
காயல்பட்டிணத்தைச் சோர்ந்த மஹ்மூத் என்பவரால் சில ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதே முஹ்யித்தீன் மவ்லிது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்வின் தூதருக்கு நிகராகவும், அல்லாஹ்வின் தூதரை விடச் சிறந்தவராகவும் காட்டும் வகையில் இந்த மவ்லிது அமைந்திருக்கிறது .
'அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் சிறந்த மார்க்க மேதை. உயிர் பிரியும் வரை ஏகத்துவத்தை நிலைநாட்டப் போராடிய பெரியவர், இஸ்லாத்தின் மேன்மைக்காக உழைத்த மார்க்க சீலர் என்று நாம் அவரை மதிக்கிறோம். அவரது சேவையை மெச்சுகிறோம். ஆயினும் முஹ்யித்தீன் மவ்லிதின் சில வரிகள் அவரை அல்லாஹ்வுக்கு நிகராகக் காட்டும் வகையில் அமைந்திருக்கின்றன. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நிகழ்த்தியதாக இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்கள் குர்ஆன், ஹதீசுடன் நேரடியாக மோதும் வகையில் அமைந்திருக்கின்றன.
இந்த மவ்லிதில் கூறப்படும் அற்புதங்களை ஒவ்வொன்றாக நாம் அலசுவோம்.
இடம் பிடித்துக் கொடுத்த வானவர்கள்
وهو سراج المصطفى * قال افسحوا أهل الصبا
له متى جا مكتبا * أملاك حفظ للعباد
இந்த மவ்லிதின் நான்காவது பாடலில் காணப்படும் வரிகள் இவை.
பொருள் வருமாறு :
இவர் நபி (ஸல்) அவர்களின் விளக்காவார். இவர் ஆரம்பப் பாடசாலைக்கு வந்த போது சிறுவர்களே இவருக்கு இடமளியுங்கள் என்று பாதுகாக்கும் வானவர்கள் இவரது சக மாணவர்களிடம் கூறினார்கள்.
இந்த மவ்லிதின் பாடல்களுக்கு விளக்கவுரையாக ஹிகாயத் எனும் உரை நடைப் பகுதி உள்ளது. அதில் இன்னும் விரிவாகப் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

நான் பத்து வயதுச் சிறுவனாக இருந்த போது அல்லாஹ்வின் நேசருக்கு இடமளியுங்கள் என்று என்னைச் சூழ இருந்த மாணவர்களிடம் அல்லாஹ்வின் அனுமதியுடன் வானவர்கள் கூறியதை நான் கேட்டேன் என்று அப்துல் காதிர் ஜீலானி கூறினார். இவ்வாறு உரை நடைப் பகுதியில் கூறப்படுகிறது.
அப்துல் காதிர் ஜீலானி அவர்களே இதைக் கூறினார்கள் என்றால் அவரது காலத்தில் எழுதப்பட்ட எந்த நூலில் இந்த நிகழ்ச்சி கூறப்பட்டிருக்கிறது? எந்த நூலிலும் கூறப்படவில்லை. அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் மரணித்த பின்னரே அவர்கள் பெயரால் இந்தக் கதை புனையப்பட்டது. இது ஒன்றே இது பொய்க் கதை என்பதற்குப் போதுமான சான்றாகும். இந்தக் கதையில் மறைந்து கிடக்கும் மற்றும் சில அபத்தங்களாலும் இது பொய் என்பது மேலும் உறுதியாகின்றது.
மலக்குகளை மனிதர்கள் காண முடியுமா?
மலக்குகள் மக்களுக்குத் தென்படும் வகையில் சர்வ சாதாரணமாக நடமாடிக் கொண்டிருக்க மாட்டார்கள். நபிமார்களின் காலத்தில் மலக்குகள் சில வேளை மனித வடிவில் வந்துள்ளனர். வந்தவர்கள் மலக்குகள் தாம் என்பதைத் தெளிவுபடுத்த நபிமார்கள் இருந்தனர்.
ஒரு முறை ஜிப்ரீல் (அலை) அவர்கள் மனித வடிவில் வந்தனர். வந்தவர் ஜீப்ரீல் தாம் என்று நபி (ஸல்) அவர்கள் விளக்குவதற்கு முன்னர் நபித்தோழர்கள் யாரும் அவர் ஜிப்ரீல் என அறிய முடியவில்லை என்பதை ஹதீஸ் நூல்கள் கூறுகின்றன.
