ஞாயிறு, 22 நவம்பர், 2026

தி.மு.க போல் உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும்': ஜவாஹிருல்லா கடிதம்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/jawahirullah-mh-letter-to-tn-cm-vijay-thiruparankundram-karthigai-deepam-dispute-tamil-news-12829685


Jawahirullah MH letter to TN CM Vijay thiruparankundram karthigai deepam dispute Tamil News

திருப்பரங்குன்றம் தீபத் தூண் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இடைக்கால தீர்ப்பு விவகாரம் தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தமிழநாடு முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதி இருக்கிறார். அதில் தெரிவித்து இருப்பதாவது:-

நேற்று உச்சநீதிமன்றம் மதுரை திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் வழங்கியுள்ள தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடத்தில் நவம்பர் 24 அன்று ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருப்பது சமூக நல்லிணக்கத்தை நாடும் அனைவருக்கும்ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இந்தக் கல் தூண் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடம்தானா? அது வழிபாட்டுக்குரிய தீபத்தூணா.? அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நில அளவைத் தூணா? அந்த இடம் யாருக்குச் சொந்தமானது? அங்கு தீபம் ஏற்றுவதற்கு நிறுவப்பட்ட மத வழக்காறு ஏதேனும் உள்ளதா? போன்ற அடிப்படையான சட்ட, வரலாற்று மற்றும் சொத்துரிமை சார்ந்த கேள்விகளுக்கு இன்னும் இறுதியான விடை காணப்படவில்லை.

இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான கண்டறிதல்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டு, அதே சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடான அணுகுமுறையாகவே தோன்றுகிறது.

இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்றும், இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் உரிமை கோருவதற்கான முன்னுதாரணமாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத வழக்காற்றுக்கான ஆதாரமாகவோ பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தைத் தாண்டி, நடைமுறையில் ஒரு சர்ச்சைக்குரிய மத நடவடிக்கைக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கும் புதிய சர்ச்சைகள் உருவாவதற்கும் வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

திருப்பரங்குன்றம் குறித்த உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவில் பத்தி 11 மற்றும் 12 மிக முக்கியமானவை. தீபம் ஏற்றப்படும் நாள் 24.11.26 சமீபத்துவிட்டது என்றும், இந்த ( தீப) பண்டிகை அன்று நடக்காவிட்டால், பிறகு நடத்துவது பயனில்லை என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது. 

ஒன்று புராணம் தெரிந்திருக்கவேண்டும் அல்லது உண்மை தெரிந்திருக்க வேண்டும். புராணத்தினபடி, கார்த்திகை தீபம் ஆண்டுதோறும்  திருவண்ணாமலையில் ஏற்றப்படும். இந்து மத நம்பிக்கைபடி படைக்கும் கடவுளான பிரம்மாவும், காக்கும் கடவுளான விஷ்ணுவும், அகந்தை கொண்டு  தன்னையே பெரிய சக்தி  என்று கூறி சச்சரவு செய்ய, அழிக்கும் கடவுளான சிவன், ஜோதி வடிவெடுத்து, இந்த இருவரையும், அடியையும், முடியையும் தேட வைத்து, அவர்கள் அதனை அடைய முடியாமல், அகந்தை அழிந்த நாள் என்று, நமது சகோதர இந்து சமுதாயத்தினர் நம்பும் புராணம் சொல்கிறது. 

இதை குறிக்கவே ஆண்டுதோறும், திருவண்ணாமலை குன்றில் தீபம் ஏற்றப்படுகிறது. அங்கே போக இயலாத பக்தர்கள் தங்கள் வீட்டிலேயே அகல் விளக்கு ஏற்றுகிறார்கள். மற்ற இடங்களில் தீபம் ஏற்றுவது ஒரு சம்பிரதாயம் தான். 24.11.2026 அன்று பிரச்சனைக்குட்பட்ட இடத்தில் ஏற்றாமல் போனால், அது தவறிவிடும் என்று உச்ச நீதிமன்றம் எப்படி தீர்மானித்தது என்று தெரியவில்லை. 

சென்றை ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் அதை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை. ஏனெனில் தர்கா வழியாக மட்டுமே அந்தத் தூணை அடைய முடியும். அது தர்காவை அத்துமீறி ஆக்கிரமிப்பதாக அமையும். அதனால்தான் முந்தைய திமுக அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்தது. இதே அணுகுதுறையை தற்போதைய தங்கள் அரசும் உறுதியாக கடைபிடித்து தமிழ்நாட்டின் அமைதியைப் பாதுகாக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார். 

2,000 ஆண்டுகளுக்கு முன்பே நீர் சுத்திகரிப்பு அமைப்பு;

 source https://tamil.indianexpress.com/tamilnadu/keeladi-ancient-water-recycling-system-discovery-12829105

neer

சங்க காலத்தின் முக்கிய நகர்ப்புறக் குடியிருப்பு பகுதியான கீழடியில் அண்மையில் நடைபெற்ற அகழாய்வு கண்டுபிடிப்புகள் குறித்த தற்போதைய விளக்கங்கள், மேலதிக அறிவியல் ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டால், மறுபயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பண்டைய நீர் சுத்திகரிப்பு அமைப்பிற்கான சான்றுகளை வழங்கும் முதல் அகழாய்வுத் தளமாகக் கீழடி உருவெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் தொல்லியல் அலுவலரும், கீழடி அகழாய்வுகளுடன் தொடர்புடைய முக்கியத் தொல்லியல் ஆய்வாளருமான எம். ரமேஷ் டி.டி நெக்ஸ்ட் நாளிதழிடம் கூறியதாவது, சாயப்பட்டறைப் பிரிவுடன்  இணைக்கப்பட்ட நீர் வடிகட்டும் அமைப்பு இருந்திருக்க வாய்ப்புள்ளதைத் தொல்லியல் எச்சங்கள் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தார். இருப்பினும், இந்த விளக்கத்திற்கு மேலதிக தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ரீதியான உறுதிப்படுத்தல் தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.

"மேலதிக தொழில்நுட்ப மற்றும் அறிவியல் ஆய்வுகள் மூலம் எங்களது விளக்கம் உறுதிப்படுத்தப்பட்டால், நீர் மறுபயன்பாட்டிற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு அமைப்பிற்கான சான்றுகளை வழங்கும் முதல் அகழாய்வுத் தளமாக கீழடி இருக்கக்கூடும். சந்தேகிக்கப்படும் இந்த அமைப்பின் தன்மை மற்றும் செயல்பாட்டை உறுதி செய்ய, மாதிரிகள் பல்வேறு ஆய்வகங்களில் விரிவான பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் கூறினார்.

மேலும், பண்டைய மக்கள் வைகை ஆற்றிலிருந்து நீரைப் பெற்று, திறந்த மற்றும் மூடிய கால்வாய்களின் வலைப்பின்னல் வழியாகச் சாயப்பட்டறைக்கு விநியோகித்திருக்கலாம் என்று ரமேஷ் குறிப்பிட்டார்.  "சாயமேற்றும் செயல்முறையின் போது உருவான கழிவுநீர், மணல் மற்றும் கூழாங்கற்களைக் கொண்ட வடிகட்டும் அமைப்பின் வழியாக செலுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இது சுத்திகரிக்கப்பட்ட நீரை மீண்டும் பயன்படுத்த அனுமதித்திருக்கலாம். இது உறுதிப்படுத்தப்பட்டால், சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி மக்கள் நீர் சேமிப்பை எவ்வாறு புரிந்து கொண்டார்கள் மற்றும் தொழிற்சாலைக் கழிவுநீரை நிர்வகிக்க எத்தகைய அமைப்புகளை உருவாக்கினார்கள் என்பது குறித்த முக்கியத் தகவல்களை இந்த சான்றுகள் வழங்கும்" என்று அவர் விளக்கினார்.

ஒருங்கிணைந்த சாயமேற்றும் நடவடிக்கை இருந்ததற்கான சாத்தியத்தை உறுதிப்படுத்தும் விதமாக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உயிரியல் அறிவியல் பள்ளியின் மரபியல் துறையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 'கேஸ் குரோமடோகிராபி மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி' பகுப்பாய்வு மூலம் 20 அவுரிச் சாய  வழித்தோன்றல் மூலக்கூறுகளைக் கண்டறிந்துள்ளனர். ஏழு பானை ஓடுகள், கால்வாய்களின் செங்கற்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மண் மாதிரிகளில் இந்த வேதியியல் தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த காலகட்டத்தில் இண்டிகோ நிறம் விலை உயர்ந்ததாக இருந்ததால், சாயமேற்றப்பட்ட துணி வகைகள் பல்வேறு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். "துணி வர்த்தகம் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட நீரின் பயன்பாடு குறித்து மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்" என்று ரமேஷ் தெரிவித்தார்.

source https://tamil.indianexpress.com/tamilnadu/keeladi-ancient-water-recycling-system-discovery-12829105

முடிந்து போன விவகாரத்தை வைத்து தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கிறது

 aource https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-mp-kanimozhi-said-about-balakrishnan-family-news-update-12829391

Kanimozhai

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் நடந்த 13-ஆம் தேதி காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரால் கூறப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் மதுரை பரவையில் தங்களது உறவினர் வீட்டில் தங்கி உள்ள நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி கூறுகையில், பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் சொல்லி இருக்கிறார்கள். தற்போது அவரது பிணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கிறார்கள். பாலகிருஷ்ணன் தற்கொலை செய்யவில்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள். 

