வெள்ளி, 3 அக்டோபர், 2014

இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்?





*** திருக்குர்ஆன் ***

அத்தியாயம் : 4
அன்னிஸா - பெண்கள்
மொத்த வசனங்கள் : 176

மற்ற அத்தியாயங்களை விட பெண்கள் குறித்த சட்டங்கள் அதிக அளவில் இந்த அத்தியாயத்தில் இடம் பெற்றுள்ளன.

பெண்களின் சொத்துரிமை, குடும்ப வாழ்க்கை, விவாகரத்து, போன்ற பல சட்டங்கள் இந்த அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளதால் இது "பெண்கள்' எனும் பெயர் பெற்றது.


அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.

120. அவர்களுக்கு அவன் வாக்களிக்கிறான். ஆசை வார்த்தை கூறுகிறான். ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தையே வாக்களிக்கிறான்.
121. அவர்கள் தங்குமிடம் நரகம். அதிலிருந்து தப்பிக்கும் வழியை அவர்கள் காண மாட்டார்கள்.
122. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்?
123. உங்கள் ஆசைப்படியோ, வேதமுடையோரின்27 ஆசைப்படியோ (மறுமையில் தீர்ப்பு) இருக்காது. தீய காரியம் செய்தவன் அதற்காகத் தண்டிக்கப்படுவான். அல்லாஹ்வையன்றி தனக்கு உதவுபவனையோ, பொறுப்பாளனையோ அவன் காண மாட்டான்.
124. ஆண்களிலோ, பெண்களிலோ நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
125. தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.
126. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வுக்கே உரியன. அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.
127. பெண்கள் பற்றி அவர்கள் (முஹம்மதே!) உம்மிடம் மார்க்கத் தீர்ப்பு கேட்கின்றனர். "அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பு வழங்குகிறான்'' எனக் கூறுவீராக! அநாதைப் பெண்களுக்கு கடமையாக்கப்பட்டதைக்108கொடுக்காமல் அவர்களை மணந்து கொள்ள நீங்கள் விரும்பியது பற்றியும், பலவீனமானவர்களான சிறுவர்கள் பற்றியும், அனாதைகளை நீங்கள் நியாயமாக நிர்வகிக்க வேண்டும் என்பது பற்றியும் இவ்வேதத்தில் (ஏற்கனவே) உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது.129 நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிபவனாக இருக்கிறான்.
128. தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. மனிதர்களிடம் கஞ்சத்தனம் இயல்பாகவே அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் (ஒருவருக்கொருவர்) உதவி செய்து (இறைவனை) அஞ்சிக் கொண்டால் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.
129. மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, இன்னொருத்தியை அந்தரத்தில் தொங்கவிடப்பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.