/indian-express-tamil/media/media_files/2025/12/02/jawahar-navodaya-vidyalayas-2025-12-02-08-01-44.jpg)
தமிழகத்தில் ஜவஹர் நவோதயா பள்ளிகள்: மத்திய - மாநில அரசு பேசி முடிவெடுக்க சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, குமாரி மகா சபா என்ற அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த ஐகோர்ட், இந்தப் பள்ளிகளை தமிழகத்தில் திறக்க தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இந்த பள்ளிகள், தமிழ் கற்றல் சட்டம் 2006-ஐ மீறாது எனக்கூறி, 2 மாதங்களுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும், 240 மாணவர்களுக்கு தற்காலிக தங்குமிடத்தை வழங்கும்படி 2017, செப்., 11ல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு, 2017, டிச., 11ல் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. பின் பல ஆண்டுகள் இந்த வழக்கு விசாரிக்கப்படாமலேயே இருந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
குமாரி மகா சபா வாதம்
அப்போது குமாரி மகா சபா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரியதர்ஷினி வாதிடுகையில், நாடு முழுதும் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் வலுவான கல்வி செயல்திறனைக் கொண்டுள்ளன. குறிப்பாக கடந்த, 2017ம் ஆண்டில் நாடு முழுதும் உள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் படித்த, 14,183 மாணவர்கள், 'நீட்' தேர்வை எழுதினர். 'அதில், 11,875 பேர் மருத்துவ படிப்புக்கு தகுதி பெற்றுள்ளனர்.
கடந்த, 10 ஆண்டுகளில் இந்தப் பள்ளிகள், 10ம் வகுப்பில், 98.99% தேர்ச்சியும், +2 வகுப்பில், 96.-98% தேர்ச்சியும் அடைந்துள்ளன. இத்தகைய தரமான பள்ளிகள் தமிழகத்தில் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த பள்ளிகளை தமிழகத்தில் திறக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்தைத் தவிர நாட்டின் மற்ற எல்லா மாநிலங்களிலும் ஜே.என்.வி.க்கள் செயல்படுகின்றன. கேந்திரிய வித்யாலயாக்கள் போன்ற மத்தியப் பள்ளிகள் இருக்கும்போது, இதில் மட்டும் பாகுபாடு காட்டக் கூடாது என வாதிட்டார்.
தமிழக அரசின் வாதம்
கல்விக்கொள்கை மாநிலத்தின் பிரத்யேக அதிகாரம் என்றும், தமிழகம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கையை ஏற்றுள்ளது என்றும் அரசு வாதிட்டது. ஜே.என்.வி.க்கள் பின்பற்றும் மும்மொழிக் கொள்கை (பிராந்திய மொழி, ஆங்கிலம், இந்தி) மாநிலத்தின் சட்டக் கட்டமைப்புக்குப் பொருந்தாது என்று அரசு தனது சிறப்பு விடுமுறை மனுவில் வாதிட்டது. உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, மாநிலத்தின் கல்விக் கொள்கை அதிகார வரம்பிற்குள் தலையிடுகிறது என்றும் வாதிடப்பட்டது.
தொடர்ந்து பேசிய நீதிபதிகள், 'கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கிறது. எனவே இதுகுறித்து மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து முடிவு எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசு விவாதித்து முடிவை எடுக்க வேண்டும். உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/navodaya-row-sc-asks-governments-to-resolve-dispute-over-jnv-schools-in-tamil-nadu-10830101