ராணுவத்தில் உள்ள அவரது அண்ணன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள் பாலகிருஷ்ணனின் மகன் 17 வயது பையன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். அவரது குடும்பத்தினரை மிரட்டி வருகிறார்கள். இது யாரால் நடந்தது போலீஸ் நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அதற்கு நியாயம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை குடும்பத்தில் இருக்கும் பேரன் பேத்திகள் முதல் அனைவரையும் மிரட்டுகிறார்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசி மிரட்டி இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வராமல் இருப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

பாலகிருஷ்ணனை கொலை செய்தவர்களை தண்டிப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாலகிருஷ்ணன் உடலில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது, தலையில் ரத்த கசிவு இருப்பதாக கூறப்படுகிறது, நுரையீரலில் காயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்தவருக்கு காலில் அடி, கையில் அடி ரத்த கட்டு உள்ளிட்டவைகள் உள்ளது. இது எப்படி ஏற்பட்டது. தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய விஜய் தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதல்வராக இருந்த தளபதியை பார்த்து கேட்டபோது சாரி எல்லாம் வேண்டாம் நியாயம் வேண்டும் என்று கூறிய தற்போதைய முதல்வர், இப்போதைய ஆட்சியில் சாரி கூட சொல்ல வேண்டாம் நியாயம் கூட கிடைக்கவில்லை. 

எங்களுடைய முதலமைச்சர் தளபதி அப்போது ஒரு அமைச்சரை அனுப்பி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு நியாயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு அரசு தரப்பில் இருந்து யாரும் வரவில்லை, விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தற்போது அந்த குடும்பத்தை மிரட்டி இதையும் கடந்து விடலாம் என இந்த தவெக அரசு நினைக்கிறது.

Kanimozhai1

தொடர்ந்து அனைவர் மீதும் வழக்கு, யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் அவர்கள் மீது வழக்கு என போட்டு வருகிறார்கள் அனைவர் மீதும் வழக்கு இங்கு அருகில் இருக்கக்கூடிய மூர்த்தி மீது முடிந்துபோன விவகாரத்தை வைத்து வழக்கு அனைவரையும் மிரட்டி விடலாம் என முந்தைய புகாரை தற்போது மீண்டும் எடுத்து வழக்கு பதிந்து திமுகவை மிரட்டி விடலாம் என நினைக்கிறார்கள்.

ஆட்சிக்கு வந்த பிறகு எந்த குற்றமும் நடக்காது என்று கூறியவர்கள் இன்று தினசரி குற்றங்கள் நடக்காத நாளில்லை தினமும் என்ன முடியாத அளவுக்கு குற்றங்கள் பாலியல் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கஞ்சா கிலோ கணக்கில்  கஞ்சா வழக்குகள் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர்கள் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள் அனைவர் மீதும் வழக்கு போட்டு மிரட்டி இந்த விஷயத்தை மூடி விடலாம் என்று நினைக்கிறார்கள். த.வெ.க அரசின் நோக்கம் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரை மிரட்டி வழக்குகளை வாபஸ் பெற வைக்க வேண்டும் அமைதியாக போக வைக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது என்றார்.

க.சண்முகவடிவேல்

சனி, 21 நவம்பர், 2026

மிரட்டி பாலியல் வன்கொடுமை புகார்: போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் பணிநீக்கம்

 source https://tamil.indianexpress.com/puducherry/karaikal-police-superintendent-dismissed-police-sexual-assault-12828494


Karaikal police superintendent dismissed police sexual assault

சென்னை ஐகோர்ட்டு கண்டனத்தைத் தொடர்ந்து நடவடிக்கை: போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் டிஸ்மிஸ்

காரைக்காலில் பணியாற்றியபோது பெண் போலீசை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியனை டிஸ்மிஸ் செய்து புதுவை தலைமைச் செயலாளர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில் மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டாகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன் (வயது 54). சுப்பிரமணியன் காரைக்காலில் பணியாற்றியபோது, அங்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் திருமணமான பெண் போலீஸ் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், ஆபாச வீடியோக்களைக் காட்டி நகை மற்றும் பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவத்தினால், பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்குப் பின், காரைக்காலில் பணியாற்றி வந்த போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், புதுவை மேற்குப் பகுதி போலீஸ் சூப்பிரண்டாக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இதுகுறித்து டி.ஜி.பி.-யிடம் பெண் போலீசின் தாயார் புகார் அளித்தார். இந்தப் பாலியல் புகார் குறித்து ஏற்கனவே துறைசார்ந்த உள் விசாரணை அறிக்கை நடத்தப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட பெண் போலீசின் தாயார் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட்டு கடும் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, கடந்த செப்டம்பர் 24-ந்தேதி போலீஸ் சூப்பிரண்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டார். சுப்பிரமணியன் மீது 7 பிரிவுகளின் கீழ் செப்டம்பர் 28-ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, தனக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கடந்த அக்டோபர் 1-ந்தேதி சென்னை ஐகோர்ட்டில் போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மனு தாக்கல் செய்தார். மனுதாரருக்கு ரூ.25 ஆயிரம் பிணைத்தொகை மற்றும் பல்வேறு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி, அவர் காரைக்கால் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இந்த நிலையில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் உத்தரவின்பேரில், புதுவை தலைமைச் செயலாளர் சரத் சவுகான், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க மத நல்லிணக்கத்தை நிலைநாட்டியது;

 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க மத நல்லிணக்கத்தை நிலைநாட்டியது;


mks

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ஒரு முறை தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தீபம் நாளான நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

மேலும், பொதுமக்கள் யாரும் தீபம் ஏற்றும் இடத்துக்கு செல்ல அனுமதி கிடையாது என்றும் தீபம் ஏற்ற யாரை அனுமதிக்கலாம் என்று மதுரை ஆட்சியர் முடிவு செய்வார் என்று வழக்கை விசாரித்த நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோயில் நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மட்டுமே தீபம் ஏற்ற வேண்டும். கண்டிப்பாக பொதுமக்களை அனுமதிக்கக் கூடாது. தேவைப்பட்டால் சி.ஐ.எஸ்.எஃப் படையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்துள்ளது. 

மேலும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் போராட்டம், பேரணி, முழக்கமிடுவதற்கு தடை விதிக்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை  முதலமைச்சர் விளக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

20 11 2026
source https://tamil.indianexpress.com/tamilnadu/dmk-upholds-religious-harmony-in-thiruparankundram-issue-what-will-vijay-do-next-mk-stalin-asks-12827423

திருப்பரங்குன்றம் வழக்கு; தர்கா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம்: வழக்கறிஞர் பேட்டி

 source https://tamil.indianexpress.com/tamilnadu/thiruparankundram-case-we-will-file-a-review-petition-on-behalf-of-the-dargah-says-lawyer-12827491


advocate

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் ஒரு முறை தீபம் ஏற்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், கார்த்திகை தீபம் நாளான நவம்பர் 24 அன்று மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதி அளித்துள்ளது.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க மத நல்லிணக்கத்தை நிலைநாட்டியது; விஜய் அடுத்து செய்யப்போவது என்ன? மு.க.ஸ்டாலின் கேள்வி

இந்நிலையில், தர்கா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்வோம் என்று வழக்கறிஞர் எம். பஷீர்தீன் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ”நான் தர்கா தரப்பில் வாதாடுகிறேன். நான் சிறப்பு விடுப்பு மனுவை தாக்கல் செய்தேன். உள்ளி உச்சி பிள்ளையார் கோவிலில் உள்ள இந்த வழக்கமான நடைமுறை, பொதுவாக ஒரு பழக்கமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது. இருப்பினும், இந்துத்துவா மனுதாரர் நில அளவைக்கல் தொடர்பான பிரச்சினையைத் தவறாக சித்தரித்துள்ளார்.

21 11 2026 

ஆனால், நில அளவைக் கல் தொடர்பான உத்தரவுகள் தர்காவிற்குச் சாதகமாகவே உள்ளன. 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வழக்கமான நடைமுறை ஆண்டுதோறும் நடைபெறவில்லை என்று குறிப்பிட்டு, நில அளவைக் கல் குறித்த தனது நிலைப்பாட்டை அரசு தரப்பு தெளிவாகக் கூறியுள்ளது. மனுதாரர் ராம ரவி குமார் மற்றும் பலரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவால், இன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு இந்துத்துவா தரப்பிற்கு சாதகமாக உள்ளது. மனுதாரர்கள் முழு மலையையும் உள்ளடக்கிய ஆவணங்களையும் புகைப்படங்களையும் சமர்ப்பித்துள்ளனர். அவை போலியானவை என்று நாங்கள் வாதிடுகிறோம். 

நாங்கள் அமர்வுக்கு முன்பாக மீண்டும் மீண்டும் ஆட்சேபனைகளை எழுப்பிய போதிலும், நீதிமன்றம் அந்த கட்டத்தில் எங்கள் ஆட்சேபனைகளை கேட்கவில்லை, மேலும் எங்கள் வாதங்கள் பிரதான வழக்கில் பரிசீலிக்கப்படும் என்று கூறியது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் இவ்விவகாரம் தொடர்பாக மக்கள் மத்தியில் பல விவாதம் எழுந்துள்ளது.  இன்றைய உத்தரவின்படி இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆணையர் ஆகியோர் முடிவு செய்துள்ளபடி, விளக்கேற்றுவதற்காக ஆறு பேர் கொண்ட குழு அமைக்கப்படவுள்ளது. என் சார்பாகவும் தர்கா தரப்பின் சார்பாகவும் நாங்கள் மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்ய உள்ளோம்” என்றார்.

