திங்கள், 8 டிசம்பர், 2025

ஒரு நாள் முன்னதாகவே காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய ஏ.ஐ.டி.யு.சி: மணப்பாறையில் 3 பஸ்களை சிறைபிடித்த போலீசார்

 

All India Trade Union Congress AITUC protes begin day before in  Manapparai demand special COVID incentive for sanitation workers Tamil News

திருச்சி மாவட்ட தலைவர் ராமலிங்கசாமி தலைமையிலான மூன்று பேருந்துகளில் புறப்பட்ட 150 தொழிலாளர்களை மணப்பாறை யூனியன் அலுவலகம் அருகில் காவல்துறை தடுத்து அங்கேயே நிறுத்தி வைத்துள்ளனர்.

ஏ.ஐ.டி.யு.சி தலைமையிலான தொழிற்சங்கத்துடன் இணைக்கப்பட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் 2024 முதல் பலகட்ட போராட்டங்களை நடத்தியும், தமிழக முதல்வரிடமும், துணை அமைச்சரிடமும் கொடுக்கப்பட்ட கோரிக்கைகளில் அரசு ஏற்றுக்கொண்ட  கோரிக்கைகளான கொரோனா ஊக்கத்தொகை, மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஆட்சியாரால் நியமனம் செய்யப்படும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளிட்ட நிரந்தர பணியிடங்களில் நியமனம் செய்யப்படும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும், ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித் துறையில் தற்காலிகமாக பணி புரியும் அனைவருக்கும் குறைந்தபட்ச கூலி சட்டத்தின் கீழ் ஊதியம்  வழங்கப்படும், ஈ.எஸ்.ஐ (ESI), பி.எஃப் (PF) வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேச்சுவார்த்தையின்போது எழுத்துப் பூர்வமாக கடிதம் வழங்கியும் கூட அரசாணை ஏதும் வழங்கவில்லை.

தமிழக அரசு ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை அரசாணை  வழங்கும் வரை 08.12.2025 காலை 10 மணி முதல் சென்னை பனகல் மாளிகை அருகில் காத்திருப்புப் போராட்டம் நடத்திட முறைப்படி  அறிவித்து சென்னைக்கு புறப்பட்ட ஏ.ஐ.டி.யுசி தலைமையிலான தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ராமலிங்கசாமி தலைமையிலான மூன்று பேருந்துகளில் புறப்பட்ட 150 தொழிலாளர்களை மணப்பாறை யூனியன் அலுவலகம் அருகில் காவல்துறை தடுத்து அங்கேயே நிறுத்தி வைத்துள்ளனர். காவல்துறை தடுத்ததை கண்டித்து அங்கேயே கோஷமிட்டவாறு ஒரு நாள் முன்னதாகவே போராட்டத்தை துவக்கினர்.

திருச்சி மாவட்ட ஏஐடியுசி உள்ளாட்சித்துறை சங்க தலைவர் இந்திரஜித் போராட்டக் களத்திற்கு சென்று அவர்களுக்கு  ஆதரவளித்து உரையாற்றினார். காவல்துறையின் அடக்குமுறை செயலை திருச்சி மாவட்ட ஏஐடியுசி வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்  .
 சென்னைக்கு செல்ல விடுங்கள், இல்லை என்றால் எத்தனை நாட்கள் ஆனாலும் இங்கேயே கோரிக்கை நிறைவேறும் வரை காத்திருப்பு போராட்டத்தை தொடர்வோம் என தொழிலாளர்கள் டிசம்பர் 7-ம் தேதி இரவில் இருந்தே போராட்டத்தை தொடங்கியதால் திருச்சி மாவட்டத்தில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் தென் மாவட்டங்களில் இருந்து செல்லக்கூடிய வாகனங்களை திருச்சி மாவட்ட போலீசார் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

செய்தி: க.சண்முகவடிவேல்


source https://tamil.indianexpress.com/tamilnadu/all-india-trade-union-congress-aituc-protes-begin-day-before-in-manapparai-demand-special-covid-incentive-for-sanitation-workers-tamil-news-10891458