அவ்லியாக்களின் பிடரிகளை மிதித்தவர் ?.
முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெறும் மற்றொரு நச்சுக் கருத்து இது.
இதன் பொருள் பின் வருமாறு.
اذ قال يوما مخبرا بالنعم *عن وارد من ربه ذي الكرم
على رقاب الاولياء قدمي * فسلموا لذاك كل السلم
قد قلت بالاذن من مولاك مؤتمرا *قدمي على رقبات الاولياء طرا
فكلهم قد رضوا وضعا لها بشرا
அருள் நிறைந்த தம் இறைவனின் அனுமதியுடன் தமக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகளை ஒரு நாள் (முஹ்யித்தீன்) கூறினார். அதில் என் பாதங்கள் அவ்லியாக்களின் பிடரிகள் மீது உள்ளன என்றார். அனைத்து அவ்லியாக்களும் இதைப் பூரணமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நச்சுக்கருத்துக்கு விளக்கவுரையாக ஹிகாயத்தில் கூறப்படுவதையும் பார்த்துவிட்டு இதில் உள்ள தவறுகளை ஆராய்வோம்.
அப்துல் காதிர் ஜீலானி பிறப்பதற்கு சுமார் நூறு வருடங்களுக்கு முன் அப்துல் காதிர் ஜீலானி அல்லாஹ்வுடைய அவ்லியாக்கள் ஒவ்வொருவரின் கழுத்திலும் தமது பாதம் உள்ளது என்று கூறுமாறு கட்டளையிடப்படுவார் என்று ஒரு பெரியார் இல்ஹாமில் தெரிந்து கூறினார். அவர் கூறியது போலவே அப்துல் காதிர் ஜீலானி இவ்வுலகில் அதிகாரம் செலுத்திய காலத்தில் ஐம்பத்திரண்டு அவ்லியாக்கள் அடங்கிய அவையில் அப்துல் காதிர் ஜீலானி பிரகடனம் செய்தார். அங்கே இருந்த அவ்லியாக்கள் அவ்விடத்தில் இல்லாத அவ்லியாக்கள் அனைவரும் இதற்குக் கட்டுப்பட்டுத் தம் கழுத்துக்களைத் தாழ்த்தினார்கள். ஆனால் இஸ்பஹான் ஊரைச் சேர்ந்த ஒரே ஒருவர் மட்டும் மறுத்தார். இதனால் இவரது விலாயத் பறிக்கப்பட்டது.
ஏகத்துவக் கொள்கையைக் கால்களால் மிதித்துத் தள்ளக்கூடிய இந்தக் கதையில் உள்ள நச்சுக் கருத்துக்களைப் பார்ப்போம்.
ஒருவர் இறைநேசராக அவ்லியாக்களில் ஒருவராக எப்போது ஆக முடியும்?அல்லாஹ்வின் அனைத்துக் கட்டளைகளையும் பின்பற்றி நடந்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முன் மாதிரியாகக் கொண்டு வாழ்வதன் மூலம் தான் ஒருவர் இறைநேசராக முடியும்.
ஆணவம், பெருமை, மக்களைத் துச்சமாக மதித்தல் போன்ற பண்புகள் ஷைத்தானின் பண்புகள் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்! இவை அனைத்தின் கேடும் உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாகும்.
(அல்குர்ஆன் 17:37,38)
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
(அல்குர்ஆன் 31:18)
'நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்குவீர்கள். ' (என்று கூறப்படும்) பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.
(அல்குர்ஆன் 16:29)
வானங்களிலும், பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.
(அல்குர்ஆன் 45:37)
பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
(அல்குர்ஆன் 28:83)
அவர்களில் பல்வேறு கூட்டத்தினர் அனுபவிப்பதற்காக நாம் வழங்கியுள்ளதை நோக்கி உமது கண்களை நீட்டாதீர்! அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! நம்பிக்கை கொண்டோரிடம் உமது சிறகைத் தாழ்த்துவீராக!
