வெள்ளி, 5 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு; மனுவில் கூறியிருப்பது என்ன?

 

திருப்பரங்குன்றம் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு; மனுவில் கூறியிருப்பது என்ன?


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நகேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில். தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் கோவிலில் வழக்கமாக உச்சிப் பிள்ளையார் கோயில் முன்பாகவே தீபம் ஏற்றப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என ரவிக்குமார் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் தீப தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.  ஆனால் இந்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை.  

இதன் காரணமாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி ஆர்.சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில, இன்று மாலை 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். மேலும் நீதிமன்ற உத்தரவை நடைமுறைபடுத்தியது தொடர்பான அறிக்கையை நாளை காலை 10.30 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டு இருந்தார்.

இந்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிம்னறத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. அந்த மனவில், கார்த்திகை தீபம் ஏற்ற அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றப்படும் இடத்தை மாற்றிவிட்டு, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் எனக் கேட்பதுதான் பிரச்னையாக உள்ளது. 2014ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில் எங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்பதைக் கூறியுள்ளது. அதன்படியே அரசு செயல்படுகிறது. புதிதாக தீபம் ஏற்றக் கோரும் இடம் தர்காவுக்கு 15 மீட்டர் தொலைவில் உள்ளது. 

தேவையில்லாத சச்சரவுகளை தவிர்க்கவே, அங்கு அனுமதி அளிப்பது இல்லை ஐகோர்ட் உத்தரவால் தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க கோரி நாளை தலைமை நீதிபதி அமர்வில் முறையிட வாய்ப்புள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்ற பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் தீவிரம் காட்டி வரும் நிலையில, அவர்கள் திருப்பரங்குன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-government-petition-in-supreme-court-for-tiruparankuntram-issue-10882469