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் 21 11 2026

 source https://tamil.indianexpress.com/business/gold-rate-today-chennai-november-21-silver-rate-today-12828366

gold rate November 25th

தொடர் சரிவில் தங்கம்! ஒரு சவரன் ரூ.91,720-க்கு விற்பனை – வெள்ளி விலை நிலவரம்

நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் உள்ளது. கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.15,360 வரை குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நேற்று (நவம்பர் 20) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,510-க்கும், சவரனுக்கு ரூ.3,760 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,080-க்கும் விற்கப்பட்டது. ஒரே நாளில் இவ்வளவு பெரிய சரிவு ஏற்பட்டது பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இன்று (நவம்பர் 21) 22 காரட் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.360 குறைந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.91,720-க்கும், ஒரு கிராம் ரூ.11,465-க்கும் விற்கப்படுகிறது.

இதேபோல், 18 காரட் தங்கம் விலையும் இன்று குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.90 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,330-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் ரூ.74,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மறுபுறம், வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.175-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,75,000-க்கும் விற்கப்படுகிறது. 

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை தங்கம் விலையில் இந்தத் தொடர் சரிவுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகின்றன. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பால் டாலர் மதிப்பு வலுவடைந்து வருவதால், முதலீட்டாளர்கள் தங்கத்தில் இருந்து முதலீடுகளைத் திருப்பி வருவதாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வரும் நாட்களிலும் தங்கம் விலையில் ஏற்ற-இறக்கம் தொடர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது

வெள்ளி, 20 நவம்பர், 2026

கால்வாயில் அனுமதியின்றி நீர் திறப்பு; சர்ச்சையில் சிக்கிய நிர்வாகிகள்

 

புலி ஒன்று சற்று தொலைவில் புல்வெளியில் நடந்து சென்றுகொண்டிருக்கிறது. அதை நோக்கி தமிழக அமைச்சர் ஆர். வன்னி அரசு ஓடிச் செல்கிறார். புலியைச் சுட்டிக்காட்டியபடி அவருடன் சிலரும் செல்கின்றனர். மற்றொரு வீடியோவில், வனத்துறை அதிகாரிகளுடன் அவர் வனப்பகுதிக்குள் நடந்து செல்கிறார். இன்னொரு காட்சியில், கருப்பு உடை மற்றும் கூலிங் கிளாஸ் அணிந்தபடி, வனத்துறைக்குச் சொந்தமான வாகனத்தின் முன்பகுதியில் அமர்ந்து கேமராவுக்கு போஸ் கொடுக்கிறார்.

இந்த வீடியோக்களில் தமிழ் சினிமாவுக்கே உரிய பல அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. அதிரடியான பின்னணி, ரஜினிகாந்தின் ஸ்டைலை நினைவூட்டும் நடை, உடன் வரும் துணைக் கதாபாத்திரங்கள் என ஒரு திரைப்படத்தின் நாயகனுக்கான அத்தனை அம்சங்களும் இருந்தன. ஆனால், இதில் நாயகனாக இருப்பவர் ஒரு அமைச்சர். களமாக இருப்பது முதுமலை தேசியப் பூங்காவின் வனவிலங்குகள் வாழும் பகுதி. அந்தப் புலியோ இந்தக் காட்சியில் பங்கேற்க கண்டிப்பாக விரும்பவில்லை. 


அமைச்சரின் வனப்பகுதி வீடியோக்கள் மட்டுமின்றி, இந்த வாரம் ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்துக்கு (தவெக) மற்றொரு சர்ச்சையும் ஏற்பட்டுள்ளது. தேனியில், கட்சியினர் சிலர் புதன்கிழமை பாசனக் கால்வாயில் அதிகாரிகளின் அனுமதியின்றி தண்ணீரைத் திறந்துவிட்டுத் தாங்களே வீடியோ எடுத்துப் பதிவிட்டனர். இதையடுத்து, அவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த வார இறுதியில் வன்னி அரசு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வனப்பகுதி வீடியோக்கள் பரவலாகப் பகிரப்பட்டன. இதற்கு அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் எதிர்வினை எழுந்தது. முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், தமிழக அமைச்சர் காட்டுயானையுடன் இருக்கும் காட்சிகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி வலியுறுத்தினார். இந்த விவகாரம் காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமூக நீதி, ஆதிதிராவிடர் நலன் மற்றும் மலைவாழ் மக்கள் நலத்துறை ஆகிய பொறுப்புகளை வகிக்கும் வன்னி அரசு, பழங்குடியின மாணவர்கள் தங்கிப் படிக்கும் பள்ளிகளை ஆய்வு செய்யவும், நலத்திட்ட உதவிகளை வழங்கவும் முதுமலை பகுதிக்குச் சென்றிருந்தார். அப்போது இந்த வீடியோக்களில் இடம்பெற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.

அனுமதியின்றி கால்வாயில் நீர் திறப்பு

தேனி மாவட்டத்தில், சோத்துப்பாறை அணையுடன் இணைக்கப்பட்டுள்ள புதிய கால்வாயின் மதகுகளை, நீர்வளத் துறையின் அனுமதியின்றி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திறந்துவிட்டனர். கட்சியின் தேனி வடகிழக்கு மாவட்ட இணைச் செயலாளர் ஷேக் அலி தலைமையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

அப்போது, தண்ணீர் வெளியேறுவதை மலர் தூவி வரவேற்றதுடன், அதையும் வீடியோவாகப் பதிவு செய்தனர். பெரியகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சபரி ஐங்கரனின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறி, அந்த வீடியோக்களைப் பின்னர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

ஆனால், அணையின் பிரதான மதகுகள் திறக்கப்படவில்லை என்றும், அனுமதியின்றி கால்வாயில் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருப்பது கீழ்ப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இதுதொடர்பாக, உதவிச் செயற்பொறியாளர் மனோஜ் தென்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்ததுடன், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். திமுகவைச் சேர்ந்த கனிமொழியும், டிவிகே நிர்வாகிகள் விதிகளைப் பொருட்படுத்தாமல் செயல்படுவதாகக் குற்றம்சாட்டினார். ஆட்சி நிர்வாகத்தைத் திரைப்படப் படப்பிடிப்பாகக் கருதக் கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்தார்.

வன உயிரினப் பாதுகாப்பில் அக்கறை காட்டாத செயலா?

வன்னி அரசு இடம்பெற்ற வீடியோக்கள் எடுக்கப்பட்ட சூழல் குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. அச்சகரை பகுதியில் உள்ள தனியார் ரிசார்ட் வளாகத்தில் புலி தென்பட்டதாகவும், அமைச்சரின் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவருடன் சென்றதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புலியைப் பார்த்தபோது அமைச்சர் சஃபாரி வாகனத்திலிருந்து இறங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டையும் ஓர் அதிகாரி மறுத்துள்ளார்.

ஆனால், வன உயிரினப் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள் இந்த விளக்கங்களை ஏற்கவில்லை. வன உயிரினப் பாதுகாப்புச் சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக டிவிகே அதிகாரபூர்வமாக எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. அதேவேளையில், வன்னி அரசு தனது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளார். இயற்கையின் மீது தனக்கு மிகுந்த அன்பு இருப்பதாகவும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மலையேற்ற அனுபவம் உள்ளதாகவும் அவர் பிராந்திய ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் அங்கு சென்றிருந்தபோது திடீரென ஒரு புலியைப் பார்த்தோம். மீண்டும் அதைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினோம். இல்லையென்றால், உண்மையிலேயே யாராவது புலியைத் துரத்திச் செல்ல முடியுமா?" என்று கேள்வி எழுப்பினார். இந்தச் சம்பவத்தைப் பெரும் சர்ச்சையாக்க சிலர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. தமிழகத்தில் அடிக்கடி போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்படுவதைச் சுட்டிக்காட்டி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், வீடியோ கேம் பாணியில் விஜயை விமர்சித்தார்.

'கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ: வைஸ் சிட்டி' (Grand Theft Auto: Vice City) என்ற வீடியோ கேமின் பாணியில் வடிவமைக்கப்பட்ட 'டிவிகே வைஸ் சிட்டி' (TVK Vice City) என்ற நையாண்டிப் படத்தை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். அதில், விஜயை ஒத்த உருவம் மற்றும் டிவிகே நிர்வாகி ஒருவரின் உருவப்படம் ஆகியவற்றுடன், தொலைக்காட்சிச் செய்திகளின் படத்தொகுப்புகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், போதைப்பொருள்கள், குற்றம் நடந்த இடத்தைக் குறிக்கும் காட்சிகள், கம்பிகளுக்குப் பின்னால் இருக்கும் ஒருவரின் நிழல் உருவம் ஆகியவையும் அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்தன.

பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, அமைச்சரின் வீடியோக்கள் வனப்பகுதியில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளுக்கு முரணாக இருப்பதாகக் கூறினார். வனவிலங்குகளை நெருங்கிச் செல்லக் கூடாது, வாகனங்களை விட்டு இறங்கக் கூடாது, பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் நடந்துசெல்லக் கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், அமைச்சர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொருந்தும் அதே விதிமுறைகள்தான் பொருந்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தினார். வனத்துறை அதிகாரிகளுடன், தனது துறை சார்ந்த பணிகளுக்குத் தொடர்பில்லாத ஒரு பகுதியில் அமைச்சர் இருந்தது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

திமுக செய்தித் தொடர்பாளர் ஏ. சரவணனும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரினார். வீடியோக்கள் எடுப்பதற்காக அரசு அதிகாரிகளையும் வாகனங்களையும் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தையும் அவர் விமர்சித்தார்.

