செவ்வாய், 25 நவம்பர், 2014

சாமியார் ராம்பால் ஆசிரமத்தில் பயங்கர ஆயுதங்கள்!



ஹரியானா மாநிலத்தில் கொலைக்குற்றம் தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ராம்பால் சாமியாரை கைது செய்ய சென்ற போலீசார் மீது ஆசிரமத்தில் உள்ள குண்டர்கள் துப்பாக்கி வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து போலீசார் பதில் தாக்குதல் நடத்தியதில் ஆசிரம் வளாகம் போர்க்களம் போல் காட்சியளித்தது. மேலும் ராம்பாலை நெருங்க முடியாத அளவுக்கு 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் மனித கேடயங்களாக நிறுத்தப்பட்டனர். போலீசாரின் முயற்சியால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மோதலில் 5 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
பல்லாயிரக் கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் ஆசிரமத்தில் தங்கியிருந்த ராம்பாலை பர்வாலாவில் போலீஸார் கைது செய்து ஆம்புலன்ஸ் மூலம் சண்டீகருக்கு அழைத்துச் சென்றனர்.
8 வருடத்திற்கு முன்னர் உள்ள கொலை குற்றச்சாட்டு உட்பட பல குற்றச்சாட்டுக்கள் சாமியார் ராம்பால் மீது உள்ளன.
சாமியார் ராம்பால் கைது செய்யப்பட்ட பிறகு நாடு முழுவதுமுள்ள அவரது ஆசிரமங்களில் போலீசார் அதிரடியாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.
ஹரியானா மாநிலம் பர்வாலாவில் உள்ள ராம்பாலின் ஆசிரமத்திலிருந்து ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ஆசிரமத்தின் அலமாரிகளிலிருந்து 32 போர் ரிவால்வர்கள், 19 ஏர் கன்கள், இரண்டு டிபிஎல் போர், இரண்டு 315 போர் ரைஃபிள்கள், 32 போர் ரிவால்வர்களுக்கான 28 லைவ் கேட்ரிட்ஜ்கள், 12 போர் ரைஃபிள்களுக்கான 50 லைவ் கேட்ரிட்ஜ்கள், 315 போர் ரைஃபிள்களுக்கான 25 லைவ் கேட்ரிட்ஜ்கள், ஒரு சில்லி க்ரேனேடு ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டு அறைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெரிய சுவர்கள், கண்காணிப்பு டவர்கள் உள்பட ஒரு கோட்டைக்கு சமமான அளவில் ராம்பாலின் ஆசிரமம் கட்டப்பட்டுள்ளது. ராம்பாலின் பாதுகாப்பு அதிகாரிகளுக்காகவே தனியாக அறை உள்ளது. பக்தர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளிலும் சி.சி.டி.வி காமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பக்தர்களை பரிசோதிப்பதற்காக நுழைவு வாயிலில் மெட்டல் டிடெக்டர் பொருத்தப்பட்டுள்ளது. நீச்சல் குளம், 24 ஏ.சி அறைகள், மாதத்திற்கு ஒரு லட்சம் பேருக்கு உணவு, உணவு தயாரிப்பதற்கான விசாலமான சமையலறை, ஒரே தடவையில் ஆயிரம் ஃப்ரெட்டை தயாரிக்கும் இயந்திரம் ஆகியன ஆசிரமத்தில் உள்ளன.
ராம்பாலுக்காக தனியாக தயாரிக்கப்பட்ட ஹைட்ராலிக் நாற்காலி, பக்தர்களுக்கு அறிவுரை வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட கண்ணாடியால் தயாரிக்கப்பட்ட தனி பகுதியும் ஆசிரமத்தில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் பெதுலிலிருந்து 10 கி.மீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலையில் 70 ஏக்கர் பரப்பளவில் ராம்பாலின் ஆசிரமம் ஒன்றும் அமைந்துள்ளது. 50 ஆயிரம் பேர் தங்கக்ககூடிய அளவில் மிகப் பிரம்மாண்டாக கட்டப்பட்டு வரும் இந்த ஆசிரமத்தில் இதுவரை தங்கியிருந்தவர்கள் தற்போது வெளியேறி வருவதால் அந்த இடமே வெறிச்சோடி காணப்படுகிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்த ஆசிரமம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.