/indian-express-tamil/media/media_files/2026/01/18/thanjavur-bus-2026-01-18-12-42-08.jpg)
தமிழக அரசின் இருமொழிக் கொள்கைக்கு மாறாக, அரசுப் பேருந்து ஒன்றின் எல்இடி (LED) திரையில் இந்தி மொழியில் வரவேற்பு வாசகம் இடம்பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் புறநகர் பணிமனையிலிருந்து திருச்சி - தஞ்சாவூர் - கும்பகோணம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசுப் பேருந்து ஒன்றில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்தப் பேருந்தின் உட்புறத்தில் பயணிகளை வரவேற்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில், 'நல்வரவு' (தமிழ்) மற்றும் 'Welcome' (ஆங்கிலம்) ஆகிய வார்த்தைகளுடன், இந்தி மொழியிலும் வரவேற்பு வாசகம் ஒளிபரப்பானது.
தமிழகத்தில் நீண்டகாலமாக தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது. "மூன்றாவது மொழிக்கு இடமில்லை" என்று தமிழக அரசு கொள்கை ரீதியாகத் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழலில், அரசுப் பேருந்திலேயே இந்தி இடம்பெற்றது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பேருந்து ஊழியர்களிடம் கேட்டபோது, "இது குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது" எனப் பதிலளித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள் தரப்பில் தெரிவித்ததாவது, "தற்போது புதிதாக வாங்கப்பட்ட அரசுப் பேருந்துகள் வடமாநிலங்களில் இருந்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. அதன் மென்பொருளில் (Software) இயல்பாகவே இந்தி மொழியில் வாசகங்கள் இடம்பெற்றிருக்கலாம். இது கவனக்குறைவால் நேர்ந்திருக்கலாம்; அந்தப் பேருந்தில் உள்ள இந்தி வாசகங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்."
இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், மற்ற புதிய பேருந்துகளிலும் இது போன்ற வாசகங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/hindi-welcome-message-in-tamil-nadu-state-bus-sparks-controversy-among-activists-11009485





