வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு பெ. சண்முகம் கண்டனம்
/indian-express-tamil/media/media_files/2025/11/03/tn-cpim-leader-p-shanmugam-condemn-chief-electoral-officer-archana-patnaik-sir-issues-tamil-news-2025-11-03-19-09-26.jpg)
எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.
வாக்காளர் படியலில் இறந்தவர்கள், முகவரி மாறியவர்களின் பெயர்கள் இடம்பெற்று உள்ளன. பல வாக்காளர்களின் பெயர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் உள்ளன. எனவே தகுதியான வாக்காளர்களை மட்டுமே பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும். போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்பதற்காக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்து உள்ளது.
4 11 2025
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நாளை முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை வாக்காளர்களை கணக்கெடுக்கும் பணியை அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகள் துணையுடன் அரசு ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதைத்தொடர்ந்து வரைவு வாக்காளர்கள் பட்டியல் டிசம்பர் 9-ம் தேதியும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதியும் வெளியிடப்பட உள்ளன. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை ஒத்திவைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் பேசுகையில், "கடந்த 2002 மற்றும் 2005-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் தங்களது பெற்றோர், தாத்தா, பாட்டி பெயர்கள் இருந்தால் அதை தெரிவிக்க வேண்டும். உரிய ஆவணங்களை காட்டி டிசம்பர் 9-ந்தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறலாம். முகவரி மாற்றம் எதுவும் இருந்தால் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது. முகவரி மாறியவர்களும், 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் அதற்கான ஆவணங்களை டிசம்பர் 7-ந்தேதி முதல் ஜனவரி 3-ந்தேதிக்குள் சமர்ப்பித்து தங்களது பெயர்களை இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற செய்யலாம்." என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும் என்ற தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியின் கருத்து வன்மையான கண்டனத்துக்குரியது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், எஸ்.ஐ.ஆர் என்பதே சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் முடிவெடுத்துள்ள நிலையில் வாக்காளர்களை மிரட்டும் இந்த கருத்தை அவர் திரும்ப பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.





