ஞாயிறு, 2 நவம்பர், 2025

பழைய ஓய்வூதிய திட்டம்; ஒருநாள் வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ அறிவிப்பு

 Trichy

Trichy JACTO GEO protest| Old Pension Scheme| TN government employees strike November 18

திருச்சி:

பழைய ஓய்வூதியத் திட்டத்தை (Old Pension Scheme) அமல்படுத்துவது உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து, வரும் நவம்பர் 18ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அரசு செவிசாய்க்காவிட்டால் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் ஜாக்டோ-ஜியோ (JACTO-GEO) அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சண்முகநாதன் மற்றும் சுரேஷ் ஆகியோரது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்து ஒருங்கிணைப்பாளர்கள் பேசினர்.

11 அம்சக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வலியுறுத்தல்
செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க.) அரசு, தனது தேர்தல் வாக்குறுதிகளை இனியும் காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றித் தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

ஜாக்டோ-ஜியோவின் முக்கியக் கோரிக்கைகள்:

பழைய பென்ஷன் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்.

டெட் தேர்வு (TET) எழுதிய ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

அரசுப் பணிகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

உட்பட மொத்தம் 11 அம்ச கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

சமரசம் இல்லை: காலவரையற்ற போராட்டத்திற்குத் திட்டம்

"இந்தக் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால், வருகின்ற நவம்பர் 18ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும். அதற்கும் அரசு செவிசாய்க்கவில்லை என்றால், உடனடியாகக் காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்குவோம்" என அவர்கள் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் அவர்கள் பேசுகையில், "ஒவ்வொரு முறையும் போராட்டம் அறிவிக்கும்போது அரசு அழைத்து பேசி, உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகக் கூறுகிறார்கள். தற்போது இந்த ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. ஆனால், இதுவரை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. அதனால், இம்முறை சமரசம் இல்லாமல் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்."

"கடந்த தேர்தலில் சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்களுடைய முழு கோரிக்கை. கொடுத்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றால் வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் எங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம். ஆனால், இம்முறை எங்கள் போராட்டம் வலுவாக இருக்கும், கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராடுவோம்" எனத் தெரிவித்தனர்.

க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-jacto-geo-protest-old-pension-scheme-ops-tn-government-employees-strike-november-18-strike-10614082