புதன், 13 ஆகஸ்ட், 2025

காசா படுகொலைகள் குறித்து இந்தியாவின் மௌனம் 'வெட்கக்கேடு' - பிரியங்கா காந்தி கண்டனம்

 

Priyanka Gandhi

கடந்த காலங்களிலும் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி வத்ரா, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Photograph: (PTI Photo)

காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, இஸ்ரேல் ராணுவத்தால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக இந்திய அரசின் "மௌனத்தையும், செயலற்ற தன்மையையும்" செவ்வாய்க்கிழமை கண்டித்தார். இதற்கு இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரூவென் அசார், பிரியங்கா காந்தியின் கூற்றை "வெட்கக்கேடான ஏமாற்று வேலை" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

காசாவில் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 60,000-ஐ எட்டியுள்ள நிலையில், பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டினியால் வாடும் குழந்தைகளின் படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி, இஸ்ரேல் மீதான சர்வதேச விமர்சனங்களைத் தூண்டி வருகின்றன.

இன்று அதிகாலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரியங்கா காந்தி, “இஸ்ரேல் அரசு இனப்படுகொலையை செய்து வருகிறது. அது 60,000-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுள்ளது, அவர்களில் 18,430 குழந்தைகளையும் கொலை செய்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்களை, அதில் பல குழந்தைகளையும், பட்டினி போட்டு கொன்றுள்ளது. மேலும், மில்லியன் கணக்கான மக்களை பட்டினி போட அச்சுறுத்துகிறது. இந்த குற்றங்களுக்கு மௌனமாகவும், செயலற்ற நிலையில் இருப்பதும் ஒரு குற்றமே.” என்று கூறியிருந்தார்.

பாலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் இத்தகைய அழிவைக் கட்டவிழ்த்துவிடும்போது, இந்திய அரசு மௌனமாக இருப்பது வெட்கக்கேடானது” என்றும் பிரியங்கா காந்தி மேலும் கூறினார்.

அல் ஜசீரா செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த குறைந்தபட்சம் 5 பத்திரிகையாளர்கள் காசா நகரத்தின் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டதை "கொலை" என்று குறிப்பிட்டு,  “உண்மைக்காக நிற்கத் துணிந்தவர்களின் அளவிட முடியாத துணிச்சலை, இஸ்ரேல் அரசின் வன்முறை மற்றும் வெறுப்பு ஒருபோதும் உடைக்காது” என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் வலியுறுத்தினார்.

"அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் 5 பத்திரிகையாளர்களின் படுகொலை, பாலஸ்தீன மண்ணில் நிகழ்த்தப்பட்ட மற்றொரு கொடூரமான குற்றம்" என்று எக்ஸ் தளத்தில் பிரியங்கா காந்தி மற்றொரு பதிவில் எழுதினார்.

ஊடக நிறுவனத்தின் தகவலின்படி, அல் ஜசீரா பத்திரிகையாளர் அனாஸ் அல்-ஷரிப், மற்ற 4 சக பத்திரிகையாளர்களுடன் சேர்ந்து, காசா நகரில் பத்திரிக்கையாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இஸ்ரேல் ராணுவம் பின்னர் இந்தத் தாக்குதலை ஒப்புக்கொண்டு, அல் ஜசீரா பத்திரிகையாளராக நடித்த ஹமாஸ் குழு தலைவரைக் கொன்றதாகக் கூறியது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் திங்கள்கிழமை, பத்திரிகையாளர்களின் கூடாரத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், "அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் காசாவிற்குள் உடனடியாக, பாதுகாப்பான மற்றும் தடையற்ற அணுகலை" கோரியது.

இதை “சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கடுமையான மீறல்" என்று அழைத்த ஐ.நா. "அனைத்து பொதுமக்களையும், பத்திரிகையாளர்களையும் இஸ்ரேல் மதிக்கவும், பாதுகாக்கவும் வேண்டும். அக்டோபர் 7, 2023 முதல் காசாவில் குறைந்தது 242 பாலஸ்தீனிய பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று எழுதியது.

source https://tamil.indianexpress.com/india/priyanka-gandhi-indias-silence-shameful-al-jazeera-journalists-killed-israel-violence-gaza-9652125

12 08 2025