(அல்குர்ஆன் 15:88)
அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். அறிவீனர்கள் அவர்களுடன் உரையாடும் போது 'ஸலாம் ' எனக் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 25:63)
பெருமையடிப்பதும் ஆணவம் கொள்வதும் இறைவனுக்குப் பிடிக்காது. இவை நரகத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை இவ்வசனங்கள் விளக்குகின்றன.
என் காலை இன்னொருவனின் தலையில் வைக்கிறேன் என்று கூறுவதை விட ஆணவம் வேறெதிலும் இருக்க முடியாது. சாதாரண மனிதனின் தலையில் வைப்பதே இந்த நிலை என்றால் இறைவனின் நேசர்கள் தலையில் காலை வைப்பேன் எனக் கூறுவது ஆணவத்தின் உச்சகட்டமல்லவா?
ஒருவர் தம் சகோதர முஸ்லிமை மட்டமாகக் கருதுவது அவர் தீயவர் என்பதற்குப் போதிய சான்றாகும் என்பது நபிமொழி.
அறிவிப்பபவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:: முஸ்லிம்
நீங்கள் பணிவுடன் நடங்கள். ஒருவர் மற்றவரிடம் வரம்பு மீற வேண்டாம். ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம் என்று அல்லாஹ் எனக்கு அறிவித்துள்ளான் என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார் (ரலி)
நூல்: முஸ்லிம் 4650,
யாருடைய உள்ளத்தில் கடுகளவு பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்பதும் நபிமொழி.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது.
நூல்: முஸ்லிம் 131, 133
பெருமை எனது மேலாடை. கண்ணியம் எனது கீழாடை. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு யாராவது என்னிடம் போட்டியிட்டால் அவனை நரகில் நுழைப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: முஸ்லிம் 4752
இறைவனுக்கு மாத்திரமே சொந்தமான இந்தத் தன்மைக்குத் தான் அப்துல் காதிர் ஜீலானி போட்டியிடுவதாக இந்தக் கதை கூறுகிறது.
அல்லாஹ்வின் அனுமதியுடன் தானே இதை அவர் கூறியதாகக் கதையில் உள்ளது என்று சிலர் சமாளிக்கலாம். அல்லாஹ் எவற்றையெல்லாம் நாடினானோ அவை அனைத்தையும் தன்னுடைய வேதத்தின் மூலமும் தனது தூதரின் மூலமும் அனுமதித்து விட்டான். எவற்றையெல்லாம் தடை செய்ய நாடினானோ அவற்றையெல்லாம் தன் வேதத்தின் மூலமாகவும், தூதர் மூலமாகவும் தடுத்து விட்டான்.
திருக்குர்ஆனில் அவன் தடை செய்த ஆணவத்தை வேறு எவருக்காகவும் அனுமதிக்க மாட்டான். நபிகள் நாயகத்துக்கே இறைவன் தடை செய்தவைகளை அப்துல் காதிருக்கு அனுமதித்தான் என்பது இன்னொரு மார்க்கத்தை உருவாக்குவதாகும். அப்துல் காதிரை நபியாக ஆக்குவதாகும். இந்த உண்மை கூட இவர்களுக்குத் தெரியவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பாதம் எல்லா நபிமார்களின் தலை மேல் உள்ளது என்றோ நபித்தோழர்களின் கழுத்துக்களில் என் பாதம் உள்ளது என்றோ கூறவில்லை. தம் தோழர்களிடம் நல்ல நண்பராகவே அவர்கள் நடந்து கொண்டார்கள்.
இஸ்லாத்தின் உண்மை வடிவத்தைச் சிதைக்கும் எண்ணத்தில் தான் யூதர்களால் யூதக் கைக்கூலிகளால் இந்த மவ்லிதும் இந்தக் கதையும் புனையப்பட்டிருக்க வேண்டும்.
அல்லாஹ்வின் நிலைக்கு அப்துல் காதிரை உயர்த்தி நபியவர்களை விட அவர்களைச் சிறந்தவராகக் காட்டும் இந்தக் குப்பையைத் தான் பக்திப் பரவசத்துடன் மார்க்கம் அறியாத முஸ்லிம்கள் ஓதி வருகின்றனர்.
