செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

TNTET 2025 Exam: 2 ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு - முழு விபரம் இதோ

 

TRB-TET exam

TNTET 2025 Exam Notification: 2 ஆண்டுக்குப் பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு - முழு விபரம் இதோ

ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கடந்த 2023-க்குப் பிறகு இப்போது நடத்தப்படும் இந்தத் தேர்வு, ஆசிரியராகும் கனவுடன் காத்திருப்பவர்களுக்கு முக்கியமான வாய்ப்பாக அமைந்துள்ளது. இந்தத் தேர்வுகள் தாள் I-க்கு நவம்பர் 1-ஆம் தேதியும், தாள் II-க்கு நவம்பர் 2-ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் காலம்: ஆகஸ்ட் 11 முதல் செப்டம்பர் 8 மாலை 5 மணி வரை.

விண்ணப்ப மாற்றம்: செப்டம்பர் 9 முதல் 11 வரை.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (NCTE) நிர்ணயித்த குறைந்தபட்ச தகுதியின்படி, இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்கத் தகுதி பெறுவார்கள்.

முன்னதாக, TNTET தேர்வுகள் 2013, 2014, 2017, 2019 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டன. 2023-இல் விண்ணப்பங்கள் பெறப்பட்டாலும், தேர்வு 2024-ல் நடத்தப்பட்டு, முடிவுகள் 2025-இல் வெளியிடப்பட்டன. கடந்த ஜூலை மாதம், மாநில அரசு 2,457 இடைநிலை ஆசிரியர்களை அரசுப் பள்ளிகளில் நியமித்தது.

தாள் II-க்கு B.E. பட்டதாரிகளும், அதனுடன் B.Ed. முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மொத்தமுள்ள 150 மதிப்பெண்களில், ஒவ்வொரு பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் மாறுபடும். பொதுப் பிரிவு குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் (90 மதிப்பெண்கள்) பெற வேண்டும். இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் BC, BC(M), MBC/DNC, SC, SC(A), ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதி மதிப்பெண்ணில் 5% தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வு 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில், தமிழ்/தெலுங்கு/மலையாளம்/கன்னடம் அல்லது உருது ஆகிய மொழித் தாள்களில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். ST பிரிவினர் 40% (60 மதிப்பெண்கள்), SC, SC(A), BC, BC(M), MBC, DNC மற்றும் மாற்றுத்திறனாளிகள் (PWD) 55% (82.5 மதிப்பெண்கள்) பெற வேண்டும். எனவே, தகுதியுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2013 TNTET நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.இளங்கோவன் கூறுகையில், “NCTE விதிகளின்படி, TET தேர்வை ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டும். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை கூட நடத்தப்படுவதில்லை. 2024தேர்வில் தகுதிபெற்ற ஒருலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு இன்னும் பணி உறுதி செய்யப்படவில்லை” என்று கூறினார்.


source https://tamil.indianexpress.com/education-jobs/trb-announces-tntet-2025-key-dates-eligibility-and-reservation-details-9650715