வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் கூறும்” “வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும்” –
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அகல்விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் அகல்விளக்கு திட்டம் குறித்து வழிகாட்டு சிற்றேடுகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்ய நாதன் ஆகியோர் மாணவிகளுக்கு வழங்கினர்.
மேலும் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்ட அகல் விளக்கத் திட்டம் மாநிலத்திலேயே புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தான் இன்று முதன் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் ஒன்பதாம் வகுப்பு வரை பனிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் இணையம் மூலமாக வரும் பிரச்சனை, டிஜிட்டல் டிவைஸை பாதுகாப்பாக பயன்படுத்துவது, இணையவழி குற்றங்களுக்கு ஆளாகாமல் இருக்க, சைபர் புல்லிங் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவிகளை பாதுகாக்கவும் டிஜிட்டல் உலகில் இருத்து பாதுகாக்கவும் தன்னம்பிக்கையுடன் முன்னேறவும் வழிவகை செய்யும் திட்டம்தான் அகல் விளக்கு.
அகல்விளக்கு திட்டத்தில் ஆறு வகைகள் உள்ள நிலையில் இதுகுறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு ஆறு வாரங்களில் மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட உள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்து ஒவ்வொரு வகைக்கும் காணொளியும் தயார் செய்யப்பட்டுள்ளது. அகல்விளக்கு திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில்,
“குறிப்பாக ஒரு திட்டம் சென்னை போன்ற தலைநகரிலோ அல்லது திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் போன்ற மாநகரங்களில் தான் அறிமுகப்படுத்தப்படும். ஆனால் இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த மாவட்டமாக உள்ள புதுக்கோட்டையில் தான் இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்று துணை முதலமைச்சர் அறிவுறுத்தியதால் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அகல் விளக்கு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் அனைவரது கையிலும் போன் உள்ளது. மொபைல் போனுக்கு நாம் அடிமையாகி உள்ளோம். பெண் பிள்ளைகள் மிகுந்த கவனமாக இருக்க கூடிய காலகட்டம். டெக்னாலஜி வரமாகவும் சில நேரத்தில் சாபமாகவும் இருக்கிறது. ஒரு லிங்கை கிளிக் செய்தால் பரிசு பொருள் கிடைக்கும் பணம் கிடைக்கும் என்று எண்ணி அதனை தொட வேண்டாம் எப்பொழுது உழைத்தால் தான் ஊதியம் கிடைக்கும். வாசிக்கலாம் வாங்க என்று புத்தகம் தான் கூறும். வா…சிக்கலாம் என்று மொபைல் போன் கூறும், அதனால் புத்தகத்தை படியுங்கள். ஒரு தவறான புகைப்படத்தில் உங்களது முகம் வருகிறது உடனடியாக நீங்கள் தவறான முடிவுக்கு சென்றுவிடக்கூடாது.
சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. சாதித்த பெண்களை பற்றி தெரிந்து கொண்டு அவர்களை ரோல் மிடலாக எடுத்துக் கொள்ளுங்கள். நமது பண்பாடு கலாச்சாரம் மொழி இவற்றை மறந்துவிடாதீர்கள். பண்பாடு கலாச்சாரம் இவற்றையெல்லாம் பறைசாற்ற வேண்டும் என்றால் அதற்கு மொழிதான். அதை நாம் தூக்கிப் பிடிக்க வேண்டும். பெற்றோர்கள் உங்களது குழந்தைகள் ஏதாவது பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று வந்தால் கடிந்து கொள்ளாதீர்கள்.
வஞ்சித்து விடாதீர்கள், அவர்களும் மனித இனம்தான் சில தவறுகளை செய்திருப்பார்கள் தான், ஒன்பதாம் வகுப்பு படிக்க தொடங்கிவிட்டால் நண்பர்களாக பாருங்கள். குழந்தைகளை முதலில் கண்காணித்து புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அவர்கள் மனதில் இருப்பதை பெற்றோர்களாகிய நீங்கள் தான் தெரிந்து கொள்ள முடியும். டெக்னாலஜியில் எந்த எல்லை வரை செல்ல வேண்டும் எந்த எல்லை தாண்டி போகக்கூடாது என்பதை பெண்கள் ஆகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அமைச்சர் ரகுபதி பேசுகையில், “பெண்கள் நாட்டின் கண்கள் நாம் போற்றி பாதுகாக்க வேண்டியது பெண்கள். ஒரு பெண்ணின் ஆதிக்கம் வீட்டில் இருக்கிறது என்றால் அந்த வீடு நன்றாக இருக்கும். அப்படிப்பட்ட பெண்கள் பாதுகாப்போடு இருப்பது தற்போது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எந்தக் கதைக்கும் ஆளாகாமல் நம் சொந்தக் கதையை மட்டும் பார்த்தால் நம்மை வெல்ல யாரும் கிடையாது. நம் வெற்றி நம் கையில் இருக்கிறது என்ற எண்ணத்தோடு இருந்தால் நம்மளை யாரும் திசை திருப்பி விட முடியாது என்று தெரிவைத்துள்ளார்.