வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஏகத்துவ தந்தை இப்ராஹீம்(அலை) அவர்களின் மார்க்கம்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

இஸ்லாமிய கட்டிடத்தின் ஐந்து தூண்களில் ஹஜ் ஓர் தூண் ஆகும்' வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும் முஹம்மத் அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலை நிறுத்துதல், ஸகாத்து வழங்குதல், ஹஜ் செய்தல், ரமாலானில் நோன்பு நோற்றல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என இப்னு உமர்(ரலி) அறிவித்தார். புகாரி.8/7.

இன்று நாம் நிலை கொண்டிருக்கின்ற ஏகத்துவ மார்க்கத்தை (ஓரிறைக்கொள்கையை) அன்று இப்ராஹீம் நபி(அலை) அவர்களே பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிலை நாட்டினார்கள்.

அல்லாஹ்வின் ஆற்றல் மீது அளப்பறிய நம்பிக்கை கொண்டிருந்த இப்ராஹீம் (அலை)அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தல் மிகப் பெரும் பாவச் செயல் என்பதை மக்களுக்கு விளக்குவதிலும், இவ்வுலகை படைத்து இயக்கும் அல்லாஹ் ஒருவனே ஆற்றலுடையவன் அவனுக்கு நிகராக உலகில் கற்பனை செய்யப்படும் அனைத்தும் ஆற்றலற்றவைகள் என்பதை விளக்குவதிலும் முழு மூச்சாக செயல் பட்டார்கள்.

அல்லாஹ்வின் உதவியைத் தவிர வேறு யாருடைய உதவியும் அன்று அவர்களுக்கு இருக்கவில்லை, தனித்து நின்றே அனைவருடைய எதிர்ப்பையும் எதிர் கொண்டார்கள் எதிர்ப்புகளுக்கு பயந்து வளைந்து கொடுக்காமல் பிரச்சாரம் செய்தார்கள்.

முட்டாள்களைத் தவிர இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை வேறு யாரும் புறக்கனிக்க மாட்டார்கள் என்று அல்லாஹ்வே திருமறையில் சிலாகித்துக் கூறும் அளவுக்கு ஏகத்துவத்தின் அடிப்படையில் மார்க்கத்தை நிறுவினார்கள்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யார் இப்ராஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார். அல்குர்ஆன். 2:130.

வீட்டிலும் பகை, வெளியிலும் பகை.
இப்ராஹீம்(அலை) அவர்கள் சிலை வணக்கத்தை ஒழித்துக்கட்டி ஏகத்துவத்தை நிலைநாட்ட வந்தவர்கள் அவர்களுடைய தந்தையோ சிலை வணக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கைக் கொண்டு அதில் மூழ்கிக் கிடந்தார்கள். அந்த சிலைகளுக்கு சக்தி கிடையாது என்பதை பலமுறை தந்தை அவர்களுக்கு விளக்கிக் கூறி வந்ததால் தந்தையின் மூலம் வீட்டில் பகைஉருவானது, இனி ஏகத்துவத்தைப் பேசினால் கல்லால் எறிந்து கொல்வேன் என்றும், ஏகத்துவத்தைப் பேசுவதாக இருந்தால் என்னை விட்டு விலகிப் போய் விடு என்று விரட்டும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இப்ராஹீமே எனது கடவுள்களையே நீ அலட்சியப்படுத்துகிறாயா ?. நீ விலகிக்கொள்ளாவிட்டால் உன்னைக் கல்லால் எறிந்து கொல்வேன். நீண்ட காலம் என்னை விட்டு விலகி விடு! என்று (தந்தை) கூறினார். அல்குர்ஆன் 19:46.

பெற்ற தந்தையின் மூலம் வீட்டுக்குள் இந்த நிலை என்றால் வெளியில் சொல்லவே வேண்டியதில்லை எனும் அளவுக்கு நாடாளும் மன்னன் முதல் சாதாரன குடி மக்கள் வரை இப்ராஹீம்(அலை) அவர்கள் மீது கடும் பகை கொண்டிருந்தனர். எத்தனை பகை கொண்டிருந்தாலும், ஏகத்துவத்தை எடுத்துச் சொல்வதிலிருந்து பின் வாங்குவதில்லை எனும் முடிவில் மன்னன் நம்ரூதுக்கும் சத்தியத்தை எடுத்துச் சொன்னார்கள்.

ஒருநாள் நம்ரூதின் அரன்மனையில் இப்ராஹீம்(அலை) அவர்களுக்கும், மன்னன் நம்ரூதுக்கும் இடையில் அனல் பறந்தது விவாதம் இறுதியில் வாயடைத்துப் போனான் மன்னன் நம்ரூது.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரதுஇறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? ''என் இறைவன்உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, ''நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். ''அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை)மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். அல்குர்ஆன். 2: 258.

அறிவுப் பூர்வமான கருத்துக்களைக்கொண்டு ஏகத்துவ எதிர்ப்பாளர்களை, திணறச் செய்வதற்கும், திக்குமுக்காடச் செய்வதற்கும் பதில் பேச முடியாமல் வாயடைக்கச் செய்வதற்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்கள் இப்ராஹீம் (அலை) அவர்களே.

மற்றுமொரு சம்பவத்தைப் பாருங்கள் ஒரு கிராமத்தில் சிறிய சிலைகள் உடைக்கப்பட்டு பெரிய சிலை ஒன்றின் கழுத்தில் கோடாரி மாட்டி விடப்பட்டிருந்தது.

