செவ்வாய், 20 ஜனவரி, 2026

கோயில் சொத்து முறைகேடு; 2 கோடி ரூபாய் பணம் எங்கே? ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியல்

 


people road roak

Photograph: (மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்திய அவர்கள், நீதி கிடைக்காவிட்டால் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகவும் ஆவேசத்துடன் எச்சரித்துள்ளனர்.)

திருச்சி மால்வாய் கிராமத்தில் உள்ள அய்யனார் ஸ்ரீ பூமிபாலகன் திருக்கோவில் சொத்துக்களை முறைகேடு செய்த பூசாரிகள் மீதும், அதற்கு துணை போகும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருபவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்துவிட்டு, பொய் வழக்குகளை பதிவு செய்த காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி மால்வாய் கிராம மக்கள் திருச்சி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில், இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான அய்யனார் ஸ்ரீபூமிபாலகன் திருக்கோவில் மால்வாய் ஊராட்சியில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 500 சவரன் ஆபரண தங்கம் மற்றும் ஒருகோடி ரூபாய்க்கு மேலான உண்டியல் காணிக்கை, கோவில் திருப்பணி நன்கொடையாக வசூல் செய்யப்பட்ட சுமார் ஒருகோடி ரூபாய் ஆகியவற்றை ஆலய பரம்பரை அறங்காவலரும், கோவில் பூசாரியுமான கே.பாஸ்கரன் என்பவரும், அவரது அண்ணன் மகன்களான தனபால், சுரேஸ் என்பவர்களும் இணைந்து முறைகேடு செய்திருப்பதாகவும், அதற்கு கோவில் செயல் அலுவலர் எஸ்.செல்வம், உதவி ஆணையர் உமா உள்ளிட்டோர் உடந்தையாக இருந்ததாகவும் கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து கோவில் சொத்துக்களை பாதுகாக்கவேண்டுமென வலியுறுத்தி, உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என கிராம மக்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தினார்கள்.

மேலும், கோவில் சொத்துக்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களையும், அவர்களது குடும்பத்தில் உள்ள பெண்களையும் போலீஸார் கைதுசெய்து, அவர்கள் மீது பொய்வழக்குகளை பதிவுசெய்து ஜனநாயகரீதியான போராட்டங்களை போலீசார் முடக்கப்பார்கிறார்கள். இவ்வாறாக போடப்பட்டுள்ள பொய்வழக்குகளை ரத்து செய்துவிட்டு, பொய் வழக்குகளை பதிவு செய்த காவல் ஆய்வாளர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.  

சம்பந்தப்பட்ட திருக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை ஆளுமையின் கீழ் எப்போது கையகப்படுத்தப்பட்டது? என்ற கேள்விக்கு, இது குறித்து தகவல் திருக்கோவில் அலுவலகத்தில் இல்லை எனவும், அதுபோல 1972 ஆம் ஆண்டு தேர்த்திருவிழா நடந்தபோது, பூசாரி கருப்பு உடையார் வசம் இருந்த, கோவிலுக்கு சொந்தமான தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு,  யூகத்தின் அடிப்படையிலான கேள்விகளுக்கு பதில் வழங்க இயலாது எனவும், கடந்த 1999 ஆம் ஆண்டு சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மாறாக, கோவிலின் வங்கி கணக்கு வரவு – செலவு பரிவர்த்தனை செய்ய பூசாரி தரப்பினரை மட்டும் அனுமதித்தது ஏன்? என்ற கேள்விக்கு, இதுகுறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வியே எழுப்ப இயலாது எனவும் இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் பதிலளித்துள்ளார். எனவே, கோவில் சொத்துக்களை முறைகேடு செய்தவர்களிடம் இருந்து மீட்டு, அதனை பாதுகாக்க வலியுறுத்துகிறோம்.

மேற்கண்டவாறு, இன்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், திருச்சி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மால்வாய் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இச்சம்பவம் குறித்து மால்வாய் கிராம மக்கள் மாலதி கூறியதாவது ; தொடர்ந்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் இதுவரை எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என கூறி தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் ஒன்று கூடி உள்ளோம்.

பெண்கள் மீது மற்றும் கிராம மக்கள் மீது பொய் வழக்குகளை போடப்பட்டு நள்ளிரவில் கைது செய்யப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் மக்களுக்கான ஆட்சியை இல்லை. எங்கள் தொகுதி எம்.எல்.ஏ தி.மு.க சௌந்தரபாண்டியன் தொகுதி என்பதால் எங்களுக்கு நன்மை நடக்கவில்லை.

எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலை புறக்கணிப்போம், வாக்களிக்க மாட்டோம். மேலும், எங்களை கைது செய்ய வேண்டாம், கிராமத்தில் இருந்து நாடு கடத்துங்கள் என தெரிவித்தனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-malvai-temple-funds-misappropriation-protest-collector-office-gold-scam-allegation-11013966