வியாழன், 4 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் மலை தீபம் விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்த அரசு தரப்பின் மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

 

3 12 2025

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடாகத் திகழும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவில், மலை உச்சியில் உள்ள பழமையான தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தீபத்தூணில் தீபம் ஏற்றப்படவில்லை: நீதிமன்ற அவமதிப்பு எச்சரிக்கை

இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி, மலையின் உச்சியில் இருக்கும் பழமையான 'தீபத்தூணில்' தான் தீபம் ஏற்றப்பட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தபோதிலும், விழா நாளன்று மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. அதற்குப் பதிலாக, வழக்கம்போல மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தாத இந்து சமய அறநிலையத்துறையின் கோயில் நிர்வாகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுரை ஐகோர்ட் கிளை எச்சரிக்கை விடுத்திருந்தது.

காவல்துறையினர் அனுமதி மறுப்பு: 144 தடை உத்தரவு அமல்

இதற்கிடையில், இன்று நடைபெற்ற விசாரணையின்போது, நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்புப்படை (CRPF) வீரர்களின் பாதுகாப்புடன் சென்று தீபத்தூணில் விளக்கேற்ற மனுதாரர்கள் முயன்றதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதைக் காரணம் காட்டி, மனுதாரர்கள் மலையில் ஏற காவல்துறையினர் அனுமதி மறுத்தனர்.

இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற மனுதாரர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்களை அனுமதிக்காத நிலையில், தொடர்ந்து மனுதாரர் வழக்கறிஞர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில், காலையில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் என்றும், அந்த முடிவின்படி தீபம் ஏற்றச் செல்வதாகவும் கூறியதை அடுத்து, மனுதாரர் தரப்பினர் கலைந்து சென்றனர்.

தமிழக அரசு மேல்முறையீடு: 4 12 2025 விசாரணை

தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவானது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு 4 12 2025 விசாரணைக்கு வர உள்ளது. தொடர் சட்டப் போராட்டங்களால் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tn-govt-appeals-against-madurai-hc-order-on-tirupparankundram-deepam-pillar-10879302