வங்கக் கடலில் தீவிர புயலாக 'முரசு':
/indian-express-tamil/media/media_files/2026/11/02/rain-2026-11-02-07-56-18.png)
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அப்போது தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலைரயில், சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெய்தால், சில பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வெள்ளம் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பியதால், சில பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், சென்னையில் பல இடங்களில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி ஊழியர்கள் என பலரும் தண்ணீரை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். இந்த சமயத்தில் உருவான அர்னாப் புயல் காரணமாக மழைப்பொழிவு அதிகமான நிலையில், ஆந்திரா பகுதியில் இந்த புயல் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வங்கக்கடலில் முரசு புயல் உருவாகியுள்ளது. இதனால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு கனமழை வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய 9 மாவட்டங்களில் காலை 4 மணி வரை கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அதன்படி சென்னையில் நள்ளிரவு முதல் பல பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், சென்னை, திருவள்ளூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவம்பர் 2) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் தீவிமடைந்துள்ள நிலையில், ஆந்திரா, வட தமிழக கடற்கரை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 'முரசு' புயல் நாளை (நவம்பர் 3) ஆந்திராவின் பாபட்லா - காவாலி அருகே கரையை கடக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும், இதனால், ஆந்திரா, வட தமிழக கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி தென்மேற்கு வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ‘முரசு' புயல், தீவிர புயலாக வலுப்பெற்று, சென்னைக்குக் கிழக்கே சுமார் 300 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 6 மணி நேரத்தில் 20 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக வலு பெற்றுள்ள முரசு புயல், இன்று நள்ளிரவு 11.30 மணியில் இருந்து நாளை (நவம்பர் 3) அதிகாலை 4 மணிக்குள் ஓங்கோல் அருகே தெற்கு ஆந்திர கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த முரசு புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாக சென்னை மாதவரத்தில் 11.05 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து எண்ணூர் துறைமுகத்தில் 10.10 செ.மீ, நுங்கம்பாக்கம் 8.75 செ.மீ மழை பெய்துள்ளது. அதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் 8.57 செ.மீ, திருவள்ளூர் புழல் 7.95 செ.மீ, சென்னை 7.85 செ.மீ, ஒய்.எம்.சி.ஏ நந்தனம் 6.35 செ.மீ, அண்ணா பல்கலைகழகம் 5.90 செ.மீ, தரமணி 5.40 செ.மீ, மீனம்பாக்கம் 3.33 செ.மீ மழை பெய்துள்ளது.
முரசு புயல் ஆந்திராவில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணிக்காக அரக்கோணத்தில் இருந்து 90 பேர் கொண்ட என்.டி.ஆர்,எப் (NDRF) குழு ஆந்திரா சென்றுள்ளது. ஆந்திராவின் நெல்லூர், பிரகாசம், மார்காபுரம் பகுதிகளுக்கு என்.டி.ஆர்,எப் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முரசு புயல் இன்று நள்ளிரவு ஆந்திரா, நெல்லூர் அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஆந்திரா அரசின் சார்பிலும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், முரசு புயல் தற்போது நெல்லூர்-காவலி பகுதிக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பாதையின்படி, நெல்லூரை நோக்கி நகர்வதற்கு முன்பு, புயல் அமைப்பு சென்னை கடற்கரைக்கு மிக அருகில் வர வேண்டும். எனவே, சென்னையில் கனமழை பெய்யும் அபாயம் உறுதியாகியுள்ளது. குறிப்பாக, வட சென்னை முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கடலோரப் பகுதிகளிலும், கடலுக்கு அருகிலுள்ள இடங்களிலும் அதிக மழை அளவு பதிவாக வாய்ப்புள்ளது. நாம் தற்போது காண்பது வெளிப்புற மழைப் பட்டைகளை மட்டுமே. ஏற்கனவே இரண்டு சுற்றுகள் கடந்துவிட்டன, மேலும் இடையிடையே இடைவெளிகளுடன் இப்பகுதி முழுவதும் மழைப் பொழிவு தொடரும். முரசு புயல் சென்னை கடற்கரைக்கு மிக அருகில் நகர்வதால், நாளை காலை முதல் மாலை வரை மிகக் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றத்தின் மூலம், மழை அளவை நாம் இப்போது உயர்த்தலாம். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் 100 மி.மீ. மழையைத் தாண்டுவதற்கு நல்ல வாய்ப்புள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் வடசென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிய சில இடங்களில் 150 மி.மீ மழை பெய்யும். பா குழு, மகிழ்ச்சியாக இருங்கள்! எல்லாம் நல்ல பதியாக நடக்கும். முரசு தட்டட்டும், மழை வெளுத்து வாங்கட்டும் என்று பதிவிட்டுள்ளார்.