அப்துல் காதிர் ஜீலானி இப்படிச் சொன்னார் என்று நாம் நம்பவில்லை. இப்படி அவர் சொல்லியிருந்தால் அவரது காலத்திலோ, அவருக்கு அடுத்த காலத்திலோ எழுதப்பட்ட நூல்களில் இந்த விபரம் இடம் பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த ஆதாரமும் இல்லை..
மார்க்க அறிவும் மார்க்கத்தில் பேணுதலும் உள்ள மக்கள் வாழ்ந்த காலத்தில் அப்துல் காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரை அன்றைய நன்மக்கள் விட்டு வைத்திருக்க மாட்டார்கள். மனிதனைக் கடவுளாக்கும் சித்தாந்தத்துக்கு இன்றைய முஸ்லிம்கள் பழக்கப்பட்டுப் போயிருக்கலாம். அன்றைய முஸ்லிம்கள் இதை ஜீரணித்திருக்க மாட்டார்கள்.
எல்லா அவ்லியாக்களும் அப்துல் காதிரின் கால்களில் மதி வாங்கத் தலையைக் கொடுத்தார்களாம். ஒருவர் மட்டும் மறுத்தாராம். இதனால் அவரது விலாயத் (வலிப்பட்டம்) பறிக்கப்பட்டது என்றும் மேற்கண்ட கதையில் கூறப்படுகிறது
வலிப்பட்டம் என்பது ஏதோ மதராஸாக்களில் வழங்கப்படும் ஸனது என்று நினைத்துக் கொண்டார்கள். யாரெல்லாம் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்களோ அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் நேசர்கள் தாம். தனிப்பட்ட முறையில் யார் யார் இறைநேசர் என்பது மறுமையில் இறைவன் தீர்ப்பு வழங்கும் போது தான் தெரிய வரும்.
இறையச்சம் உள்ளத்தின்பால் பட்டதாகும். எவரது உள்ளத்தில் இறையச்சம் உள்ளது என்பதை இறைவன் மட்டுமே அறிவான். அப்துல் காதிர் அவர்களின் புறச் செயல்களைப் பார்த்து அவர்கள் நல்லடியாராக இருந்திருக்கலாம் என்று நம்புகிறோம். அவரது நோக்கம் தவறாக இருந்தால் அது மறுமையில் தான் தெரியவரும்.
இறை நேசர்கள் என்று மக்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேர் ஷைத்தானின் நேசர்கள் வரிசையில் நிற்பார்கள். இறைவனின் எதிரிகள் என்று மக்களால் முடிவு செய்யப்பட்ட எத்தனையோ பேர் இறை நேசர்கள் வரிசையில் நிற்பார்கள்.
உலகில் எத்தனை அவ்லியாக்கள் இருந்தார்கள். அவர்கள் யார்? என்ற பட்டியலே அப்துல் காதிரின் கையில் இருந்தது என்ற கருத்தையும் அந்தக் கதை கூறுகிறது. அப்துல் காதிரை அல்லாஹ்வாக்கும் சதித் திட்டத்தின் ஒரு பகுதியே மவ்லிது என்பதற்கு இந்தக் கதை ஒன்றே போதிய சான்றாகும்.
அப்துல் காதிருக்கு முன் அவ்லியாக்களே வாழவில்லையா? அப்படி வாழ்ந்திருந்த அவ்லியாக்களை மிதித்தது யார்? அவர்களையும் இவரே மிதித்ததாகச் சொன்னால் உத்தம ஸஹாபாக்களையும் கண்ணியத்திற்குரிய நான்கு இமாம்களையும் இவர் மிதித்தார் என்று சொல்கிறார்களா? இவர் காலத்திற்குப் பின் கியாம நாள் வரை அவ்லியாக்கள் வர மாட்டார்களா?வருவார்கள் என்றால் அவர்களை மிதிப்பவர் யார்? அவர்களையும் இவரே மிதிப்பார் என்றால் இவர் சாகாவரம் பெற்றவரா? அப்படியானால் சாகாவரம் பெற்றவருக்கு பாக்தாதில் கப்ரு ஏன்? இத்தனைக் கேள்விகளையும் சிந்தித்தால் முஹ்யித்தீன் மவ்லிது கூறும் இக்கதை பச்சைப் பொய்யாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் வராது.