அங்கே மக்கள் திரண்டனர் இப்ராஹீம்(அலை) அவர்களும் வரவழைக்கப்பட்டனர் குழுமி இருந்த மக்கள் ஆளாளுக்கும் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டனர். தனி ஒரு நபராக இருந்து கொண்டு அனைத்து கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில்களை அசராமல் அளித்துக் கொண்டே இருந்தார்கள் இப்ராஹீம்(அலை) அவர்கள்.

திருப்பி அவர்களை நோக்கி இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட எந்த கேள்விக்கும் அசத்தியத்தில் இருந்த காரணத்தால் அவர்களால் பதிலளிக்க முடியாமல் திணறினர். இறுதியில் அனைவரும் தலைகளை தொங்கவிட்டுக்கொண்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டதாக அல்லாஹ்வே கூறுகிறான். பார்க்க திருக்குர்ஆன் 21:58 முதல், 21:68 வரை.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய இந்த யுக்தியால் மக்களுடைய மனங்களில் மாற்றம் எற்படுவதை அறிந்த ஊர் தலைமை கூடி அவர்களுக்கு நெருப்பில் பொசுக்கி தண்டனை கொடுப்பது என்ற மோசமான முடிவை எடுத்து தாமதமின்றி செயல்படவும் தொடங்கினர்.

இவ்வாறான தண்டனை கொடுப்பதன் மூலமாக இதுவரை செய்து வந்த பிரச்சாரம் உண்மை இல்லை என்றுக்கூறி நெருப்பிலிருந்து தப்பிக்க முயலலாம்.

அல்லது துணிந்து நெருப்பை ஏற்று எரிந்து பொசுங்கி விட்டால் அவரால் பிரச்சாரம் செய்யப்பட்ட கடவுள் அவரை காப்பாற்ற முடிய வில்லை. என்றுக் கூறி சிந்திக்க முனைந்த மக்களுடைய மூளையைக் கழுவி அதே இடத்தில் வைத்து விடலாம்.

இரண்டில் எது நடந்தாலும் நமக்கு லாபமே என்ற நரித்தனம் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறது என்றால் இந்த காலத்தில் உள்ள ஏகத்துவ எதிர்ப்பாளர்களுக்கு அவர்களை விட பல மடங்கு இருக்கத் தானே செய்யும்.

இந்த தண்டனை மூலமாக பல கடவுள் கொள்கையை நிலை நாட்ட இதை நல்ல சந்தர்ப்பமாக பயன்படுத்த எண்ணினர்.

நெருப்பின் அருகே நிருத்தப்பட்ட இப்ராஹீம் நபி (அலை) அவர்கள மனம் தளரவில்லை, தைரியத்தை விட்டு விட வில்லை, ஏகத்துவத்தை மறுத்து உயிரைக் காப்பாற்ற எண்ணவில்லை, மாறாக ஏக இறைவன் என்னை காப்பாற்றப் போதுமானவன் என்ற நம்பிக்கையில் திடமாக இருந்தார்கள் ''ஹஸ்பி அல்லாஹூ வ நிஃமல் வக்கீல் (என் இறைவன் எனக்குப்போதுமானவன்) '' என்ற பிரார்த்தனையை ஓதுவதைத் தவிர வேறு மாதிரியான வார்த்தைகளை கூற மறுத்து விட்டது இறை நம்பிக்கையின் பிறப்பிடமாகிய இப்ராஹீம் (அலை) அவர்களுடைய நாவு.

உலகம் முடியும் காலம்வரை முஸ்லீம்களுக்கு பல விஷயங்களில் முன்னோடியாகத் திகழ்ந்த இப்ராஹீம்(அலை) அவர்கள் இறைவனிடம் சடைவடையாமல் துஆ கேட்பதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள்.

இப்ராஹீம்(அலை) அவர்கள் நெருப்பில் எறியப்பட்டபோது 'எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்; அவனே பொறுப்பேற்றுக் கொள்வோரில் சிறந்தவன்''

(ஹஸ்பியல்லாஹ் வநிமல் வக்கீல்) என்பதே அவர்களின்கடைசி வார்த்தையாக இருந்தது. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புகாரி. 4564.

இப்ராஹீம்(அலை) அவர்களுடைய உறுதியான இறைநம்பிக்கையையும், நெருக்கடியான நேரத்தில் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டிய உயர் பண்பையும் அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொழுந்து விட்டு எரிந்துக்கொண்டிருந்த நெருப்பைக் குளிர்ந்து அவர்களுக்கு பாதுகாப்பாக அமைந்துவிட நெருப்புக்கு உத்தரவிட்டு அவர்களைக் காப்பாற்றினான். ''நெருப்பே!இப்ராஹீமின் மீது குளிராகவும், பாதுகாப்பாகவும் ஆகி விடு'' என்று கூறினோம். திருக்குர்ஆன் 21:69.

இறை நம்பிக்கையாளர்களை வல்ல அல்லாஹ் ஒருபோதும் கை விட மாட்டான் என்பதற்கும், பிரார்த்தனையை செவிமடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொடுப்பான் என்பதற்கும் இப்ராஹீம் நபி(அலை) அவர்களின் பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட்டதும் அவர்களில் வாழ்வில் நடந்த படிப்பினை மிக்க எடுத்துக்காட்டாகும்.

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.