ரீல்ஸ் அரசியலில் டிவிகேவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இந்தச் சம்பவம் டிவிகேவின் குறுகிய கால அரசியல் வரலாற்றின் பின்னணியிலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆறு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் குறுகிய வீடியோக்கள், ரசிகர்கள் உருவாக்கிய எடிட்கள், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் வாட்ஸ்அப் பகிர்வுகள் முக்கியப் பங்கு வகித்தன. அந்தத் தேர்தலில் விஜய் முதலமைச்சரானார்.

விஜயின் ஆதரவாளர்கள் அவரது பிரச்சாரக் கூட்டங்களில் இடம்பெற்ற ஒவ்வொரு சிறிய தருணத்தையும் ஏராளமான ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் வீடியோக்களாக மாற்றினர். அவர் கையசைப்பது, புன்னகைப்பது, உரையில் ஒரு வரி பேசுவது, 'விஜய் மாமாவுக்கு' ஆதரவாகப் பெற்றோரிடம் பேசும் குழந்தை அல்லது மொபைல் போனில் நடிகர் விஜயைப் படம் பிடிக்கும் கூட்டத்தினர் எனப் பல்வேறு காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

விரிவான சமூக வலைதளக் கட்டமைப்பு, அனுபவம் வாய்ந்த தேர்தல் பிரசார மேலாளர்கள் மற்றும் கணிசமான நிதி ஆதாரங்களைக் கொண்டிருந்தபோதிலும், விஜய் ஆதரவாளர்களின் இயல்பான சமூக வலைதளப் பரவலுக்கு ஈடுகொடுக்க திமுக சிரமப்பட்டது.

இது வெறுமனே உள்ளடக்கங்களின் எண்ணிக்கை தொடர்பான போட்டியாக மட்டும் இருக்கவில்லை. திமுகவின் பெரும்பாலான டிஜிட்டல் தகவல் பரிமாற்றங்கள், வழக்கமான அரசியல் கட்சிகளின் பாணியிலேயே தொடர்ந்தன. பேச்சுகள், அறிக்கைகள், குற்றச்சாட்டுகள் மற்றும் அவற்றுக்கான பதில்கள் என அவை அமைந்திருந்தன.

ஆனால், விஜய் ஆதரவாளர்கள் உருவாக்கிய வீடியோக்கள் பெரும்பாலும் குறுகியதாகவும், தனிப்பட்ட தருணங்களை முன்னிறுத்துவதாகவும் இருந்தன. அவை இடம்பெற்ற அசல் அரசியல் நிகழ்விலிருந்து தனியாகப் பகிரப்பட்டு, முழுமையான பிரசார உரையைக் கேட்காதவர்களிடமும் எளிதில் சென்றடைந்தன.

ஒரு ரீல்ஸ் வீடியோ அரசியல்வாதியை ஒரு காட்சியின் நாயகனாக மாற்றலாம். அதேநேரத்தில், அந்தக் காட்சியையே அவருக்கு எதிரான ஆதாரமாகவும் மாற்றிவிடலாம். வன்னி அரசின் வனப்பகுதி சாகசமும், டிவிகே நிர்வாகிகள் பாசனக் கால்வாயில் தண்ணீர் திறந்துவிட்ட சம்பவமும் இதற்கு உதாரணங்களாக உள்ளன.

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஒரு செயலைச் செய்து காட்டுவதற்கும், அதைச் செய்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருப்பதற்கும் இடையே வேறுபாடு உள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இவை இரண்டையுமே பதிவு செய்வதற்கு ஒரு கேமரா போதும். 



source https://tamil.indianexpress.com/tamilnadu/tiger-encounter-reels-unauthorized-canal-water-release-put-tamil-nadus-tvk-government-under-fire-12825272

வியாழன், 19 நவம்பர், 2026

திசை மாறிய 'அக்வான்' புயல்: வட ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளுக்கு எச்சரிக்கை

 source https://tamil.indianexpress.com/india/cyclone-akvan-shifts-track-north-andhra-south-odisha-on-alert-14-districts-red-warning-12821421


cyclone akvan NDRF Cuttack X

'அக்வான்' புயல் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கையைத் தொடர்ந்து, 3-வது பட்டாலியன் தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) 5 குழுக்கள் ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. Photograph: (Photo: X/@03NDRF)

எழுதியவர்: சுஜித் பிசோயி

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் தனது திசையை மாற்றிக்கொண்டு, வடக்கு ஆந்திரப் பிரதேசம், ஏனாம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைகளை நோக்கி வடக்கு - வடமேற்கு திசையில் தொடர்ந்து நகர்ந்து வருவதால், ஒடிசா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, 'அக்வான்' (Akvan) புயல் நவம்பர் 20-ம் தேதி நண்பகலுக்குள் மசூலிப்பட்டினம் மற்றும் பூரி இடையே தீவிர புயலாகக் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. அப்போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.

“ஆந்திரப் பிரதேசத்தின் கலிங்கப்பட்டினத்திற்கும் ஒடிசாவின் கோபால்பூருக்கும் இடையே எங்கு வேண்டுமானாலும் புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. பூரி வரை பலத்த காற்றின் தாக்கம் உணரப்படுவதுடன், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் எச்சரிக்கையைப் பூரி வரை நீட்டித்துள்ளோம். சில வானிலை மாதிரிகள் புயல் மீண்டும் திசை மாற வாய்ப்புள்ளதாகவும் கணிக்கின்றன” என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைமை இயக்குநர் மிருத்யுஞ்ஜய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

புயல் மற்றும் அதனுடன் இணைந்த கனமழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கஜபதி, கஞ்சம், பூரி, குர்தா, ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக், பாலசோர், நயாகர், கட்டாக், ஜாஜ்பூர், தேன்கனல், கியோஞ்சர் மற்றும் மயூர்பஞ்ச் ஆகிய 14 கடலோர மற்றும் அதையொட்டிய மாவட்டங்களுக்கு ஒடிசா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிதீவிர கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், இவற்றில் பெரும்பாலான மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

6 தெற்கு மற்றும் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரை கட்டாய விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப விடுமுறை அறிவிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. புயல் அச்சுறுத்தலை முன்னிட்டு ஒடிசாவில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் விடுமுறை நவம்பர் 22-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்படக்கூடிய மக்களை அடையாளம் கண்டு, முன்னுரிமை அடிப்படையில் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்ல மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. பாதிக்கப்படக்கூடிய கடலோர மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் உள்ள குடிசை வீடுகள், கடற்கரையோரங்கள் அல்லது தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் புயல் மற்றும் வெள்ள நிவாரண முகாம்களுக்கு வெளியேற்றப்பட உள்ளனர்.

கடந்த மாதம் 'அர்னாப்' புயலைத் தொடர்ந்து பெய்த பேய்மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 10 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, தற்போது 'அக்வான்' புயலின் தாக்கத்தால் மற்றொரு சுற்று கனமழை பெய்யவுள்ள நிலையில், நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக வெளியேற்றுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒடிசா அரசு உத்தரவிட்டுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்), ஒடிசா பேரிடர் விரைவு அதிரடிப் படை (ஓ.டி.ஆர்.ஏ.எஃப்) மற்றும் தீயணைப்புத் துறையைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட குழுக்கள் தேவையான உபகரணங்களுடன் பல்வேறு மாவட்டங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

புயலின் திசை மாற்றத்தைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் மற்றும் சிறப்பு நிவாரண ஆணையர்கள் மாவட்ட நிர்வாகங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்தார்.

“நிலவரம் குறித்து எமது அதிகாரிகள் மத்திய அரசுடனும் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். மத்திய அரசும் எங்களுக்கு உறுதியளித்துள்ளது. பாதுகாப்பற்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று பூஜாரி கூறினார்.

முன்னெச்சரிக்கை, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, ஏற்கனவே மாவட்ட ஆட்சியர்களாகப் பணியாற்றிய 4 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். விரைவான மீட்புப் பணிகளை உறுதி செய்வதற்காகப் பல்வேறு துறைகளும் மூத்த அதிகாரிகள் மற்றும் களப்பணியாளர்களைப் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களுக்கு அனுப்பியுள்ளன.

சில மாவட்டங்களில் கனமழையால் வெள்ளம் அல்லது திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்பதால், சாத்தியமான வெள்ள நிலைமைகளை எதிர்கொள்ளத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறும், அணுக முடியாத பகுதிகளுக்கு நிவாரண மற்றும் மீட்புக் குழுக்களை அழைத்துச் செல்ல விசைப்படகுகளைத் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மாவட்டங்களில் முன்கூட்டியே நிறுத்தப்பட்டுள்ள சிறப்பு நிவாரண அமைப்பின் விசைப்படகுகளைச் சரிபார்த்து, பயன்பாட்டிற்குத் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக சாலைப் போக்குவரத்தை உடனடியாகச் சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அரசு, புயல் ஓய்ந்த பிறகு வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றவும், சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்கவும் கூடுதல் குழுக்களை மாவட்டங்களுக்கு அனுப்பி வருகிறது.

