திங்கள், 16 மார்ச், 2026

தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கலுக்கு வெறும் 5 நாட்களே அவகாசம்; டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் மீது கிடுக்கிப்பிடி

 

தமிழகத் தேர்தல் 2026: வேட்புமனுத் தாக்கலுக்கு வெறும் 5 நாட்களே அவகாசம்; டிஜிட்டல் பணப் பரிமாற்றங்கள் மீது கிடுக்கிப்பிடி

தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டார். 

தமிழகத்தில் தேர்தல் நடைமுறைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பின்படி, ஏப்ரல் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு நடைபெறும். இதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. மார்ச் 31, ஏப்ரல் 3 மற்றும் ஏப்ரல் 5 ஆகிய தேதிகள் பொது விடுமுறை என்பதால், அந்த நாட்களில் மனுக்கள் பெறப்படமாட்டாது. இதன் காரணமாக, தமிழகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய மொத்தம் 5 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6-ஆம் தேதியாகும். இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 7-ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களைத் திரும்பப் பெற விரும்புவோர் ஏப்ரல் 9-ஆம் தேதிக்குள் அதைச் செய்தாக வேண்டும். இறுதியில், மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஒட்டுமொத்த தேர்தல் நடவடிக்கைகளும் மே 6-ஆம் தேதியுடன் நிறைவடையும்.

கண்காணிப்புப் பணிகள்

தமிழகத்தில் தற்போது மொத்தம் 5.69 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் (2.90 கோடி) ஆண் வாக்காளர்களை விட (2.78 கோடி) எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர். மேலும் 7,656 மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். தேர்தலை நியாயமான முறையில் நடத்த, முறைகேடுகளைத் தடுக்க 216 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. வருமான வரித்துறை உள்ளிட்ட 23 அமலாக்க முகமைகள் கண்காணிப்புப் பணியில் இணைந்துள்ளன. குறிப்பாக, டிஜிட்டல் பணப்பரிமாற்றங்கள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இன்று மாலை 3 மணிக்கு அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் செலவினக் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படும். பிரச்சார நேரத்தைப் பொறுத்தவரை, காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம்.

வாக்காளர்களுக்கான வசதிகள்

வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்கள் தங்களது செல்போன்களைப் பாதுகாப்பாக வைக்கத் தேவையான வசதிகள் செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கோடை வெயிலைக் கருத்தில் கொண்டு அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நிழற்குடைகள், குடிநீர் மற்றும் தடையற்ற மின்சார வசதிகள் (AMF) உறுதி செய்யப்படும். வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் வார்டு விபரங்களை இப்போதே சரிபார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புகார்களைத் தெரிவிக்க 'C-Vigil' செயலி தயார் நிலையில் உள்ளது.

சுமார் 3.2 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் 50 கம்பெனி மத்திய பாதுகாப்புப் படைகள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அர்ச்சனா பட்நாயக் தனது செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-election-2026-archana-patnaik-tn-election-schedule-2026-nomination-filing-last-date-11216619