/indian-express-tamil/media/media_files/2025/11/03/covai-2025-11-03-21-26-24.jpg)
கோவை சர்வதேச விமான நிலையம் அருகே கல்லூரி மாணவி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு (நவம்பர் 2) சுமார் 11 மணியளவில், அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், தனது ஆண் நண்பருடன் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருந்தாவனம் நகர் பகுதியில் இருக்கும் ஒரு காலி மைதானத்தில் காரில் பேசிக்கொண்டிருந்தார் அப்போது அங்கு வந்த சுமார் 3 பேர் கொண்ட கும்பல், மாணவியையும் அவரது நண்பரையும் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
04 11 2025
அந்த கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து, மாணவியைத் தூக்கிச் சென்று அருகில் இருந்த முட்புதர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மாணவியின் ஆண் நண்பரை அரிவாள் போன்ற ஆயுதங்களால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவரது உடலில் ஏழு இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, 26 தையல்கள் போடப்பட்டு, தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறைக்கு இரவு 11:03 மணிக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக 30க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, நள்ளிரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது, ஆனால் மாணவியை மீட்க முடியவில்லை.
பாதிக்கப்பட்ட மாணவி அதிகாலை 4 மணியளவில் அந்த மூன்று பேரிடமிருந்தும் தப்பி ஓடி, பொதுமக்களின் உதவியுடன் காவல் துறையினரிடம் பாதுகாப்பு கேட்டுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்ட மாணவி, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பீளமேடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளைப் பிடிக்க மாநகர போலீசார் 7 தனிப்படைகளை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவி மற்றும் நண்பர் பயணித்த காரை மீட்டுள்ள தனிப்படை போலீசார், காரில் இருந்து மாணவியின் மணிபர்ஸ், உடைமைகள் மற்றும் உடைகளை மீட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி தற்போது அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பாலியல் வன்கொடுமை வழக்குக்கான மருத்துவப் பரிசோதனையை மேற்கொள்ள உள்ளனர். முதற்கட்ட விசாரணையில், குற்றவாளிகளில் இரண்டு பேர் 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும், ஒருவர் 30 வயதுக்கு மேற்பட்டவர் என்றும் தகவல் கிடைத்துள்ளது. போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகள் தப்பிச் சென்ற வழி மற்றும் அவர்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/coimbatore-student-gang-rape-new-updates-10619614





