திங்கள், 7 செப்டம்பர், 2026

வெறும் 94 பைசா செலவில் பிளாஸ்டிக் கழிவுக்குத் தீர்வு:

 source https://tamil.indianexpress.com/technology/tenith-adithyaa-banana-leaf-technology-plastic-alternative-12499610


Tenith Adithyaa Banana Leaf Technology plastic alternative

ரூ. 0.94 செலவில் பிளாஸ்டிக்கிற்கு முற்றுப்புள்ளி! 15 வயது தமிழனின் மாபெரும் சாதனை!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பான்மையான டீனேஜ் இளைஞர்கள் கணினி விளையாட்டுகளிலோ அல்லது பொதுத்தேர்வுக்கான புத்தகப் படிப்பிலோ மூழ்கியிருக்கும் வேளையில், உலகத்தையே அச்சுறுத்தும் பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சனைக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் கண்டுபிடிப்பாளர் தீர்வு கண்டுள்ளார்.

தனது சிறுவயதை பிளேஸ்டேஷன்களில் செலவிடாமல், வீட்டின் சிறிய ஆய்வகத்தில் புதிய யோசனைகளுடன் கழித்த தெனித் ஆதித்யா, எளிதில் வாடிப்போகும் வாழை இலைகளை பிளாஸ்டிக்கிற்குப் மாற்றாக வலுவான, நீண்ட காலம் உழைக்கக்கூடிய மற்றும் மட்கக்கூடிய பொருளாக மாற்றும் வித்தையைக் கண்டுபிடித்துள்ளார்.

தமிழ்நாட்டின் வாடாப் கிராமத்தைச் சேர்ந்த தெனித் ஆதித்யா, கோயம்புத்தூரில் உள்ள எஸ்.வி.எஸ் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர். ஆனால், பொறியியல் என்பது அவரது பலதரப்பட்ட திறமைகளில் ஒரு பகுதி மட்டுமே. நாணய சேகரிப்பாளர், ஆசிரியர், பறவைகளைப் பழக்குபவர், மென்பொருள் உருவாக்குநர் மற்றும் கணினி விளையாட்டு விரும்பியான இவர், 35 கணினி பயன்பாடுகளையும் 6 மொழிகளையும் கற்றுத் தேர்ந்துள்ளார்.

தனது 10-வது வயதிலேயே 'பனானா லீஃப் டெக்னாலஜி' (Banana Leaf Technology) என்ற கருத்தாக்கத்திற்கான அடித்தளத்தை இவர் அமைத்தார். விவசாயிகள் பெருமளவில் வாழை இலைகளைக் கழிவுகளாக வீசுவதைக் கண்ட தெனித், கழிவாகக் கருதப்படும் இந்த இலைகள் மூலம் அவர்களுக்குக் கூடுதல் வருமானம் ஈட்டித்தர விரும்பினார்.

இந்தச் சிறுவயது யோசனை, பின்னாளில் காப்புரிமை பெறப்பட்ட ஒரு கண்டுபிடிப்பாக உருவெடுத்து, 2014-ல் இந்திய கண்டுபிடிப்புத் திட்டத்தில் ஆவணப்படுத்தப்பட்டு வணிகமயமாக்கப்பட்டது.

வாழை இலை தொழில்நுட்பம் செயல்படும் விதம்

வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல், இலையின் செல்லுலார் அளவிலான வளர்சிதை மாற்றத்தைக் குறைத்து, அதன் இயற்கை அமைப்பைச் சிதையாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பமாகும்.

இம்முறையில் பதப்படுத்தப்படும் வாழை இலைகள் 1 முதல் 3 ஆண்டுகள் வரை கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கும். பதப்படுத்தப்பட்ட இலைகளைக் கோப்பைகள், தட்டுகள், கரண்டிகள், அஞ்சல் உறைகள், பரிசுப் பொட்டல தாள்கள் மற்றும் ஐஸ்கிரீம் கூம்புகள் போன்ற பல அன்றாடப் பொருட்களாக மாற்ற முடியும்.

பயன்பாட்டின் தடிமன் மற்றும் தேவையைப் பொறுத்து இவை நான்கு தரங்களில் தயாரிக்கப்படுகின்றன. 

இப்பொருட்கள் 100% மட்கக்கூடியவை. பயன்பாட்டிற்குப் பிறகு எறியப்பட்டால், வெறும் 28 நாட்களில் இயற்கையாகவே உரமாக மாறிவிடும்.

குறைந்த உற்பத்திச் செலவும் எதிர்காலச் சவால்களும்

ஒரு இலையை உருவாக்குவதற்கான உற்பத்திச் செலவு வெறும் 0.01 டாலர் மட்டுமே (சுமார் 94 பைசா) .

இது குறித்துப் பேசிய தெனித், "நாம் பிளாஸ்டிக் தட்டுகள் மற்றும் பைகளைத் தொடர்ந்து பயன்படுத்திப் பழகிவிட்டோம். காகித மாற்றுகள் ஒரே ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்பட்டு அதிகக் கழிவுகளை உருவாக்குகின்றன. இதற்கு மாற்றாகவே வாழை இலை தொழில்நுட்பத்தைக் கொண்டு வந்தேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பத்திற்குச் சில நடைமுறைச் சவால்களும் உள்ளன. வட இந்தியாவில் தென் மாநிலங்களைப் போல வாழை இலைகள் பரவலாகக் கிடைப்பதில்லை என்பதால், அங்கு உற்பத்தியை விரிவுபடுத்துவது சற்றுச் சிரமமானது.

மேலும், ஒரே பிராந்தியத்திலிருந்து பெருமளவில் இலைகளைக் கொள்முதல் செய்வது அப்பகுதியின் வாழைச் சாகுபடியில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், தெனித் ஆதித்யாவின் இந்த முயற்சி, நம் பாரம்பரியப் பொருட்களை அறிவியல் பூர்வமாகப் பயன்படுத்திப் புதிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதற்குச் சிறந்த சான்றாகும்.