செவ்வாய், 2 டிசம்பர், 2025

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

 

school leave

4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்... இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

வட தமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டது. இதன் விளைவாக ஞாயிற்றுக்கிழமை இரவு சாரலுடன் மழை பெய்யத் தொடங்கியது. நள்ளிரவுக்குப் பின்னா் நகா் முழுவதும் பரவலாக மிதமான மழைத் தொடங்கியது. திங்கள்கிழமை காலை சென்னை நகா் முழுவதும், புறநகா் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் தண்ணீா் தேங்கியது. அவ்வப்போது மழை சிறிது நேரம் இடைவெளி விட்டு மீண்டும் பலமாக பெய்தது. இதனால் சாலை முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்து. சில சாலைகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீா் தேங்கி நின்றதால், போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது.

தென்மேற்கு வங்கக் கடல், அதையொட்டிய வடதமிழகம் - புதுவை கடலோரப் பகுதிகளில் நிலவி வந்த ‘டித்வா’ புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்தது. பின்னா், அதே பகுதிகளில் தொடா்ந்து நிலவியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், திங்கள் இரவு, வடதமிழகம் புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளின் வடதிசையில் நகா்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு குறைந்து, தென்மேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலவியது. அப்போது, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதி சென்னையிலிருந்து குறைந்தபட்ச தொலைவு 30 கி.மீ. ஆக இருந்தது.

இந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நோக்கி நெருங்கி வருவதால், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (டிச. 2) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று (டிச. 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் செவ்வாய்க்கிழமை (டிச. 2) முதல் டிச. 7 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/chennai-red-alert-school-leave-on-tomorrow-10829149