ஞாயிறு, 19 அக்டோபர், 2014

காவல்நிலையத்தில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற உதவி ஆய்வாளரை முற்றிலுமாக பணிநீக்கம்

தமிழக அரசின் கவனத்திற்கு....!!

மாண்புமிகு தமிழக முதல்வர், தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை தலைவர், சிபிசிஐடி இயக்குனர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளின் கனிவான கவனத்திற்கு....

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவமான SP பட்டிணம் துப்பாக்கி சூடு வழக்கில் விசாரணை கைதி செய்யது முஹம்மது சார்பு ஆய்வாளர் காளிதாஸ் அவர்களை கத்தியால் குத்த வந்ததாகவும், அதனால் தம்மை தற்காத்து கொள்ள செய்யது முஹம்மதுவை துப்பாக்கியால் சுட்டதாக SP பட்டிணம் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.

தயவு கூர்ந்து தாங்கள் இந்த போட்டோவை பார்க்கவும்....

சார்பு ஆய்வாளர் காளிதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் போது அவரது உடலில் எங்கும் காயம் இல்லை,

சட்டையை கழட்டியே பிறகே காயத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பதை இந்த போட்டோவின் மூலம் உண்மையை விளங்கி கொள்ள முடியும்.

ஆகையால் திட்டமிட்டு நாடகம் ஆடி காவல்துறைக்கு கலங்கம் ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர் காளிதாஸ் அவர்கள் மீது கொலை வழக்கு, நாடகம் ஆடியது, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்க வேண்டும்.

அதே போல...

நடந்த கொலையை திட்டமிட்டு மறைக்கும் வண்ணம் சையது அலியின் தாயார் சையது அலி பாத்திமா அவர்களுக்கு....

அப்பகுதியின் துணை கண்காணிப்பாளரான டி.எஸ்.பி சேகர் அவர்கள் கொடுத்த கடிதத்தில்....

தங்களது மகன் காயம்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக உண்மைக்கு மாறான செய்தியை கொலையானவரின் தாயாருக்கு கூறியுள்ளார்.

அதாவது காவல்நிலையத்தில் நடந்த கொலையை திட்டமிட்டு மறைத்துள்ளார். உண்மைக்கு மாறாக சட்டத்தை பயன்படுத்தியுள்ளார்.

ஆகையால் சட்டத்தை காக்க வேண்டிய காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களே சட்டத்திற்கு புறம்பாக கொலையை திட்டமிட்டு மறைத்து, நாடகம் ஆடியுள்ளது முஸ்லிம் சமூக மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆகையால் கொலையை செய்தவருக்கு மரண தண்டனையை வழங்கி...

கொலையை திட்டுமிட்டு மூடி மறைத்த டிஎஸ்பி அவர்களையும் பணியிலிருந்து நீக்கி அவரையும் கைது செய்து, கொலையை திட்டமிட்டு மறைத்தது, நாடகம் ஆடியது, காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்தியது, அதிகார துஷ்பிரயோகம் செய்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவருக்கும் உரிய தண்டனையை பெற்று தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு : முகநூல் முஸ்லிம் மீடியா 



















காவல்நிலையத்தில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற
உதவி ஆய்வாளரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்து 
வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்!
--தொல்.திருமாவளவன் வலியுறுத்தல் 

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே, சுந்தரபாண்டியபட்டினம் என்னுமிடத்தில் காவல் நிலையத்தில் சையத் முகம்மது என்னும் இசுலாமிய இளைஞர் உதவி ஆய்வாளர் காளிதாசன் என்பவரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். விசாரணைக்காக அழைத்துவரப்பட்ட சையத் முகம்மது, விசாரணை செய்த உதவி ஆய்வாளர் காளிதாசன் அவர்களை அரிவாளால் தாக்கியதாகவும் அதனால் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் உதவி ஆய்வாளர் தனது கைத்துப்பாக்கியால் மூன்று முறை சுட்டதாகவும் அதில் சையத் முகம்மது பலியானதாகவும் காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. காவல் நிலையத்திலேயே அதிகாரிகளைத் தாக்கும் அளவுக்கு குற்றம்சாட்டப்பட்டவர்கள் நடந்துகொள்ள வாய்ப்பில்லை. எனவே, சையத் முகம்மது உதவி ஆய்வாளரைக் கொடூரமாகத் தாக்கினார் என்பது நம்பத் தகுந்ததாக இல்லை. காவல்துறையினரின் இத்தகைய மக்கள் விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
அண்மையில் உச்ச நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி மாண்புமிகு லோதா அவர்கள் வழங்கிய தீர்ப்பு ஒன்றில், காவல்துறையினர் ‘என்கவுன்ட்டர்’ என்னும் பெயரில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கொலை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்றும் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அந்த வகையில், தமிழக அரசு சையத் முகம்மதை படுகொலை செய்த உதவி ஆய்வாளர் காளிதாஸ் அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும். தற்போது அவரை இடைநீக்கம் செய்திருப்பது போதிய நடவடிக்கை ஆகாது. தமிழகக் காவல்துறையே அவ்வழக்கை விசாரிப்பது பொருத்தமாக அமையாது.
எனவே அவரை முற்றிலுமாக பணிநீக்கம் செய்து, வழக்கை மையப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். துப்பாக்கிச் சூட்டில் பலியான சையத் முகம்மது குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 25 இலட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டுமெனவும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழகத்தில் ‘என்கவுன்ட்டர்’ எனும் பெயரில் ஏற்கனவே பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். அதன் மீது எத்தகைய விசாரணை நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வேதனைக்குரியதாகும். காவல்துறையில் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தமக்கு வேண்டாதவர்களையும் பழி தீர்த்துக்கொள்வதற்கு இதைப் பயன்படுத்திக்கொள்ளும் போக்கு வளர்ந்திருக்கிறது. ஆகவே, எந்தவகையிலும் என்கவுன்ட்டர் நடவடிக்கையை ஏற்க இயலாது. தமிழக அரசு ‘என்கவுன்ட்டர்’ போன்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.