19 11 2026 

நீட் வினாத்தாள் கசிவு:

 source https://tamil.indianexpress.com/india/neet-paper-leak-trial-to-begin-on-nov-25-12822128


NEET-Paper-Leak_20260729205359_20261118065723_20261119000432

2026 நீட் (NEET UG) வினாத்தாள் கசிவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 14 பேர் மீதும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு டெல்லி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை (நவம்பர் 18) உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 25-ஆம் தேதி முதல் தினசரி அடிப்படையில் தொடங்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பதிப்புரிமைச் சட்டத்தின் (Copyright Act) பிரிவு 63 மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), ஊழல் தடுப்புச் சட்டம், பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம், 2024 ஆகியவற்றின் கீழ் சிபிஐ (CBI) சுமத்தியுள்ள இதர பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய சிறப்பு நீதிபதி அஜய் குப்தா உத்தரவிட்டார்.

இந்த வழ்க்கில் குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும், ஏதோ ஒரு வகையில் இந்த ரகசிய ஆவணங்களை மிகப் பெரிய அளவில் பகிர்ந்துள்ளனர் அல்லது விநியோகித்துள்ளனர். திட்டமிடப்பட்ட தேர்வு தேதிக்கு வெகு முன்னதாகவே நாடு முழுவதும் இந்த ரகசியத் தகவல்கள் பரவுவதற்கு இதுவே காரணமாக அமைந்தது. இதன் விளைவாக 2026 நீட் (UG) தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனால் அரசு கருவூலத்திற்குப் பல கோடி ரூபாய் தேவையற்ற இழப்பு ஏற்பட்டது மட்டுமல்லாமல், லட்சக்கணக்கான நீட் தேர்வர்களும் நிதி ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்,” என்று சிறப்பு நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மொழிபெயர்ப்பு, மறுமொழிபெயர்ப்பு மற்றும் பிழைதிருத்தம் ஆகிய பணிகளுக்காக தேசியத் தேர்வு முகமையால் (NTA) குற்றம் சாட்டப்பட்ட இவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வினாத்தாள் தொகுப்புகள், தேசியத் தேர்வு முகமையின் அறிவுசார் சொத்தாகும் (பதிப்புரிமை பெற்றது),” என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட யஷ் யாதவ், மங்கிலால் பிவால், தினேஷ் பிவால், விகாஸ் பிவால், சுபம் கைர்னார், தனஞ்சய் லோகண்டே, பிரகலாத் குல்கர்னி, தேஜஸ் ஹர்ஷத் குமார், டாக்டர் மனோஜ் ஷிருரே, சிவ்ராஜ் ரகுநாத் மோட்டேகாவ்ன்கர், மனிஷா வாக்மரே, மனிஷா மந்தாரே, மனிஷா சஞ்சய் ஹவல்தார் மற்றும் சேஷ்ராவ் பஜ்ரங் சூர்யவன்ஷி ஆகியோரே குற்றம் சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் மூவர் தேசியத் தேர்வு முகமை பாட நிபுணர்கள் ஆவர்; மற்றவர்கள் தேர்வர்கள் மற்றும் கசிந்த வினாத்தாளைப் பரப்புவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இடைத்தரகர்கள் ஆவர்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 21-ஆம் தேதிக்குப் பட்டியலிட்ட நீதிபதி குப்தா, முறைப்படி குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்காகக் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். இந்தக் கட்டத்தில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீதான குற்றத்தை ஒப்புக்கொள்ளவோ அல்லது மறுக்கவோ வாய்ப்பு அளிக்கப்படும்; அதன்பிறகு விசாரணை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட இவர்கள் அனைவரும், சக குற்றவாளிகளுடன் சதித்திட்டம் தீட்டி, இதற்கென ஒரு கூட்டமைப்பை (syndicate) திட்டமிட்ட முறையில் நடத்தி, ரகசிய வினாக்களைக் கசியவிட்டுப் பரப்பியுள்ளனர் (வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களின் பெரும்பாலான கேள்விகள் தேர்வில் வந்ததைப் போலவே இருந்ததால், இதைக் கசிந்த வினாத்தாள் என்றே கருத முடியும்),” என்று சிறப்பு நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

மே 3-ஆம் தேதி சுமார் 22 லட்சம் தேர்வர்களால் எழுதப்பட்ட நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்குப் பிறகு தேசியத் தேர்வு முகமையால் ரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜூன் 21-ஆம் தேதி தேசியத் தேர்வு முகமை மறுதேர்வை நடத்தியது குறிப்பிடத்தக்கது. 

புதன், 18 நவம்பர், 2026

முஸ்லிம்கள் மந்திரவாதிகளா?

Are Muslims magicians? Shouldn't they go home? R.Abdul Karim M.I.Sc State President, TNTJ Islam is a sweet religion North Chennai District Egmore - 15.09.2024 • முஸ்லிம்கள் மந்திரவாதிகளா? அவர்கள் வீட்டிற...

இஸ்லாத்தில் சாதிகள் இல்லையா? அப்படியானால்

Are there no castes in Islam? Then why are there sects like Syed, Rawathar, Lebhai? R.Abdul Karim M.I.Sc State President, TNTJ Islam is a sweet religion North Chennai District Egmore - 15.09.2024 • இஸ்லாத்தில் சாதிகள் இல்லையா? அப்படியானால் ...

காஃபிர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லமாட

காஃபிர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லமாட்டீர்களா? காஃபிர் என்றால் என்ன அர்த்தம்? ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத் தலைவர்,TNTJ இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் வட சென்னை மாவட்டம் எக்மோர் - 15.09.2024 • காஃபிர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் சொல்லமாட...

இஸ்லாத்தை விட சிறந்த நியாய தர்மத்தை கடைபிட

Even if he follows a better religion than Islam, will he also go to hell? R.Abdul Karim M.I.Sc State President, TNTJ Islam is a pleasant religion North Chennai District Egmore - 15.09.2024 • இஸ்லாத்தை விட சிறந்த நியாய தர்மத்தை கடைபிட...

கொல்லப்படுவதற்கு முன் குபைப் (ரலி)

What was the last wish of Khubaib (RA) before being killed? Islamic History Timelines - 16-11-2026 History of the Companions of the Prophet Series-18 M.A. Abdurrahman M.I.Sc Speaker, TNTJ Usama M.I.Sc Speaker, TNTJ • கொல்லப்படுவதற்கு முன் குபைப் (ரலி) கேட்ட இ...

சமரசமில்லா சத்தியக்கொள்கை

Uncompromising Oath Policy A.Sabir Ali M.I.Sc State Secretary, TNTJ Activists and Heroes Meeting - 10.08.2025 Tengahasi District • சமரசமில்லா சத்தியக்கொள்கை

நபியின் குடும்பத்தாருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் ஏன் எச்சரித்தான்?

நபியின் குடும்பத்தாருக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ் ஏன் எச்சரித்தான்? What happened to the Prophet's family? Why did Allah warn? A. Muhammad Yusuf M.I.Sc State Secretary, TNTJ Chapter: At-Tahreem Verses: 1-5 Part - 01 Quran Commentary Series – 29 📍 TNTJ Headquarters 📅 13.11.2026

பிரபலங்களின் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)

The Prophet Muhammad (PBUH) in the eyes of celebrities Special Interview:- 11.11.2026 S. Peter Alphonse Senior Political Leader of Indian National Congress I.Ansari (State Secretary, TNTJ) • பிரபலங்களின் பார்வையில் நபிகள் நாயகம் (ஸல்)

அசத்தியவாதிகளின் அலங்கார வார்த்தைகள்

அசத்தியவாதிகளின் அலங்கார வார்த்தைகள் ஆர்.அப்துல் கரீம் M.I.Sc மாநிலத்தலைவர்,TNTJ மாவட்ட தர்பியா - 14.12.2025 செங்கை கிழக்கு மாவட்டம் -

உத்தம தூதரின் உன்னத வாழ்க்கை!

The Noble Life of a Noble Messenger! K.A.Siyarat Ali (Audit Committee Member, TNTJ) Friday Sermon - 06.11.2026 Melapalayam Aqsa • உத்தம தூதரின் உன்னத வாழ்க்கை!

மறக்கப்படும் தந்தையின் தியாகம் !

மறக்கப்படும் தந்தையின் தியாகம் ! N. தவ்ஹீத் MISc பேச்சாளர் TNTJ TNTJ,தலைமையக ஜூமுஆ - 13.11.2026

டிப்ளமா முடித்தவர்களுக்கு மின்வாரியத்தில் பயிற்சி வாய்ப்பு!

டிப்ளமா முடித்தவர்களுக்கு மின்வாரியத்தில் பயிற்சி வாய்ப்பு! கல்வி சிந்தனை - 10 -11 -2026 திருவல்லிக்கேணி ஷாகுல் M.Com பேச்சாளர் TNTJ

இனி போலீஸ் நிலையம் போகாமல் புகார்; ஆன்லைனில் 'இ.சி.எஸ்.ஆர்' ரசீது பெறும் புதிய வசதி

 

இனி போலீஸ் நிலையம் போகாமல் புகார்; ஆன்லைனில் 'இ.சி.எஸ்.ஆர்' ரசீது பெறும் புதிய வசதி 18 11 2026 

பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (இ.சி.எஸ்.ஆர்) ரசீதைப் பெறும் புதிய இணையவழிச் சேவை நாளை (நவம்பர் 18, 2026) அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.   

பொதுமக்களின் வசதிக்காகத் தமிழக காவல்துறை பல்வேறு டிஜிட்டல் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமலேயே இணையதளம் வாயிலாகத் தங்களது புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR - Electronic Community Service Register) ரசீதைப் பெறும் புதிய இணையவழிச் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.


