புதன், 19 நவம்பர், 2014

பருந்தின் தலையைத் துண்டித்து உயிர்ப்பித்தவர் ?.



وقال اذما شوشت للفقرا *حديئة تصيح صوتا نكرا
يل ريح اخذا راسها فانكسرا *من بعد احياها ببدء الكلم

அப்துல் காதிர் ஜீலானியுடனிருந்த ஃபக்கீர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு பருந்துக் குஞ்சு கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்றே இதன் தலையைப் பிடி எனக் கட்டளையிட்டார்கள். உடனே அதன் தலை துண்டானது. பின்னர் இறை நாமம் கூறி அதை உயிர்ப்பித்தார்கள்.

இந்த வரிகளுக்கு விளக்கமாக அமைந்த ஹிகாயத் எனும் பகுதியையும் அறிந்து விட்டு இதில் உள்ள அபத்தங்களை அலசுவோம்.

அப்துல் காதிர் ஜீலானியின் அவையில் குழுமியிருந்த மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு பருந்து சப்தமிட்டுக் கடந்து சென்றது. அப்போது அப்துல் காதிர் ஜீலானி அவர்கள் காற்றே இதன் தலையைப் பிடி என்றார்கள். உடனே அதன் தலை ஒரு திசையிலும் உடல் மறு திசையிலும் விழுந்தன. உடனே அவர்கள் தமது ஆசனத்திலிருந்து இறங்கி பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறினார்கள். உடனே அது உயிர் பெற்றுப் பறந்து சென்றது. மக்கிய எலும்புகளை உயிர்ப்பிக்கும் இறைவனின் அனுமதியுடன் மக்கள் முன்னிலையில் இது நடந்தேறியது.

இந்தக் கதையில் எத்தனை அபத்தங்கள் என்று பார்ப்போம்.

பருந்துகள் மக்களுடன் அண்டி வாழும் உயிரினம் அல்ல. மக்களை விட்டும் விலகியிருந்து கூச்சல் எதுவும் போடாமலே தம் ஹிகாயத்தைப் பருந்துகள் சாதித்துக் கொள்ளும். மக்களெல்லாம் குழுமியிருக்கும் இடத்திற்கு வந்து பருந்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தது என்று கூறப்படுவதே இது பொய் என்பதற்குப் போதுமான சான்றாக உள்ளது.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட இன்னும் பல அபத்தங்கள் இதில் உள்ளன.

மனிதர்கள் தொழும் போது, உபதேசம் செய்யும் போது உயிரினங்கள் இடையூறு செய்வதில் ஆச்சரியம் இல்லை. நல்லது கெட்டதை வித்தியாசப்படுத்தி அறிந்து கொள்ளும் ஆற்றல் அவற்றுக்கு வழங்கப்படவில்லை. அவற்றின் சப்தம் நமக்குக் கூச்சலாகத் தோன்றினாலும் உண்மையில் அவை கூச்சல் போடவில்லை. தமக்கிடையே அவை பேசிக் கொள்வது தான் நமக்குக் கூச்சலாகத் தோன்றுகிறது.

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். 'மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும் என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 27.16)

பறவையின் மொழிகள் சுலைமான் நபிக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டதாகக் குர்ஆன் கூறுவதிலிருந்து இதை விளங்கலாம். சிந்தனையாளர்களும், மார்க்க அறிவுடையோரும் பறவைகளின் சப்தத்திற்காக ஆத்திரம் கொள்ள மாட்டார்கள். அவற்றின் கூச்சல் சகிக்க முடியாத அளவுக்கு அதிகமானால் கூட தலையைத் துண்டாக்கும் அளவுக்குப் போக மாட்டார்கள். விரட்ட வேண்டிய வகையில் விரட்டினால் அவை ஓடி விடும்.

இந்தக் கதை உண்மை என்று வைத்துக் கொண்டால் இது அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை. உண்பதற்காகவும் நம்மைத் தாக்க வரும் போதும் தற்காத்துக் கொள்வதற்காகவும் சில உயிரினங்களைக் கொல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது. அதற்காகவே பருந்தை அவர்கள் கொன்றார்கள் என்றும் கருத முடியாது. அதற்காகக் கொன்றிருந்தால் அடுத்த வினாடியே அதை உயிர்ப்பித்திருக்க வேண்டியதில்லை. பாம்பைக் கண்டால் அதை நாம் கொல்லலாம். கொல்ல வேண்டும். இதற்கு நன்மையும் உண்டு. கொன்ற பாம்பை உடனே உயிர்ப்பித்தால் அதைக் கொல்ல வேண்டும் என்று மார்க்கம் கூறுவதற்காகக் கொல்லவில்லை. தம்முடைய வல்லமையைக் காட்டவே கொன்றிருக்கிறார் என்பது தான் பொருள்.

