ஞாயிறு, 15 மார்ச், 2026

அனல் பறக்கும் அரசியல் களம்: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்... தேதியை அறிவித்த ஆணையம்

 

அனல் பறக்கும் அரசியல் களம்: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்... தேதியை அறிவித்த ஆணையம் 15 03 2026 

tamilnadu

தமிழ்நாட்டில்  சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் களம் சூடுப்பிடித்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தமிழ்நாட்டில் மே 10 -ஆம் தேதியுடன் சட்டப்பேரவை பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழ்நாட்டில் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில், நகர்ப்புரங்களில் 30,967 வாக்குச்சாவடிகள், கிராமப்புறங்களில் 44,065 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் (எஸ்.ஐ.ஆர்.) மூலம் தகுதியான வாக்காளர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளனர். தகுதியற்ற வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இதனை அறிவித்தார். அவர் பேசியதாவது, "மேற்கு வங்கம், அசாம், தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்வார்கள். 

நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பொறுப்புகளில் ஒன்றை ஏற்கத் தயாராக இருக்கிறீர்கள். உங்கள் வாக்கு, நீங்கள் தேர்ந்தெடுக்கும் எதிர்காலம். லட்சக்கணக்கான தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களுடன் இணைந்து, சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான, அனைவருக்கும் அணுகக்கூடிய மற்றும் அமைதியான தேர்தல்கள் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உறுதி செய்திருக்கிறது.

தேர்தல் ஆணையம் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் குடிநீர் வசதி, கழிப்பறைகள், தெளிவான சின்னங்கள்,தன்னார்வலர்களின் உதவி ஆகியவற்றை ஏற்பாடு செய்ய வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, நமது மதிப்பிற்குரிய மூத்த குடிமக்களுக்கு சிறப்பு கவனிப்பும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய ஏற்பாடுகள் மூலம் அனைத்து வாக்காளர்களும் எளிதாகவும், வசதியாகவும், பாதுகாப்பாகவும் வாக்களிக்க முடியும் என்பதை உறுதி செய்ய ஆணையம் முழு அக்கறை செலுத்தி வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ம் தேதி நடைபெறும்” என்றார். 


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-assembly-election-date-announced-11214923