திங்கள், 11 ஆகஸ்ட், 2025

கோரிக்கைகள் நிறைவேறும் வரை'... போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்

 

Sanitation workers Issuet

'கோரிக்கை நிறைவேறும் வரை பின்வாங்க மாட்டோம்'... போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள் திட்டவட்டம்

பணி நிரந்தம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் 10-வது நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியை தனியாா் நிறுவனத்துக்கு மாநகராட்சி நிா்வாகம் வழங்கியதைக் கண்டித்து உழைப்பவா் உரிமை இயக்கம் சாா்பில் அந்த மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணிப் பாதுகாப்பு, ஊதிய நிா்ணயம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு 10-வது நாளாக தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் அமைச்சா்கள் KN. நேரு, சேகா்பாபு ஆகியோர் நடத்திய பேச்சுவாா்த்தை நடத்தியும் அது தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில், அரசு சார்பில் தூய்மை பணியாளர்கள் போராட்டக்குழுவுடன் இன்று 7-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒரு தூய்மைப் பணியாளர் செய்தியாளர்களிடம் ஆவேசமாகப் பேசினார். ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துக் காட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். இது போராட்டத்தின் முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் முயற்சி என்றும், அரசு Ramky என்ற தனியார் நிறுவனத்திற்காக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண, தூய்மைப் பணியாளர்கள் தனியார்மயமாக்கப்படுவது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், பொதுமக்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்கள் பங்கு மிகவும் முக்கியமானதாக இருந்தபோதும், அரசு தங்களை மதிக்காமல் பேச்சுவார்த்தை நடத்த மறுப்பதாக அந்தப் பணியாளர் வேதனை தெரிவித்தார். “தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஒருபோதும் முடிவடையாது” என்றும், “ரவுடிகள் துப்பாக்கி காட்டி மிரட்டினாலும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டோம்” என்றும் அவர் உறுதிபடக் கூறினார். 

source https://tamil.indianexpress.com/tamilnadu/permanent-employment-wage-hike-chennai-sanitation-workers-protest-intensifies-after-failed-talks-9645825