12 08 2025
/indian-express-tamil/media/media_files/2025/08/12/madurai-mh-2025-08-12-23-12-29.jpg)
மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற ரூ.150 கோடி சொத்து வரி முறைகேடு தொடர்பாக, தூத்துக்குடியில் பணியாற்றி வந்த உதவி கமிஷனர் சுரேஷ்குமார், மற்றும் மதுரை மேயர் இந்திராணியின் கணவர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சியில் நடந்த இந்த பெரும் முறைகேடு, தமிழக அரசியலில் அதிர்வலை ஏற்படுத்தியது. முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த 5 மண்டலத் தலைவர்கள் மற்றும் இரு நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த வழக்கில், இதுவரை, ஓய்வு பெற்ற உதவி கமிஷனர் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பில் கலெக்டர்கள் உட்பட 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அ.தி.மு.க. தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், மதுரை டி.ஐ.ஜி. அபினவ் குமார் தலைமையிலான விசாரணைக் குழு தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், முறைகேடு நடந்த காலத்தில் மதுரையில் பணியாற்றிய சுரேஷ்குமார், தற்போது தூத்துக்குடி உதவி கமிஷனராக இருந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான சொத்து வரிக் குழுத் தலைவர் விஜயலட்சுமியின் கணவர் கண்ணன் அளித்த வாக்குமூலத்தின் பேரிலேயே இவரை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுரேஷ்குமார் விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
அதேபோல், மதுரை மாநகராட்சி சொத்து முறைகேடு வழக்கில் ஏற்கனவே 13 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/madurai-corporation-tax-issue-thuththukudi-deputy-commissioner-arrest-update-in-tamil-9654106