/indian-express-tamil/media/media_files/2025/11/01/sri-2025-11-01-10-29-01.jpg)
ஆசியாவில் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தை வகிக்கின்றது. நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு, இயற்கை அழகுடன் காணப்படும் இலங்கையில் வெப்ப பிரதேசம், குளிர் பிரதேசம், நடுநிலையான பருவநிலையை கொண்ட பிரதேசம் என அனைத்து விதமான பருவநிலைகளையும் கொண்டுள்ளது.
ஒரு பருவநிலையிலிருந்து மற்றொரு பருவ நிலை கொண்ட பிரதேசத்திற்கு வெறும் இரண்டு மணிநேரத்தில் செல்லக்கூடிய வகையில் இலங்கை நாட்டில் சூழல் அமைந்துள்ளது. கடல், மலைகள், ஆறுகள், குளங்கள், காடுகள், நீர்வீழ்ச்சிகள் என இயற்கை அழகுடன் அமைந்துள்ள இலங்கையில் புலிகள், யானைகள், சிறுத்தைகள் போன்ற அரிய வகை மிருகங்களை இலகுவாக பார்க்க முடியும்.
இயற்கை அழகுகள் மட்டுமல்லாமல் வரலாற்று ரீதியிலான சுற்றுலா தளங்களும் இலங்கையில் உள்ளது. இதனால், வருடத்தில் பல லட்சம் மக்கள் இலங்கைக்கு சுற்றுலா செல்கின்றனர். இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு இனி ஈ.டி.ஏ பாஸ் தேவையில்லை என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அதாவது, இலங்கைக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கள் வருகைக்கு முன் மின்னணுப் பயண அனுமதிச் சான்று (ETA) பெறுவது கட்டாயம் என்ற விதியை, இலங்கை அரசு திரும்பப் பெற்றுள்ளது. இந்த முடிவு, அந்நாட்டின் குடியேற்றம் மற்றும் குடியகல்வுத் துறையால் அக்டோபர் 15, 2025 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஈ.டி.ஏ பாஸ் ரத்து செய்தது குறித்து இந்தியாவுக்கான இலங்கைத் தூதர் மகிஷினி கொலோன் தனது சமூக வலைதளப் பக்கதில் வெளியிட்டுள்ள பதிவில், "அனைத்து நாடுகளில் இருந்தும் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு அக்டோபர் 15 முதல் ஈ.டி.ஏ பாஸ் கட்டாயம் என முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிப்பு அடுத்த அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் அக்டோபர் 15-க்கு முன் இருந்ததைப் போலவே, அனைத்து ஈ.டி.ஏ மற்றும் விசா வழங்கும் சேவைகளும் தொடர்ந்து செயல்படும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
5 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்க திட்டம்
இந்திய சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்பதற்காகவே இலங்கை அரசு ஈ.டி.ஏ-யை பாஸ் முறையை திரும்ப பெற்றுள்ளது. இலங்கை சுற்றுலாத் துறை, 2025-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து 5 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இலக்குடன் செயல்படுகிறது. இந்த இலக்கை அடைய, குறிப்பாக திருமணச் சுற்றுலா, கான்பிரன்ஸ், மாநாடு போன்று அதிகம் செலவு செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/11/01/sri-1-2025-11-01-10-30-37.jpg)
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவரான புத்திக்கா ஹேவாவசம் வெளியிட்ட அறிக்கையில், "2025-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்தியர்கள் இப்போது கொழும்பு மற்றும் பென்டோட்டா போன்ற வழக்கமான இடங்களைத் தாண்டிப் பயணிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்கள் மத்திய மலைப்பகுதிகள் மற்றும் ராமாயணத் தடங்கள் போன்ற ஈர்ப்புள்ள இடங்களை ஆராய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா இருந்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் 31 சதவிகிதம் இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். 2025-ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களில் 20 சதவிகித இந்திய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு சென்றுள்ளனர். கடந்த 2024-ஆம் ஆண்டு 4.16 லட்சம் இந்தியர்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
source https://tamil.indianexpress.com/international/sri-lanka-government-said-tourist-not-required-to-obtain-eta-pass-anymore-10612259





