12 8 2025
/indian-express-tamil/media/media_files/2025/07/09/tnea-engineering-counselling-2025-07-09-21-06-39.jpg)
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 400க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மூன்று சுற்று கவுன்சலிங் நிறைவடைந்து சுமார் 1.4 லட்சம் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், துணைக் கலந்தாய்வுக்கான விண்ணப்பப் பதிவு ஜூலை கடைசி வாரத்தில் தொடங்கியது. இதனையடுத்து 12 ஆம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள் இந்த துணைக் கலந்தாய்விற்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
https://www.tneaonline.org அல்லது https://www.dte.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளை பயன்படுத்தி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து இருந்தது. மேலும் மாணவர்கள் வசதிக்காக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்தநிலையில் பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுவதாக உயர்க் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார். அதன்படி, ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்து இருப்பதாவது;
12 ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2025-26 பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள தவறிய மாணவர்கள், இளநிலை பொறியியல் பட்டப்படிப்பில் சேர்க்கைப் பெற வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நோக்கில் துணைக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
துணைக் கலந்தாய்வில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு இன்று (12.08.2025) வரை வழங்கப்பட்டு இருந்தது. இந்த துணைக் கலந்தாய்வில் இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் தங்களது விண்ணப்பப் பதிவினை மேற்கொள்ள ஏதுவாக மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாணவர்கள் https://www.tneaonline.org என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 14 வரை விண்ணப்பப் பதிவினை மேற்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் மாணவர்களுக்கு ஏதேனும் விளக்கங்கள் தேவைப்படின், தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை தொடர்பு கொள்ளலாம். மேலும் 18004250110 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகத் தொடர்புக் கொண்டு தங்களது சந்தேகங்களைத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம்.
source https://tamil.indianexpress.com/education-jobs/tnea-2025-engineering-supplementary-counselling-application-deadline-extended-9653440