பார்க்க: புகாரி 50, 4777
இந்தச் சமுதாயத்திலேயே மிகச் சிறந்தவர்களான நபித்தோழர்களுக்கே ஒரு வானவர் வந்ததை அறிய முடியவில்லை என்றால் அப்துல் காதிர் ஜீலானி எப்படி அறிந்து கொண்டார்? அவருக்கு இறைவனிடமிருந்து இது பற்றி வஹீ (இறைச் செய்தி) ஏதும் வந்ததா ?
*நபிமார்கள் அல்லாதவர்கள் ஏதேனும் பிரமையில் மலக்கு நடமாடுவதாகக் கருதி விடலாம் .
* அல்லது ஷைத்தான்களின் நடமாட்டத்தைக் கண்டு மலக்குகள் என்று முடிவு செய்து விடக்கூடும்.
* அல்லது தனக்கு மதிப்பை அதிகப்படுத்திக் கொள்ள இவ்வாறு ஒருவர் பொய் கூறவும் கூடும்.
* அல்லது தமது தவறுகளை நியாயப்படுத்திட மலக்குகள் இவ்வாறு தம்மிடம் கூறியதாக ஒருவர் கதையளக்கவும் கூடும்.
வஹீயின் தொடர்பு இருப்பவர்கள் மட்டுமே, வந்தது மலக்குகள் தாம் என்பதை உறுதிப்படுத்திட முடியும். வஹீ (இறைச் செய்தி) என்னும் தொடர்பு இல்லாதவர் இவ்வாறு கூறும் போது அதை நம்பக் கூடாது.
உமக்கு அறிவு இல்லாததை நீ பின்பற்றாதே! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப்படுபவை. (அல்குர்ஆன் 17.36) என்று அல்லாஹ் கூறுகிறான்.
மலக்குகளின் பணிகள்
வஹீயைக் கொண்டு வரவும், அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றவும், நன்மை தீமைகளைப் பதிவு செய்யவும் மற்றும் பல பணிகளுக்காகவும் மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மலக்குகள் இறைவனால் நியமிக்கப்பட்ட பணிகளை மட்டுமே செய்வார்கள். எந்தப் பணிக்காக அவர்கள் நியமிக்கப்படவில்லையோ அதைச் செய்ய மாட்டார்கள் .
அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.
(அல்குர்ஆன் 21.27)
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.
(அல்குர்ஆன் 66.6)
வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.
(அல்குர்ஆன் 16.49, 50)
கண்காணிப்புப் பணியில் உள்ள மலக்குகள் அப்துல் காதிர் ஜீலானிக்காக பராக் கூறியதாக இந்தக் கதை கூறுகிறது. கண்காணிப்புப் பணியில் உள்ள மலக்குகளுக்கு இப்படி ஒரு பணி ஒதுக்கப்படவில்லை.
மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். அல்லாஹ்வின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர். தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றிக் கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்ற மாட்டான். ஒரு சமுதாயத்திற்கு அல்லாஹ் தீங்கை நாடும் போது அதைத் தடுப்போர் இல்லை. அவர்களுக்கு அவனன்றி உதவி செய்பவரும் இல்லை.
(அல்குர்ஆன் 13.11)
அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.
(அல்குர்ஆன் 6:61)
ஒவ்வொரு ஆத்மாவுக்கும் ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை.
(அல்குர்ஆன் 86.4)
நிச்சயமாக உங்கள் மீது பாதுகாவலர்கள் உள்ளனர். அவர்கள் கண்ணியமிக்க எழுத்தர்கள். நீங்கள் செய்பவற்றை அவர்கள் அறிகிறார்கள்.
(அல்குர்ஆன் 82.10)

மனிதர்கள் செய்யும் நன்மை தீமைகளைப் பதிவு செய்வதும், அல்லாஹ்வின் கட்டளைப்படி மனிதர்களைப் பாதுகாப்பதும் ஆகிய இரண்டு பணிகள் மட்டுமே பாதுகாப்புப் பணியிலுள்ள மலக்குகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. அப்துல் காதிர் ஜீலானிக்கு மட்டுமின்றி ஒவ்வொரு மனிதருக்கும் இத்தகைய மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை இவ்வசனங்களிலிருந்து அறியலாம்.
அப்துல் காதிர் ஜீலானியைக் கண்காணித்து அவரது நன்மை தீமைகளைப் பதிவு செய்யக் கடமைப்பட்ட மலக்குகள் அவருக்கு பராக் சொல்லிக்கொண்டிருந்தார்கள் என்றும், பள்ளிக்கூடத்தில் இடம் பிடித்துக் கொடுத்தார்கள் என்றும் கூறும் இந்தக் கதை மேற்கண்ட வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றது. இந்தக் கதை பொய் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்துள்ளது.
இன்ஷா அல்லாஹ் தொடரும்..