/indian-express-tamil/media/media_files/2025/05/22/cojK6IQ8uH7bFdgHnSDb.jpg)
கிரெடிட் கார்டுகள் பல நன்மைகளையும், வசதிகளையும் அளித்தாலும், அவற்றுடன் பொறுப்பும் சேர்ந்தே வருகிறது. கட்டணம் செலுத்த வேண்டிய தேதியை மறந்துவிடுவது என்பது, கடன் அட்டைதாரர்கள் செய்யும் பொதுவான, ஆனால் செலவுமிக்க தவறுகளில் ஒன்றாகும். ஒரு நாள் தாமதம் கூட அபராதங்கள் மற்றும் உங்கள் கிரெடிட் ஸ்கோரில் சரிவு உள்ளிட்ட பல விளைவுகளை ஏற்படுத்தும். இதன் தாக்கம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
உங்கள் கிரெடிட் கார்டின் குறைந்தபட்ச தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்த தவறினால், வங்கிகள் தாமதக் கட்டணங்கள் அல்லது அபராதங்களை விதிக்கின்றன. இந்தக் கட்டணங்கள் செலுத்தப்படாத நிலுவைத் தொகை மற்றும் கிரெடிட் கார்டு வழங்கும் வங்கியின் கொள்கை ஆகியவற்றை பொறுத்து அமையும்.
காலதாமதமான கட்டணங்கள் உங்கள் கிரெடிட் ஸ்கோரை எவ்வாறு பாதிக்கின்றன?
ஒவ்வொரு தாமத கட்டணமும் கடன் தகவல் நிறுவனங்களுக்கு (Credit Bureaus) தெரிவிக்கப்படுகிறது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஒரு தாமத கட்டணம் கூட:
உங்கள் கிரெடிட் ஸ்கோரை 50 முதல் 100 புள்ளிகள் வரை குறைக்கலாம்.
உங்கள் கடன் அறிக்கையில் ஏழு ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.
கடன் மற்றும் கிரெடிட் கார்டு பெறுவதற்கான வாய்ப்புகளை குறைக்கலாம்.
உங்கள் நிதிநிலை வேறு வழிகளில் பாதிக்கப்படாவிட்டாலும், இது உங்கள் ஒட்டுமொத்த கடன் தகுதியை (Creditworthiness) எதிர்மறையாக பாதிக்கும்.
மற்ற விளைவுகள்:
நிலுவை தொகைக்கான வட்டி: கட்டணம் செலுத்த வேண்டிய தேதி தவறவிடப்பட்டவுடன், நிலுவை தொகைக்கும், நீங்கள் புதிதாக செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வட்டி (சில அட்டைகளில் ஆண்டுக்கு 40% வரை) வசூலிக்கத் தொடங்கும். நீங்கள் செலுத்த வேண்டிய முழு தொகையையும் செலுத்தும் வரை இது தொடரும்.
வட்டி இல்லாத கால அவகாசம் குறைப்பு: உங்களுக்கு 45-50 நாட்கள் வட்டி இல்லாத கடன் அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு தவணையை தவறவிட்டால், இந்த அவகாசம் முடிந்துவிடும். பின்னர் உங்கள் நிலுவை தொகையை முழுமையாக செலுத்தும் வரை வட்டி வசூலிக்கப்படும்.
கடன் வரம்பு குறைப்பு: நீங்கள் தொடர்ந்து கட்டணங்களை தவறவிட்டால், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி உங்கள் கடன் வரம்பை குறைக்கலாம் அல்லது உங்கள் கிரெடிட் கார்டை முழுமையாக முடக்கலாம்.
அபராதங்களுக்கு ஜிஎஸ்டி (GST): தாமத கட்டணங்களுக்கு ஜிஎஸ்டி பொருந்தும். இதனால் உங்களுக்கு ஏற்படும் செலவு மேலும் அதிகரிக்கும்.
source https://tamil.indianexpress.com/business/this-is-how-late-credit-card-payments-affect-your-credit-score-9496889





