/indian-express-tamil/media/media_files/rJHIH8BP2iiLP9XH9Yda.jpg)
கலை, அறிவியல் கல்லூரிகளில் 60,000+ கூடுதல் இடங்கள்: தமிழக அரசு அறிவிப்பு!
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிப்புகளுக்கான அதிக தேவையைக் கருத்தில் கொண்டு, 2025-26 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை 20% வரை அதிகரிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர அதிக மாணவர்கள் காத்திருப்பதால், இந்தாண்டு அரசு கல்லூரிகளில் 20% வரை இடங்களை அதிகரிக்க அனுமதிக்கப்படும்" என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் திங்கள்கிழமை கூறினார். அரசு உதவிபெறும் கல்லூரிகளுக்கு 15% வரையிலும், தனியார் கல்லூரிகளுக்கு 10% வரையிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க அனுமதி வழங்கப்படும்," என்றும் அவர் தெரிவித்தார். இது அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சுமார் 60,000-க்கும் மேற்பட்ட இடங்களை அதிகரிக்கும். கல்லூரிகள் அதிக தேவை உள்ள படிப்புகளில் மட்டுமே மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.
தேவையான படிப்புகளுக்கு முன்னுரிமை:
கூடுதல் இடங்கள், வணிகவியல் (B.Com), வணிக நிர்வாகவியல் (BBA), கணினி அறிவியல் (BSc Computer Science) மற்றும் அது சார்ந்த படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க உதவும் என்று கல்லூரிகள் தெரிவித்துள்ளன. இத்திட்டம், அதிக கட்-ஆஃப் மதிப்பெண்கள் பெற்றும், விரும்பிய படிப்புகளில் சேர முடியாத மாணவர்களுக்கு ஒருவாய்ப்பை வழங்கும் என்று எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் உமா கௌரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறினார். அறிவியல் படிப்புகளுக்கு கூடுதல் ஆய்வக வசதிகள் தேவைப்படலாம் என்பதால், சில கல்லூரிகள் கலைப் படிப்புகளில் இடங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இதுவரை 1.26 லட்சம் இடங்களில் சுமார் 1 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, இந்த கல்வி ஆண்டில் ஆலந்தூர், பண்ருட்டி, குன்னூர், நாத்தம், விக்கிரவாண்டி மற்றும் செய்யூர் உள்ளிட்ட கிராமப்புறங்களில் 15 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 35 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டபோதிலும், இதுவரை ஒருஆசிரியர் கூட நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 2023-ல் 4,000 உதவிப் பேராசிரியர்களை நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. எனினும், நீதிமன்ற வழக்கு காரணமாக அந்த நியமனம் தடைபட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/education-jobs/government-arts-and-science-college-admissions-tn-college-intake-increase-9500469