சூம்பிய ஹம்மாதின் கை ?.
القاه حماد بيوم حصر *اذ ما مشى لجمعة فى نهر
فقال شلت كفه فى قبره *فقام يدعو الله مولى النعم
مع ما يؤمن خمسة من قبرا *فى الالف حتى صححت فابتدرا
اصحابه اذ اخبروا ذالخبرا *فطالبوا تحقيقه بالحشم
فاشهد المولى بذاكم يوسفا *وعبد رحمان به قد كشفا
فاستعفروا مما جنوه اسفا *وذاك فضل المصطفى ذى العلم
ஜூம்ஆவுக்காக அப்துல் காதிர் நடந்து சென்ற போது அவரது ஆசியர் ஹம்மாத் அவரை நதியில் தள்ளினார். இதனால் மண்ணறையில் ஹம்மாதின் கை சூம்பிவிட்டது. இதைக் கண்ட அப்துல்காதிர் அல்லாஹ்விடம் துஆச் செய்தார்கள். கப்ரில் உள்ள ஐயாயிரம் பேர் இதற்கு ஆமீன் கூறினார்கள். இதை அப்துல்காதிர் மக்களிடம் கூறியவுடன் ஹம்மாதின் சீடர்கள், இதை நிரூபிக்க வேண்டும் என்று அப்துல்காதிரிடம் கேட்டனர். அல்லாஹ் யூசுஃபுக்கும், அப்துர்ரஹ்மானுக்கும் இந்தக் காட்சியைக் காட்டினான். தங்கள் தவறுக்காக ஹம்மாதின் சீடர்கள் பாவமன்னிப்புத் தேடினார்கள்.
இது முஹ்யித்தீன் மவ்லிதில் காணப்படும் இந்த வரிகளின் கருத்து. இந்த வரிகளுக்கு விளக்கவுரையாக மவ்லித் புத்தகத்தில் இடம் பெறும ஹிகாயத் என்னும் பகுதியையும் பார்த்துவிட்டு இந்தக் கதையில் வரும் அபத்தங்களை ஆராய்வோம்.
ஒரு நாள் நீண்ட நேரம் அப்துல் காதிர் வெயிலில் நின்றார். அவருக்குப் பின் ஏராளமான வணக்கசாலிகள் நின்றனர். நீண்ட நேரம் நின்று விட்டுப் பின்னர் சந்தோஷத்துடன் அவர் திரும்பியதைப் பற்றி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கவர் ஒரு நாள் நான் ஹம்மாதுடன் ஜும்ஆத் தொழச் சென்றேன். நதியோரத்தை நாங்கள் அடைந்த போது என்னை அவர் நதியில் தள்ளினார். அப்போது நான் அல்லாஹ்வின் பெயரால் ஜும்ஆவின் குளிப்பை நிறைவேற்றுகிறேன் என்றேன். நதியிலிருந்து வெளியேறி அவர்களைத் தொடர்ந்தேன். அவரது சீடர்கள் என்னைப்பழித்தனர். அவர் அதைத் தடுத்தார். இன்று கப்ரில் ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டவராக அவரை நான் கண்டேன். எனினும் அவரது வலது கை சூம்பியிருந்தது. ஏன் இப்படி என்று நான் கேட்டேன். அதற்கவர் இந்தக் கையால் தான் உம்மைத் தள்ளினேன். இதை நீர் மன்னிக்கக் கூடாதா? இதை நல்லபடியாக மாற்றுமாறு அல்லாஹ்விடம் துஆச் செய்யக்கூடாதா? என்று கேட்டார். நான் அல்லாஹ்விடம் கேட்டேன். ஐந்தாயிரம் வலிமார்கள் தங்கள் கப்ருகளிலிருந்து எழுந்து ஆமீன் கூறினார்கள். உடனடியாக அல்லாஹ் அந்தக் கையை நல்லபடியாக மாற்றி விட்டான். அந்தக் கையால் அவர் என்னிடம் முஸாபஹாச் செய்தார் எனக்கூறினார். இந்தச் செய்தி பரவியதும் ஹம்மாதின் சீடர்கள் இதை நிரூபிக்குமாறு வற்புறுத்தத்திரண்டனர். பெரும் கூட்டமாக அவரிடம் வந்தனர். அவர்களில் எவருக்குமே பேச இயலவில்லை.