இந்தப் புதிய இணையவழிச் சேவையைத் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ்குமார் அகர்வால், ஐ.பி.எஸ்., நாளை (நவம்பர் 18, 2026) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்க உள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தமிழக காவல்துறை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.   

வழக்கமாகப் பொதுமக்கள் ஏதேனும் புகார் அளித்தால், காவல் நிலையத்திற்கு நேரில் சென்று சி.எஸ்.ஆர் (CSR) எனப்படும் சமூக சேவைப் பதிவேடு ரசீதைப் பெற வேண்டிய சூழல் இருந்து வந்தது. தற்போது அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த 'e-CSR' திட்டத்தின் மூலம், பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தபடியே ஆன்லைனில் புகாரைப் பதிவு செய்து, உடனடியாக மின்னணு ரசீதைப் பெற்றுக்கொள்ள முடியும்.   

இதன் மூலம் பொதுமக்களின் அலைச்சல் மற்றும் நேரம் மிச்சமாவதுடன், புகார்கள் மீதான நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மையுடனும் விரைவாகவும் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையின் இந்தப் புதிய டிஜிட்டல் சேவை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-police-to-launch-online-e-csr-receipt-service-on-november-18-12818283

அரசியல் புயலைக் கிளப்பிய பக்தி கோஷம்

 source https://tamil.indianexpress.com/tamilnadu/tiruchendur-murugan-festival-vijay-arogara-chants-unite-dmk-bjp-minister-ramesh-reaction-12818400


16 11 2026

அந்த முழக்கம் முருகப்பெருமானுக்கு உரியது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை திருச்செந்தூர் கடற்கரைக் கோயிலில் பின்னணிப் பாடகர் வேல்முருகன் அதனைத் தமிழக முதலமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருக்கும் நீட்டித்தார். அசுரனை வதம் செய்ததைக் கொண்டாடும் ஒரு ஆன்மீகத் திருவிழா, அரசியல்வாதிகளை முன்னிலைப்படுத்தும் சர்ச்சையாக உருவெடுத்தது.

தலைமுறை தலைமுறையாக பக்தர்களுக்குப் பரிச்சயமான "அரோகரா" என்ற பக்தி முழக்கம், சூரசம்ஹார நிகழ்வின் நேரலை வர்ணனையின் போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் ஆகியோரைப் புகழும் கோஷமாக மாறியது.

செவ்வாய்க்கிழமைக்குள், தி.மு.க-வும் பா.ஜ.க-வும் ஒரு விஷயத்தில் உடன்பட்டன: ஆளும் த.வெ.க எல்லை மீறிவிட்டது என்பதே அது.

இந்த நிகழ்வு நடந்த சூழல் மிகவும் முக்கியமானது. கந்த சஷ்டி விழாவின் உச்சக்கட்ட நிகழ்வான சூரசம்ஹாரம், முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்ததை நினைவுகூரும் நிகழ்வாகும். விரதமிருந்து அதனைக் காணத் திரளும் பக்தர்களுக்கு அந்த முழக்கம் வழிபாட்டின் ஒரு அங்கம். மைக்கை யார் பிடித்திருக்கிறார்கள் என்பதற்கும் அப்பாற்பட்ட ஆழமான அர்த்தத்தைக் கொண்ட, அனைவராலும் கூட்டாக எழுப்பப்படும் ஒரு பரிச்சயமான ஒலி அது.

முன்னாள் தி.மு.க அமைச்சர் பி. கீதா ஜீவன், ஒரு மனிதரைக் கடவுளின் நிலைக்கு உயர்த்துவதைக் கண்டித்தார். இந்து சமய அறநிலையத்துறையின் முன்னாள் அமைச்சரும் தி.மு.க தலைவருமான பி.கே. சேகர்பாபு, ஒரு ஆன்மீக நிகழ்வை அரசு அரசியல் மேடையாக மாற்றிவிட்டதாகக் குற்றம் சாட்டினார். பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பொது மன்னிப்பு கோர வேண்டு என்று வலியுறுத்திய நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் கோயிலுக்கு வெளியேயும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

vijay meal serves to children
சென்னை பெரம்பூரில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை (நவ. 13, 2026) நடைபெற்ற குழந்தைகள் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற தமிழக முதலமைச்சர் விஜய் Photograph: (பிடிஐ படம்)

‘சாதாரண மன்னிப்பு போதாது’

பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனருமான கே. அண்ணாமலை, சாதாரண மன்னிப்பு இதற்குப் போதாது என்று கூறியுள்ளார். அதிகாரப்பூர்வ நேரலை வர்ணனையை ஒளிபரப்பிய ஊடகங்களுக்கு இதில் தலையிட வாய்ப்பு குறைவு என்று வாதிட்ட அவர், இந்தச் சம்பவத்திற்கு விஜய் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், ரமேஷ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இது மீண்டும் நடந்தால் முதலமைச்சரையே பொறுப்பேற்க வைப்பேன் என்றும் அவர் கூறினார்.

இதற்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்த அமைச்சர் ரமேஷ், விஜய்யோ அல்லது அரசாங்கமோ இத்தகைய புகழுரைகளை ஊக்குவிப்பதில்லை என்று தெரிவித்தார். அதிகாரிகள் இது குறித்து விளக்கம் கேட்டதாகவும், சம்பந்தப்பட்ட கலைஞர்கள் வருத்தம் தெரிவித்து எதிர்காலத்தில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளதாகவும் ரமேஷ் கூறினார்.

இந்தச் சர்ச்சை, தமிழ் அடையாளம் மற்றும் இந்து ஆன்மீகம் ஆகிய இரண்டோடும் நெருங்கிய தொடர்புடைய ஒரு கடவுளைச் சுற்றியுள்ள பரந்த அரசியல் போட்டியைப் பிரதிபலிக்கிறது. தமிழ் நிலப்பரப்புடன் முருகனுக்கு உள்ள தொடர்பு சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது: பண்டைய தமிழ் இலக்கண மற்றும் கவிதை நூலான தொல்காப்பியம், முருகப்பெருமானாக அடையாளப்படுத்தப்படும் 'சேயோனை' மலை சார்ந்த குறிஞ்சி நிலத்துடன் இணைக்கிறது.

அவரது அறுபடை வீடுகளும் அந்தப் பிணைப்பிற்கு ஒரு புவியியல் அடையாளத்தைத் தருகின்றன. பாதயாத்திரை மற்றும் காவடி எடுத்தல் போன்ற சடங்குகள், தூரம், உடல் உழைப்பு மற்றும் நேர்த்திக்கடன்கள் வழியாக உடலால் உணரப்படும் ஒரு பக்தி அனுபவமாக இதனை மாற்றுகின்றன. பக்தர்கள் ஏற்கனவே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஆன்மீக உறவுக்குள்தான் அரசியல் கோரிக்கைகள் நுழைகின்றன.

முருகப்பெருமானின் அரசியல் ஈர்ப்பு

இந்தக் கலவையே அவரது அரசியல் ஈர்ப்பை விளக்குகிறது. பாரதிய ஜனதா கட்சியைப் (பா.ஜ.க) பொறுத்தவரை, இந்துக்களை ஒருங்கிணைப்பதற்கான தனித்துவமான தமிழ் அடையாளத்தை முருகப்பெருமான் வழங்குகிறார். திமுகவைப் பொறுத்தவரை, அவரைக் கொண்டாடுவது என்பது தனது பகுத்தறிவுப் பாரம்பரியத்தோடு இணைந்து, தமிழ் கலாச்சாரத்தை உறுதிப்படுத்தவும், மத நம்பிக்கையாளர்களுக்கு மதிப்பளிக்கவும் உதவுகிறது. 2024-ம் ஆண்டு நடைபெற்ற பழனி மாநாடு குறித்த செய்திகளில், திமுகவை இந்து மதத்திற்கு எதிரான கட்சியாக பா.ஜ.க சித்தரிப்பதற்குப் பதிலடியாகவே இந்த நிகழ்வைக் கட்சி நிர்வாகிகள் பார்த்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கடந்த பத்தாண்டுகளில் இந்த ஒரே ஒரு இந்து கடவுளை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட பல நிகழ்வுகளுக்குத் தமிழகம் சாட்சியாக இருந்துள்ளது. 2020 நவம்பரில், அப்போதைய பா.ஜ.க மாநிலத் தலைவரான எல். முருகன், பெருந்தொற்று காரணமாக அ.தி.மு.க அரசு அனுமதி மறுத்ததையும் மீறி 'வேல் யாத்திரை' நடத்த முயன்றார். அப்போது அவரையும் மற்ற தலைவர்களையும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

2024 ஆகஸ்டில், தி.மு.க அரசு பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்தியது; அதனை ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார். அவர் நேரில் பங்கேற்காததை பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.

நிபுணர் குழு பரிந்துரை செய்யாத 2000 புத்தகங்களை பட்டியலில் சேர்த்தது யார்? ரூ 1.74 கோடி ஊழலின் முழுப் பின்னணி

 

நிபுணர் குழு பரிந்துரை செய்யாத 2000 புத்தகங்களை பட்டியலில் சேர்த்தது யார்? ரூ 1.74 கோடி ஊழலின் முழுப் பின்னணி 18 11 2026 

tamil nadu library

இந்த முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்) சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அதிகாரிகள் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. Photograph: (Wikimedia Commons)

சங்கத் தமிழ் செய்யுள் தொகுப்பு ஒன்று ஒரு தத்துவஞானியாக மாற்றப்பட்டது. 'டீப்ஃபேக்ஸ்' (Deepfakes) பற்றிய ஒரு புத்தகத்திற்கு இரண்டு வெவ்வேறு எழுத்தாளர்களின் பெயர்கள் சூட்டப்பட்டன; ஆனால் இருவருமே அதன் அசல் எழுத்தாளர்கள் அல்ல.

