/indian-express-tamil/media/media_files/2026/03/12/ship-2026-03-12-14-25-01.jpg)
சவுதி, கத்தார் உள்ளிட்ட அரபு நாடுகளிடம் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவை வருகிறது. இந்த ஹோர்முஸ் நீரிணை ஈரானுக்கு சொந்தமானது. தற்போது ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருவதால் ஈரான் இந்த நீரிணையை மூடியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நீரிணையை கடக்கும் கப்பல்களை குறிவைத்து தாக்கி வருகிறது.
உலகளவில் கச்சா எண்ணெய், எரிவாயு வர்த்தகத்தில் 20 சதவீதம் இந்த ஹோர்முஸ் நீரிணை வழியாக தான் நடக்கும். குறிப்பாக இந்தியா, சீனா உள்பட நம்மை சுற்றிய பிற நாடுகளுக்கு இந்த ஹோர்முஸ் நீரிணை கடல்பாதை மிகவும் முக்கியமானதாகும். ஏனென்றால் ஈராக், சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்த வழியாக தான் நம் நாட்டுக்கு கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்டவை வரும்.
இந்நிலையில் தான் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கொடியுடன் செல்லும் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி வழங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பா போன்ற நாடுகளின் கப்பல்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் கூறப்படுகிறது
முதற்கட்டமாக 'புஷ்பக்' மற்றும் 'பரிமல்' ஆகிய இந்திய எண்ணெய் கப்பல்கள் பாதுகாப்பாக ஹோர்முஸ் நீரிணையை கடந்துள்ளன என்று கூறப்படுகிறது.
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களை அனுமதித்த போதிலும், ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயலும் கப்பல்கள் அதன் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் அவை குறிவைக்கப்படலாம் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான லிபோரியாவின் கொடியுடன் மார்ச் 1-ஆம் தேதி ஹோர்முஸ் நீணையில் இருந்து புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல் தற்போது மும்பை துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்துள்ளது. மும்பை துறைமுகத்தில் அந்த கப்பல் நிறுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது எனவும் அதன் கேப்டன் இந்திய மாலுமி என்பதையும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்திய சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டதாக இந்திய தரப்பில் கூறப்பட்ட தகவலுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.