அவர்கள் வந்த நோக்கத்தை அப்துல் காதிரே கூறலானார். சிறந்த இருவரைத் தேர்வு செய்யுங்கள். அவர்கள் வாயிலாக இந்த உண்மை நிரூபணமாகும் என்றும் கூறினார். அவர்கள் யூசுஃப், அப்துர்ரஹ்மான் ஆகிய இரு பெரியார்களைத் தேர்வு செய்தனர். இதை ஒரு வாரத்தில் நீங்கள் நிரூபிக்க வேண்டும் என்று அப்துல் காதிரிடம் கூறினார்கள். அதற்கு அவர் நீங்கள் இவ்விடத்தை விட்டு எழுவதற்கு முன் இது நிரூபணமாகும் என்றார். சற்று நேரம் சென்றதும் யூசுஃப் எனும் பெரியார் ஓடோடி வந்தார். ஹம்மாதை அல்லாஹ் எனக்குத் தெளிவாகக் காட்டினான். யூசுஃபே நீ அப்துல்காதரின் மதரஸாவுக்கு உடனே செல். அங்குள்ளவர்களிடம் கூறு என்று ஹம்மாத் என்னிடம் கூறினார் என்றார். பிறகு அப்துர் ரஹ்மான் கைசேதப்பட்டவராக வந்து யூசுஃப் கூறியது போலவே கூறினார். அனைவரும் பாவமன்னிப்புக் கேட்டனர்.
இந்தக் கதையில் உள்ள அபத்தங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
அபத்தம் 1
ஜூம்ஆ தினத்தில் குளிப்பது வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத். இறை நேசர்கள் இது போன்ற சுன்னத்துக்களை விட்டுவிட மாட்டார்கள். ஆனால் அப்துல் காதிர் குளிக்காமலே ஜூம்ஆவுக்குச் சென்றிருக்கிறார். ஹம்மாத் அவரைப் பிடித்துத் தள்ளிய போது தான் ஜூம்ஆவின் குளிப்பை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். பிடித்துத் தள்ளாவிட்டால் குளிக்காமலே சென்றிருப்பார். இதிலிருந்து அப்துல் காதிர் சுன்னத்தைப் பேணாதவர் என்று தெரிகின்றது.
ஒரு வணக்கத்தைச் செய்ய வேண்டுமானால் ஈடுபாட்டுடனும், விருப்பத்துடனும் செய்யவேண்டும். வலுக்கட்டாயமாகத் தள்ளப்பட்டு செய்தால் அது வணக்கத்தை நிறைவேற்றியதாகஆகாது. இந்த அடிப்படை விஷயம் கூட அப்துல் காதிருக்குத் தெரியவில்லை என்று இந்தக் கதைகூறுகின்றது.
அபத்தம் 2
கப்ரில் அடக்கம் செய்யப்பட்டவரை அப்துல்காதிர் சந்தித்து உரையாடியதாக இந்தக் கதை கூறுகின்றது. இந்தச் சந்திப்பு கனவு போன்ற நிலையில் நடக்கவில்லை. மாறாக நேருக்கு நேர்இந்தச் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. அப்துல் காதிரும் ஹம்மாதும் ஒருவரை மற்றவர் முஸாபஹா செய்தார்கள் என்றும் இந்தக் கதை கூறுகின்றது. உயிருடன் இவ்வுலகில் இருப்பவர் இறந்தவருடன் நேருக்கு நேராகச் சந்திப்பது நடக்க முடியாதது என்று இஸ்லாம் கூறுகின்றது.
உயிர்களை அவை மரணிக்கும் நேரத்திலும், மரணிக்காதவற்றை அவற்றின் உறக்கத்திலும்அல்லாஹ் கைப்பற்றுகிறான். எதற்கு மரணத்தை விதித்து விட்டானோ அதைத் தனது கைவசத்தில் வைத்துக் கொண்டு மற்றதை குறிப்பிட்ட காலம் வரை விட்டு விடுகிறான்.சிந்திக்கின்ற மக்களுக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 39.45)
முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது 'என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்! ' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரைஅவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.
