புதன், 12 மார்ச், 2014

மருத்துவக் கட்டுரை – குருதி நச்சூட்டு



 டாக்டர் ஜி. ஜான்சன்

 Septicaemia என்பது குருதி நச்சூட்டு அல்லது குருதி நச்சேற்றம். குருதி என்பது இரத்தம் என்பதையும் நச்சு என்பது நஞ்சு அல்லது விஷம் என்பதையும் நாமறிவோம்.
 இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்க முடியும் என்ற வினா எழுவது இயல்பே! விஷம் குடித்து அல்லது பாம்பு, தேள் கடித்து விஷம் ஏறி உயிர் போவதையும் அறிவோம். ஆனால் இவை ஏதும் இல்லாமல் இரத்தத்தில் எப்படி நஞ்சு கலக்கும்?

 இது வேறு விதமான நஞ்சு. இந்த நஞ்சு நோய்க் கிருமிகளால் உண்டாகும் நஞ்சு. இந்த நஞ்சு இரத்தத்தில் கலப்பதையே குருதி நச்சூட்டு என்கிறோம்.

 உடலின் எதிர்ப்புச் சக்தி நோய்க் கிருமிகளின் வளர்ச்சியைத் தடை செய்யத் தவறினால் அல்லது, மருத்துவ சிகிச்சையால் குணப்படுத்த முடியாவிடில் அவற்றால் உட்பத்தியாகும் நஞ்சு இரத்தத்தில் கலந்து நச்சு அதிர்ச்சியை ( septic shock ) உண்டுபண்ணி உயிருக்கு ஆபத்தை உண்டுபண்ணுகிறது.

 இது பெரும்பாலும் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களையும் , அல்லது வேறு நீண்ட கால நோய்களால் ( chronic illness ) உடலின் எதிர்ப்புச் சக்தி குறைவு பட்டவர்களையும் எளிதில் தாக்குகிறது. இதற்கு உடனடி தீவிர சிகிச்சை இன்றியமையாதது.

 குருதி நச்சூட்டு உண்டாக்கும் சில காரணங்கள்

 உடலின் எந்தப் பகுதியிலிருந்தும் நோய்க் கிருமிகள் இரத்தத்தில் கலப்பதே குருதி நச்சூட்டுக்கு முதல் காரணம் எனலாம். கிருமிகளால் வெளியேறும் நஞ்சும், அதை எதிர்க்க உடலின் எதிர்ப்புச் சக்தியிலிருந்து வெளியேறும் உள்நச்சும் ( endotoxin ) திசுக்களுக்குத் தேவையான இரத்த ஓட்டத்தைத் தடைப் பண்ணி குளிர்க் காய்ச்சல் உண்டாகி குருதி அதிர்ச்சியை உண்டுபண்ணுகிறது.

 இது பெரும்பாலும் அறுவைச் சிகிச்சைக்குப்பின் கிருமித் தோற்றால் உண்டாகும் என்பது உண்மையானாலும் , இதர பல காரணங்களாலும்கூட இது உண்டாகலாம். தீக் காயங்கள், இதர காயங்கள், சிறுநீர் கிருமி தோற்று, நிமோனியா, சீழ்க் கட்டிகள், பல் சீழ் கட்டி, பல் ஈர் பிரச்னை போன்றவை சில உதாரணங்கள்.

 தற்போது மருத்துவமனைகளில் குருதி நச்சூட்டு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் புதிய சக்திவாய்ந்த நோய்க்கிருமிகள் உருவாகி சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலை உருவாகியுள்ளதே.

 இவை தவிர சூடாக்காத பால் ( unpasteurized milk ) , சில மிருதுவான பாலாடைக் கட்டி ( soft cheese ) போன்றவற்றில் உள்ள பாக்டீரியா லிஸ்டரீயா மோனோசைட்டோஜீன்ஸ் ( Bacteria Listeria Monocytogenes ) என்ற கிருமியாலும் குருதி நச்சூட்டு உண்டாகலாம்.

 சிப்பி ( oyster ) போன்ற கடல் வாழ் சில உயிரினங்களில் ஊள்ளபாக்டீரியம் விப்ரியோ உல்னிபிகஸ் ( Bacterium Vibrio Vulnificus ) என்ற கிருமி உள்ளதால், இவற்றை கல்லீரல் வியாதி உள்ளவர்கள் உட்கொண்டால் குருதி நச்சூட்டு உண்டாகலாம்.

 பரிசோதனைகள்

 இரத்த நச்சூட்டு என்று சந்தேகப்பட்டால் இரத்தப் பரிசோதனை மூலம் கிருமியைக் கண்டுபிடிக்கலாம். இரத்த நச்சூட்டு ஆபத்தானது என்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளவேண்டும்.

 சிகிச்சை

 குருதி நச்சூட்டு நிரூபிக்கப்பட்டால் அந்த கிருமிகளுக்கு ஏற்ப மருந்துகள் தரப்படும். பெனிசிலின் ( Penicillin ), செபலோஸ்போரின் ( சேபாலோஸ்போரின் ) போன்ற மருந்துகள் இரத்தக் குழாய் மூலம் செலுத்தப்படும்.

 தடுப்பு முறைகள்

 * வாய்க்குள் தொற்று ஏற்பட்டால் பல் மருத்துவரைப் பார்த்து முறையான சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

 பல் தொடர்புடைய சீழ் கட்டிகள் உள்ளதா என்பதைக் கண்டுபிடித்து சிகிச்சை பெறவேண்டும். லிஸ்ட்டரின் அல்லது லேசான சுடுநீரில் உப்பு கலந்து கொப்பளிக்க வேண்டும்.

 * உடலின் எங்காவது சீழ் கட்டிகள் இருந்தால் உடன் மருத்துவரைப் பார்த்து சீழை வெளியேற்ற வேண்டும்.