இந்த இலக்கிய உருமாற்றங்களுக்குப் பின்னால், இன்னும் தீவிரமான நிர்வாக ரீதியான முறைகேடு நடந்திருப்பதாகத் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகம் (டி.வி.ஏ.சி) குற்றம் சாட்டுகிறது: வல்லுநர்களால் பரிந்துரைக்கப்படாத புத்தகங்கள் பொது நூலகங்களுக்கான அரசு கொள்முதல் பட்டியலில் நுழைந்து, அவற்றுக்குப் பணமும் வழங்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் உள்ள பெரியார் அறிவுலகம் நூலகத்தில், புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் பல முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டினார். மற்றொருபுறம், பொருளாதார நிபுணர் ஜீன் டிரேஸ், தான் எழுதாத ஒரு புத்தகம் தனது பெயரில் வெளியிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார்.

நூலகக் கொள்முதல் ஊழல் என்று கூறப்படும் இந்த விவகாரத்தில், இப்போது சந்தேகத்திற்குரிய பதிப்பாளர்கள், கேள்விக்குறியான ஐ.எஸ்.பி.என் (ISBN - புத்தகங்களை அடையாளம் காணும் தனித்துவமான எண்கள்) குறியீடுகள், மிகைப்படுத்தப்பட்ட விலைகள், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) பயன்பாடு குறித்த கேள்விகள் மற்றும் ஐந்து அதிகாரிகளின் இடைநீக்கம் ஆகியவை அடங்கியுள்ளன. ஏ.ஐ மோசமான புத்தகங்களை உருவாக்கியதா என்பதை விட, அரசு நிதியில் இயங்கும் ஒரு தேர்வு முறை முதலில் அவற்றுக்கு எப்படி ஒப்புதல் அளித்தது என்பதே இதன் மையக் கேள்வியாக உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) இது தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்), பதிப்பாளர் ஆர். மோகன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அடையாளம் தெரியாத அரசு ஊழியர்கள் மற்றும் பிறர் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொது நூலகங்களுக்குப் புத்தகங்கள் விநியோகித்ததற்காக இரண்டு பதிப்பகங்களுக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டிருப்பதை இது பதிவு செய்துள்ளது.

சர்ச்சை தொடங்கியது எப்படி?

நவம்பர் 6-ம் தேதி எழுதிய ஒரு கட்டுரையில், கோயம்புத்தூரில் சுமார் ரூ.300 கோடி செலவில் புதிதாகத் திறக்கப்பட்ட நூலகத்தில், 'அகல்விளக்கு பதிப்பகம்' என்ற பெயரில் கிட்டத்தட்ட 1,800 புத்தகங்களும், 'பீனிக்ஸ் பதிப்பகம்' என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களும் இடம்பெற்றிருந்ததைப் பெருமாள் முருகன் அடையாளம் காட்டினார். பதிப்புலகில் 'அகல்விளக்கு' என்பது அறியப்படாத பெயர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் புத்தகங்களில் பல பிழைகள் இருந்தன. 300 பக்கங்கள் கொண்ட, ரூ.1,445 விலை நிர்ணயிக்கப்பட்ட சூர்யா பாலுவின் ‘நாலடியார்: எ கைடு டு லைஃப்’ (Naladiyar: A Guide to Life) என்ற புத்தகம், நாலடியார் என்ற செய்யுள் தொகுப்பை ஒரு கவிஞர் மற்றும் தத்துவஞானி என்று விவரித்துள்ளது.

நூலகங்களுக்கான புத்தகப் பரிந்துரைக் குழுவில் பெருமாள் முருகனும் அங்கம் வகித்தார். அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கும், அதன்பிறகு தேர்வுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட புத்தகங்களுக்கும் இடையிலான முக்கிய வேறுபாட்டை எஃப்.ஐ.ஆர் இப்போது தெளிவுபடுத்துகிறது. நாலடியார் குறித்த பிழைகள் மற்றும் தேவ் நிலனின் ‘மதுரைக்காஞ்சி: எ லிட்டரரி ஜர்னி’ (Madurai Kanchi: A Literary Journey) என்ற புத்தகம் அந்தச் சங்க இலக்கியத்தின் ஆசிரியரை ஒரு மன்னர் என்று விவரித்திருப்பது உட்படப் பெருமாள் முருகன் சுட்டிக்காட்டிய பிழைகளையும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது.

இந்த அபத்தங்கள் எச்சரிக்கை மணியை அடித்தன. இந்தப் புத்தகங்கள் வாசகர்களை எப்படிச் சென்றடைந்தன என்பதைக் கொள்முதல் ஆவணங்கள் விளக்கக்கூடும்.

எஃப்.ஐ.ஆர் யாரைப் பொறுப்பாக்குகிறது?

அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகிய இரண்டு பதிப்பகங்களின் உரிமையாளரான ஆர். மோகன் மற்றும் பொது நூலக இயக்ககம், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், பெரியார் அறிவுலகம் ஆகியவற்றின் அடையாளம் தெரியாத அதிகாரிகள் மற்றும் அடையாளம் காணப்படாத பிற நபர்களின் பெயர்களை எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

சதித்திட்டம், மோசடி, நம்பிக்கை துரோகம், ஆவணங்களைப் போலியாகத் தயாரித்தல், ஊழல் மற்றும் பதிப்புரிமை (Copyright) மீறல் தொடர்பான சட்டப்பிரிவுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

முக்கியமாக, இதில் எந்தவொரு அமைச்சரோ அல்லது மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியோ குற்றவாளியாகச் சேர்க்கப்படவில்லை. புத்தகங்களைப் பரிந்துரைத்த அனைத்து வல்லுநர்களையும் இது குற்றம் சாட்டவில்லை. நவம்பர் 18, 2025-ல் இயக்குநரின் செயல்முறைகளின்படி அமைக்கப்பட்ட எஸ். காமாட்சி, வி. தினேஷ் குமார், எஸ். சந்தான கார்த்திகேயன் மற்றும் எஸ். சந்தான கிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழுவை இது அடையாளம் காட்டுகிறது. அவர்களின் குழுப் பொறுப்புகளைக் குறிப்பிடுவது என்பது, அவர்களைத் தனிப்பட்ட முறையில் குற்றவாளிகளாகப் பெயரிடுவதிலிருந்து வேறுபட்டது.

அதிகாரிகளும் விநியோகஸ்தர்களும் "ஒருவருக்கொருவர் கூட்டுச் சேர்ந்து செயல்பட்டனர்" என்பதே மையக் குற்றச்சாட்டாகும்.

இந்தப் புத்தகங்கள் எப்படி அமைப்புக்குள் நுழைந்தன?

எஃப்.ஐ.ஆர் இது குறித்துத் துல்லியமான விவரத்தை அளிக்கிறது: "புத்தகப் பரிந்துரைக் குழு சுமார் 26,000 புத்தகங்களைப் பரிந்துரைத்தது." அதன்பிறகு, அந்தக் குழு பரிந்துரைக்காத பதிப்பாளர்களின் புத்தகங்களை ஒருங்கிணைப்புக் குழு சேர்த்து, தேர்வுக் குழுவின் முன் வைத்துள்ளது.

"தொடர்புடைய குறிப்புக் கோப்பில் இந்தச் சேர்க்கைகள் குறித்து ஒருங்கிணைப்புக் குழு குறிப்பிடவில்லை." வல்லுநர்களின் ஆலோசனைக்கும் நிர்வாகச் செயல்பாட்டிற்கும் இடையே நடந்த அத்துமீறல் இதுவே எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், ஒவ்வொரு புத்தகமும் பரிந்துரைக் குழுவின் ஆய்வுக்கு உட்படாமலேயே, பரிந்துரை செயல்முறையின் அங்கீகாரத்தைப் பெற்றது போன்ற தோற்றத்தைத் தேர்வுப் பட்டியல் பெற்றிருக்கலாம்.

அடுத்தடுத்த கட்டங்களிலும் இந்தப் பிரச்னை கண்டறியப்படவில்லை என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். ஜனவரி 9, 2026-ல் தேர்வு நடைபெற்றது, ஜனவரி 24-ல் விலை பேச்சுவார்த்தையும், பிப்ரவரி 5-ல்உயர்மட்டப் பரிசீலனையும் நடந்துள்ளது. பிப்ரவரி 7 முதல் கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டன. அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கான ஆணைகள் முறையே பிப்ரவரி 14 மற்றும் 13 ஆகிய தேதிகளில் இடப்பட்டுள்ளன.

போலி புத்தகங்களைத் தயாரித்தது யார்?