(அல்குர்ஆன் 23.99, 100)
இறந்தவர்களுக்கும் இவ்வுலகில் வாழ்வோருக்குமிடையே எவ்விதத் தொடர்பும் கிடையாது என்பதை இவ்வசனங்கள் அறிவித்துள்ளன. கப்ரில் உள்ளவரை அப்துல் காதிர் ஜீலானி நேருக்குநேராகச் சந்தித்ததும், அவருடன் உரையாடியதும், முஸாபஹா செய்ததும் பச்சைப் பொய் என்பதை இவ்வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.
இந்தக் கதையில் ஹம்மாத் என்பவரின் கை சூம்பியிருந்ததைத் தவிர மற்றபடி அவர் நல்ல நிலையில் உயர்ந்த அந்தஸ்துடன் இருந்ததாகக் கூறப்படுகின்றது. நல்ல மனிதர்கள் கப்ரில் எந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். அந்தவிளக்கத்துக்கு மாற்றமாக இந்தக் கதை அமைந்திருக்கின்றது.
பின்னர் நல்லடியாரின் மண்ணறை விரிவுபடுத்தப்படும். ஒளிமயமாக்கப்படும். பின்பு அவரை நோக்கி உறங்குவீராக எனக் கூறப்படும். நான் எனது குடும்பத்தினரிடம் சென்று இந்தவிபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து உம்மை இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக என்று கூறுவார்கள். இது நபியவர்கள் தந்த விளக்கம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : திர்மிதி
நல்லடியார்கள் உறக்க நிலையில் உள்ளனர். யாராலும் அவர்களை எழுப்ப முடியாது. மறுமைநாளில் இறைவனால் அவர்கள் எழுப்பப்படும் வரையிலும் அவர்கள் உறங்கிக் கொண்டே இருப்பார்கள் என்பதை இந்த ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. அப்துல் காதிர்,ஹம்மாத் என்பவரை நேருக்கு நேர் சந்தித்தாகக் கூறுவது பொய் என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.
அபத்தம் 3
ஐயாயிரம் அவ்லியாக்கள் அப்துல் காதிரின் துஆவுக்கு ஆமீன் கூறியதாகவும் இந்தக் கதை கூறுகின்றது. அவ்லியாக்கள் உறக்கத்தில் இருப்பார்கள் என்ற மேற்கண்ட ஹதீஸுக்கு இதுமுராணாக உள்ளது.
இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால்அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.
(அல்குர்ஆன் 30:52)
உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ்செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.
(அல்குர்ஆன் 35:22)
இறந்தவரைக் கேட்கச் செய்ய நபியாலும் முடியாது என்ற குர்ஆனின் மேற்கண்ட வசனங்களுக்குமுரணாக உள்ளது.
அபத்தம் 4
இந்தச் செய்தியை நம்ப மறுத்த ஹம்மாதின் சீடர்களுக்கு அப்துல்காதிர் இதை நிரூபித்த விதமும் ஏற்கத்தக்கதாக இல்லை.
இந்த இடத்தை விட்டு நீங்கள் எழுவதற்கு முன் நிரூபிக்கிறேன் என்று கூறியது மறைவான ஞானம் அவருக்கு உள்ளது என்று கூறுகின்றது. மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்பதை முன்னர் நாம் நிரூபித்தோம்.
ஹம்மாத் என்பவர் யூசுஃபுக்கும் அப்துர் ரஹ்மானுக்கும் காட்சி தந்ததாகக் கூறுவதும் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய சான்றுகளுக்கு முரணாக உள்ளது.
இவை அனைத்துக்கும் மேலாக ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அப்துல்காதிர் இவ்வாறு கூறியிருந்தால் அவரது காலத்தில் எழுதப்பட்ட நூல்களில் இது பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும்.
அப்துல்காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்தும் வகையில் இட்டுக்கட்டப்பட்ட கதைகளின் தொகுப்பே முஹ்யித்தீன் மவ்லிது. இதுபோல் புனையப்பட்ட மற்றொரு கதையைப் பார்ப்போம்.