வெள்ளி, 3 அக்டோபர், 2014

அப்துல் காதிர் ஜீலானியிடம் முறையிட்ட ஷரீஅத் ?.




முஹ்யித்தின் மவ்லிதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அபத்தமான கதையைப் பார்ப்போம்.

قال اخرجن لابن الحمام * من ضلع بغداد المقام

لما شكا الدين القوام * مع سلب حاله السداد

 وكلما رام الدخول * خر فمن له حمول

يا طالب اسمع ما يقول * فيه ثقات باستناد

அப்துல் காதிர் ஜீலானி அவர்களிடம் இப்னுல் ஹமாம் என்பாரைப் பற்றி தீன் (மார்க்கம்) முறையிட்ட போது அவரை பாக்தாதை விட்டும் வெளியேறச் சொன்னார்கள். அவர் பாக்தாதில் நுழைய நாடும் போதெல்லாம் குப்புற விழுந்து விடுவார். அவரைச் சுமந்து வருபவர்களும் விழுந்து விடுவார்கள். (நல்லதைத்) தேடுபவனே நம்பகமானவர்கள் சான்றுடன் கூறுவதைச் செவிதாழ்த்திக் கேள் என்பது இந்தக் கவிதை வரிகளின் பொருள்.

கதை என்னவென்று விளங்கவில்லையா? கவலையை விடுங்கள்! மவ்லிதின் விளக்கவுரையாக உள்ள ஹிகாயத் பகுதி கவலையை நீக்குகின்றது. இந்தக் கதையை விளக்கமாக ஹிகாயத் எடுத்துரைக்கிறது.

عن أبى الحسن بن علي أن ابا بكر الحمامي كان من ذوى الاحوال الرضية والافعال المرضية وقال له الشيخ رضي الله عنه الشريعة تشكو منك بما اعتديت منها فنهاه عن امور فلم ينته عنها فامر على صدره كفه وما احتفه

فسلبت حاله وخرج الى العراق سريعا وكلما هم بدخول بغداد سقط لوجهه صريعا وان حمله احد ليدخله به سقطا جميعا وكان بينه وبين الشيخ المظفر رابطة المحبة فرأى ربه يوما فى واقعة الجذبة فقال الله تعالى له تمن علي يا ابا مظفر فقال يارب اتمنى رد حال ابي بكر المقصر فقال الله تعالى له ذلك عند وليي فى الدارين عبد القادر

அபூபக்கர் அல்ஹமாம் என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார். அவரிடம் அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் நீ வரம்பு மீறியதால் உன்னைப் பற்றி ஷரீஅத் என்னிடம் முறையிடுகிறது என்று கூறினார்கள். மேலும் சில காரியங்களை விட்டும் அவரைத் தடுத்தார்கள். அவர் தவிர்த்துக் கொள்ளவில்லை. அவரது நெஞ்சில் கையை வைத்து அபூபக்கரே பாக்தாத்தை விட்டும், அதன் சுற்றுப்புறத்தை விட்டும் வெளியேறு என்றும் கூறினார்கள்.

உடனே அவரது (விலாயத்) நிலை நீக்கப்பட்டது. அவர் இராக்கை நோக்கி விரைந்தார். அவர் பாக்தாதில் நுழைய முயன்றபோதெல்லாம் முகம் குப்புற வீழ்ந்தார். அவரைப் பாக்தாதுக்குள் கொண்டு வர யாரேனும் அவரைச் சுமந்து வந்தால் இருவரும் சேர்ந்து விழுவார்கள்.

அபூபக்கர் அல்ஹமாம் என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவராகவும் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட செயல்கள் உடையவராகவும் இருந்தார் என்று மேற்கண்ட கதையில் கூறப்படுகிறது. ஒருவர் இறைவனால் பொருந்திக் கொள்ளப்பட்டவரா? இல்லையா? என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த, இறைவனைத் தவிர எவராலும் அறிந்து கொள்ள முடியாத இரகசியமாகும்.

 'தூதர்களில் நான் புதியவன் அல்லன். எனக்கோ, உங்களுக்கோ என்ன செய்யப்படும் என்பதை அறிய மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர வேறு எதையும் நான் பின்பற்றவில்லை. நான் தெளிவாக எச்சரிக்கை செய்பவனே தவிர வேறில்லை ' எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 46:9)

நபிகள் நாயகத்தை மேற்கண்டவாறு இறைவன் கூறச் சொல்கிறான் என்றால் அபூபக்கர் அல்ஹம்மாம் என்பவர் இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவர் என்பது எப்படித் தெரிந்தது?

இறைவனால் திருப்தி கொள்ளப்பட்ட நிலையுடையவரைப் பற்றி ஷரீஅத் எப்படி முறையிடும்?

ஷரீஅத் என்பது பகுத்தறிவுள்ள மனிதனா? அப்படியே முறையிடுவதாக இருந்தாலும் ஷரீஅத்துக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்விடம் முறையிடாமல் இவரிடம் ஏன் முறையிட்டது?

 'இம்மார்க்கம் முழுமையாக அல்லாஹ்வுக்கே உரியது ' என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:154)

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது.

(அல்குர்ஆன் 39:3)

ஷரீஅத்துக்கு முரணான செயலைச் செய்பவர் பாக்தாதை விட்டும் வெளியேற வேண்டும் என்றால் பக்தாதில் ஷரீஅத்துக்கு மாற்றமாக எவருமே நடக்கவில்லையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஷரீஅத்துக்கு மாற்றமான காரியங்களைச் செய்பவர்கள் மதீனாவில் இருந்தனர்; முனாபிக்குகள் இருந்தனர்; யூதர்களும் இருந்தனர். அவர்களை எல்லாம் மதீனாவை விட்டு வெளியேறுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத போது இவருக்கு என்ன அதிகாரம் உள்ளது? பக்தாத் நகரம் மக்கா, மதீனா போன்ற புனித நகரமா? இப்னுல் ஹம்மாம் தஜ்ஜாலா?

பொய் தன்னைத் தானே அடையாளம் காட்டிப் பல்லிளிப்பதைப் பாருங்கள்!