அடுத்து அந்த பருந்தைக் கொல்வதற்காக அவர் தேர்ந்தெடுத்த முறையும் ஏற்கும் படியாக இல்லை. எல்லா உயினங்களையும் மனிதர்களுக்காக இறைவன் வசப்படுத்திக் கொடுத்திருக்கிறான். மனிதனின் விருப்பப்படி நடப்பவற்றில் காற்றை இறைவன் கூறவில்லை. 7.5725.4830.4630.4835.09 ஆகிய வசனங்களில் காற்று இறைவனின் கட்டளைப்படி மட்டும் இயங்கக்கூடியது என்று இறைவன் கூறுகிறான். இந்தப் பொதுவான விதியிலிருந்து சுலைமான் நபி விஷயத்தில் மட்டும் இறைவன் விலக்களித்ததாகக் கூறுகிறான். 21.8134.1238.36 வசனங்களில் சுலைமானுக்கு காற்றை நாம் வசப்படுத்திக் கொடுத்தோம் என்று இறைவன் கூறுகிறான். இதிலிருந்து மற்ற எவருக்கும் காற்று கட்டுப்பட்டு நடக்காது என்பதை அறியலாம்.

இந்தக் கதையில் காற்று அப்துல் காதிர் ஜீலானியின் கட்டளைக்குக் காத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் நினைத்ததை முடித்து விடுவார் என்று பயமுறுத்துவதற்காகவே இவ்வாறு கற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது இதிலிருந்து தெளிவாகும். காற்றின் அதிபதி அப்துல் காதிர் ஜிலானி தான் என்று நம்ப வைப்பதே இதன் நோக்கம் என்பதும் தெளிவாகிறது.

நபிமார்களுக்கு இறைவன் சில அற்புதங்களை வழங்கியதை நாம் அறிவோம். தமது தூதுத்துவத்தை மக்கள் நம்பி இஸ்லாத்தை ஏற்பதற்காகவும் இக்கட்டான நிலையிலிருந்து தப்புவதற்காகவும் தம் சமுதாயத்தவர் பயன் பெறுவதற்காகவும் இத்தகைய அற்புதங்களைச் சில சமயங்களில் இறைவன் அவர்கள் மூலம் நிகழ்த்திக் காட்டியுள்ளான்.

இங்கே அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கம் ஏதுமில்லை. யாரையும் இஸ்லாத்தில் இணைப்பதும் நோக்கமில்லை. ஏனெனில் இது அவரது சீடர்கள் மட்டும் குழுமியிருந்த போது நடந்திருக்கிறது. பருந்தின் தொல்லையிலிருந்து தம் சீடர்களைக் காப்பதும் கூட நோக்கம் அன்று. அது தான் நோக்கம் என்றால் உடனே அதை உயிர்ப்பித்திருக்க மாட்டார்.

அவர் இறைவனின் தூதராகவும் இருக்கவில்லை. இதன் மூலம் தாம் ஒரு இறைத்தூதர் என்பதைக் காட்டினார் என்றும் கூற முடியாது. அல்லாஹ் எப்படி அழிப்பானே அதே போல் அப்துல் காதிராலும் அழிக்க முடியும். அவன் எப்படி இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறானோ அவ்வாறு அவராலும் உயிர்ப்பிக்க முடியும் என்று மக்களை நம்பச் செய்து அவரைத் தெய்வமாக்குவதே இந்தக் கதையின் நோக்கம்.

நபியவர்கள் இது போல் இடையூறு செய்த உயினங்களைக் காற்றுக்குக் கட்டளையிட்டு அழித்ததுமில்லை. உடனேயே உயிர்ப்பித்ததும் இல்லை. அப்துல் காதிர் நபியவர்களை விட அதிக ஆற்றல் பெற்றவர். இறைவனுக்கு நிகரானவர் என்பதைத் தான் இந்தக் கதை கூறுகிறது. அபத்தங்கள் நிறைந்த இந்தக் கதையைத் தான் மவ்லிது என்று அப்பாவி முஸ்லிம்கள் பக்தியுடன் பாடி வருகின்றனர். இதற்கு இறைவனிடம் நன்மை கிடைக்குமாதண்டனை கிடைக்குமாஎன்று மவ்லிது அபிமானிகள் சிந்திக்கட்டும்