source https://tamil.indianexpress.com/tamilnadu/rs-45000-crore-debt-in-100-days-is-tvks-only-feat-dmk-leader-raghupathi-launches-scathing-attack-12496729
/indian-express-tamil/media/media_files/2026/01/14/ragupathy-vijay-2026-01-14-13-25-15.jpg)
100 நாட்களில் ரூ 45,000 கோடி கடன் வாங்கிய விஜய் அரசு: தி.மு.க கூறும் புள்ளி விவரம்
விஜய் ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள்; ஆனால் 100 நாள்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் தமிழக வெற்றிக் கழக ஆட்சியின் சாதனை என்று தி.மு.க முன்னாள் அமைச்சரும் எம்எல்ஏ-வுமான ரகுபதி கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க முன்னாள் அமைச்சர் ரகுபதி, த.வெ.க.வினர் ரீல்ஸ் மூலமாகவே ஆட்சிக்கு வந்தனர். தங்களின் எந்தச் சாதனையையும் சொல்லி அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை. இவர் (விஜய்) ஆட்சிக்கு வந்தால் பாலாறும் தேனாறும் ஓடும் என்றனர். ஆனால், ஆட்சிக்கு வந்த 100 நாள்களில் ரூ.45,000 கோடி கடன் வாங்கியதுதான் இந்த ஆட்சியின் சாதனை. இதில் ஒரு பைசாகூட மூலதனச் செலவுக்குச் செலவிடப்படவில்லை. தி.மு.க கடன் மட்டுமே வைத்துவிட்டுச் சென்றதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், எங்களைவிடப் பல மடங்கு கடன் வாங்கப் போகிறவர்கள்தான் இந்த ஆட்சியில் இருக்கிறார்கள்.
ஒரு திட்டத்தை அறிவிப்பார்கள்; ஆனால், அது எந்த இடத்தில் அமையப் போகிறது என்று சொல்ல மாட்டார்கள். ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் சட்டசபை அலுவலகம் என்றார்கள். அப்படியென்றால், ஒரு சதுர அடிக்கு ரூ.6,000 செலவு வருகிறது. ஆனால், அது எந்த இடத்தில் அமைக்கப்படும் என்பது குறித்து அவர்கள் கூறவே இல்லை. நாங்கள் செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரத்தை உருவாக்கினோம்; அதற்கான அடிப்படைச் செலவுகளையும் செய்துவிட்டோம். ஆனால், அந்தத் திட்டத்தை இவர்கள் ரத்து செய்துவிட்டார்கள்.
ராணிப்பேட்டையில் உள்ள ஜேகே டயர் தொழிற்சாலையை மூட வேண்டும் என சட்டப்பேரவையில் தவெக எம்எல்ஏ பேசுகிறார். அந்தத் தொழிற்சாலையை மூட முடியாது என அமைச்சர் கீர்த்தனா பதிலளிக்கிறார். ஆனால், உண்மையில் அந்த இடத்தில் தொழிற்சாலையே இல்லை. இல்லாத ஒரு தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும், அதைப் பாதுகாப்போம் என்றும் மாற்றி மாற்றிப் பேசுகின்றனர். அவர்கள் நடத்துவது 'ரீல்' ஆட்சி, இது உண்மையான 'ரியல்' ஆட்சி கிடையாது. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டை ஆட்கள் வைத்து சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை; லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரது வீட்டைச் சுத்தம் செய்து கொடுத்துவிட்டனர் என்றார்.