எஃப்.ஐ.ஆர் தகவலின்படி, மோகன் அடிப்படையில் 'டெஸ்க்டாப் பப்ளிஷிங்' (டி.டி.பி) பணிகளில் ஈடுபட்டவர். அகல்விளக்கு மற்றும் பீனிக்ஸ் ஆகியவை 'சிக்மா பிரிண்ட்ஸ்' மற்றும் 'சிக்மா பப்ளிஷிங் சர்வீசஸ்' என்ற நிறுவனங்கள் இயங்கிய அதே மடிப்பாக்கம் முகவரியிலிருந்தே செயல்பட்டுள்ளன. அவர் அகல்விளக்கு பெயரில் 2,339 தலைப்புகளையும், பீனிக்ஸ் பெயரில் 99 தலைப்புகளையும் சமர்ப்பித்துள்ளார். 1,857 புத்தகங்களுக்குக் கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது; தொடர்ந்து 1,779 அகல்விளக்கு புத்தகங்களின் பட்டியல் பணப்பட்டுவாடா நடைமுறைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

இணையதளங்கள் மற்றும் 'சாட்ஜி.பி.டி' (ChatGPT) உள்ளிட்ட ஆன்லைன் செயலிகளிலிருந்து தகவல்களை எடுத்து, கற்பனையான பெயர்களில் மோகன் புத்தகங்களை உருவாக்கியதாக விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவற்றின் உள்ளடக்கம் "தெளிவற்றதாகவும், தொடர்பற்றதாகவும், தவறாக வழிநடத்துவதாகவும், தரமற்ற மொழிநடையிலும்" இருந்ததாக விவரிக்கப்பட்டுள்ளது.

எழுத்தாளர்களின் பட்டியல் அசாதாரணமான உற்பத்தித் திறனைக் காட்டியது. தொடர்பில்லாத பல்வேறு துறைகளில் "மோனிகா ரவி" 162 புத்தகங்களையும், "லட்சுமி மோகன்" 124 புத்தகங்களையும், "தாமரை பன்னீர்" 123 புத்தகங்களையும், "தாமரை முரளி" 115 புத்தகங்களையும், "ஜோதி ஹரிஹரன்" 114 புத்தகங்களையும் எழுதியதாக எஃப்.ஐ.ஆர் குறிப்பிடுகிறது.

இரண்டு பதிப்பகங்களிலும் 74 எழுத்தாளர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ‘டீப்ஃபேக்ஸ்: தி கம்மிங் இன்ஃபோகாலிப்ஸ்’ (Deepfakes: The Coming Infocalypse) என்ற புத்தகம் அகல்விளக்கு பதிப்பகத்தில் "மனிஷா சரவணன்" என்ற பெயரிலும், பீனிக்ஸ் பதிப்பகத்தில் "சாருலதா விவேக்" என்ற பெயரிலும் வெளிவந்துள்ளது. இதன் அசல் ஆசிரியர் நினா ஷிக் (Nina Schick) என்பதை எஃப்.ஐ.ஆர் அடையாளம் கண்டுள்ளது. புனையப்பட்ட யதார்த்தங்களைப் பற்றிய ஒரு புத்தகத்திற்கு, புனையப்பட்ட எழுத்தாளர் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

மேலும், "எமிலி லாசன்" எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள ‘டூரிசம்: பிரின்சிபல்ஸ், பிராக்டிசஸ் அண்ட் பிலாசபிஸ்’ (Tourism: Principles, Practices and Philosophies) என்ற புத்தகத்தில் காப்பியடிக்கப்பட்ட உள்ளடக்கங்கள், போலி எழுத்தாளர் இணையதளம் மற்றும் போர்ட்டலில் பொருந்தாத ஐ.எஸ்.பி.என் எண் ஆகியவை இருப்பதையும் எஃப்.ஐ.ஆர் சுட்டிக்காட்டியுள்ளது.

இதைத் தடுத்திருக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் என்ன?

மார்ச் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிப்படையான புத்தகக் கொள்முதல் கொள்கையின்படி, ஐ.எஸ்.பி.என் எண்கள் மற்றும் பாட வல்லுநர்களின் மதிப்பீடு கட்டாயமாக்கப்பட்டிருந்தது என்று எஃப்.ஐ.ஆர் கூறுகிறது. காகிதம், அச்சிடுதல், பைண்டிங், ராயல்டி, மொழிபெயர்ப்பு மற்றும் பதிப்பாளரின் லாபம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, புத்தகத்தின் வகைப்பாட்டின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் இயக்குநரகத்தின் விதிகள் கூறுகின்றன. அச்சிடப்பட்ட அட்டை விலையை மட்டுமே வைத்துத் தன்னிச்சையாகச் செலவினங்களைத் தீர்மானிக்கக் கூடாது.

பரிந்துரை, தேர்வு, பேச்சுவார்த்தை, ஒப்புதல், கொள்முதல் ஆணை, பெறுதல், சரிபார்த்தல் மற்றும் பணப்பட்டுவாடா ஆகிய எட்டு சோதனை நிலைகளை எஃப்.ஐ.ஆர் சுட்டிக்காட்டி, "இந்த இரண்டு பதிப்பகங்களின் பட்டியல்களும் எந்த ஆய்வும் இன்றி ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன" என்று கூறியுள்ளது. பெரியார் அறிவுலகத்தின் புத்தகங்கள் மற்றும் மின்-புத்தகங்களுக்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.30 கோடி முன்பணத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த ஒதுக்கீடுகள் இழப்பாகக் கருதப்படவில்லை. இரண்டு பதிப்பகங்களுக்கும் வழங்கப்பட்ட ரூ.1.74 கோடியை எஃப்.ஐ.ஆர் தனியாக அடையாளம் காட்டியுள்ளது.

நீதிமன்றமும் அரசும் எடுத்த நடவடிக்கை என்ன?

லஞ்ச ஒழிப்புத்துறை நவம்பர் 7-ம் தேதி தனது விரிவான விசாரணையைத் தொடங்கியது. ஜூன் 2024-ல் பிறப்பிக்கப்பட்ட கொள்முதல் வழிகாட்டுதல்கள் மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் புகாரை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 10-ம் தேதி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவும், வங்கிக் கணக்குகளை முடக்கவும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. "நடிகர்கள் மாறுகிறார்கள், ஆனால் செயல்கள் மாறுவதில்லை" என்று நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் எம்.டி. சுமதி ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, ரூ.22 லட்சம் பணம் இருந்த 3 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 15-ம் தேதி எஸ். காமாட்சி, தினேஷ் குமார், வி. சந்தானகிருஷ்ணன், எஸ். சந்தான கார்த்திகேயன் மற்றும் தலைமைக் கணக்கு அதிகாரி ஜே. ஜூலியட் ஆகிய 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

தனிநபர்களுக்கு எதிரான முடிவுகளை நிறுத்திவைத்த நீதிமன்றம், பொறுப்புக்கூறலை வலியுறுத்தியது. பதிவு செய்யப்படாத சேர்க்கைகள், அதைத் தொடர்ந்து வழங்கப்பட்ட ஒப்புதல்கள் மற்றும் பணப்பட்டுவாடா என்ற நிரூபிக்கக்கூடிய குற்றச்சாட்டை எஃப்.ஐ.ஆர் இப்போது முன்வைத்துள்ளது.

தி.மு.க-வுக்கு இது அரசியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துவது ஏன்?

இந்தக் கொள்முதல் ஊழலை அம்பலப்படுத்தியதற்காகப் பெருமாள் முருகனை முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான சி. ஜோசப் விஜய் பாராட்டியுள்ளார். "தி.மு.க சற்று வித்தியாசமான முறையில் ஊழல் செய்துள்ளது; கோயம்புத்தூரின் பெரியார் அறிவாலயத்தையே (அறிவுலகம்) ஊழல் உலகமாக மாற்றியுள்ளது" என்று முதலமைச்சர் கூறினார்.

எழுத்தாளர்களை வளர்த்தெடுத்து, இலக்கியத்தைக் கொண்டாடி, அண்ணா நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட பெரிய நூலகங்களைக் கட்டிய முந்தைய தி.மு.க ஆட்சியைக் குறிவைத்துப் பேசிய அமைச்சர் ஏ. ராஜ்மோகன், இதை ஒரு "கருத்தியல் தோல்வி" என்று விமர்சித்துள்ளார். அறிவின் மீதான தனது காதலை வெளிப்படுத்த தி.மு.க நூலகங்களைக் கட்டியது; ஆனால் அந்தக் காதலை எப்படிப் பணம் கறக்கும் ரசீதுகளாக மாற்றுவது என்பதை யாரோ கண்டுபிடித்துவிட்டதாகத் தெரிகிறது.

உயர்மட்டத்தில் இருந்தவர்கள் இந்தப் புத்தகங்களைப் படிக்கத் தவறினார்களா அல்லது கோப்புகளைப் படிக்க விரும்பவில்லையா என்பதை இப்போது விசாரணை நிலைநாட்ட வேண்டும். சுதந்திரமான விசாரணை கோரியுள்ள தி.மு.க, இதில் அரசியல் ஆதாயம் தேடப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளது. நூலகங்களைக் கட்டிய அதன் பாரம்பரியம், கொள்முதல் குறித்த கேள்விகளுக்குப் பதிலாகாது. அதேநேரம், சந்தேகத்திற்குரிய கொள்முதல்கள் அந்த நிறுவனங்களின் மதிப்புமிக்க புத்தகத் தொகுப்புகளை அழித்துவிடாது. பட்டியல்களை மாற்றிப் பணப்பட்டுவாடாவுக்கு வழிவகுத்தது யார் - அரசியல் தலைவர்களா அல்லது அமைப்பைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சக்திவாய்ந்த அதிகாரியா என்பதைக் கண்டறிவதே புலனாய்வாளர்களின் முன் உள்ள பணியாகும்.


source https://tamil.indianexpress.com/explained/tamil-nadu-library-scandal-fake-authors-ai-books-dvac-fir-periyar-arivulagam-dmk-12817759