுகர்வோர் இப்போது நம்பகத்தன்மை, தரம், மற்றும் ஊட்டச்சத்தை எதிர்பார்க்கிறார்கள். இவை அனைத்தும் கிடைக்கப் பெற்றால், முறைசாரா நிறுவனங்கள் ஃபார்மல்-ஆக மாறி பிராண்டட் நிறுவனங்களாக மாறும்” என்று கபூர் தெரிவித்தார்.
பாஸ்மதி அரிசியின் நுகர்வை உதாரணமாக அவர் விளக்கினார். “பிரியாணி போன்ற சிறப்பு சந்தர்ப்பங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட பாஸ்மதி அரிசி, இப்போது பல வீடுகளில் தினசரி உணவாக மாறி வருகிறது. இதுபோல, பல பொருட்கள் மேம்படுத்தப்பட்ட நுகர்வு நிலைக்கு செல்கின்றன. இதுவே முறைப்படுத்தப்பட்ட சந்தை வளர்ச்சியின் அடையாளம்” என்று அவர் குறிப்பிட்டார்.
பொருளாதார நிபுணர்களின் மதிப்பீடுகளின்படி, இந்த ஜிஎஸ்டி வரி குறைப்பு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) 60 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தவும், சில்லறை பணவீக்கத்தை 100 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த வரி குறைப்பின் முழுப் பயனும் நுகர்வோருக்கு விலை குறைப்பு வடிவில் சென்றடையுமா என்பது குறித்த கேள்விகள் தொடர்கின்றன.
source https://tamil.indianexpress.com/business/gst-rate-cuts-india-cost-of-living-gst-impact-on-consumers-india-gdp-growth-gst-tax-cut-benefits-10445261